‘மொழி ஆளுமை அவசியம்’ | Kalvimalar - News

‘மொழி ஆளுமை அவசியம்’

எழுத்தின் அளவு :

‘இந்த கடை டீதான் பிரமாதமாக இருக்கும்’ என பில்ட் அப் கொடுத்து, அழைத்து செல்கிறார் நண்பர். கடைக்காரர் கொடுத்த கோப்பையை ஆவலுடன் வாங்குகிறீர்கள். கோப்பை ஓரத்தில் உடைந்திருக்கிறது. வெளிப்புறம் அழுக்காக இருக்கிறது. கைப்பிடி உடைந்திருக்கிறது.

‘சூடு ஆறதுக்குள்ள குடிடா’ என நண்பர் கூறுகிறார். அந்த பிரமாதமான தேனீரைக் குடிக்க முடியவில்லை. கீழே வைத்துவிடுகிறீர்கள்.

இன்றைய இளைய தலைமுறையின் பிரச்னையே, இந்த உடைந்த அழுக்கான கோப்பை தான். படித்த உயர்கல்வி என்பது ஊரிலேயே பிரமாதமான தேனீர். மறுக்கவில்லை. ஆனால் ஊற்றிக் கொடுக்கும் கோப்பை உடைந்திருக்கிறது. அழுக்காக இருக்கிறது.

கோப்பை சரியில்லை என்றால், டீ விலை போகாது. மொழியின் மேல் ஆளுமை இல்லையென்றால், பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியிருந்தால் கூட, வேலைக்கு ஆகாது.

சென்னை பல்கலையில் எம்.பில்., முடித்து, முனைவர் படிப்புக்காக அமெரிக்கா செல்ல விண்ணப்பித்திருந்தான். அவனை நேர்காணல் செய்த அமெரிக்க பெண் ‘எம்.பில்., படிப்பில் எதைப்பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதினீர்கள்’ என கேட்டார்.

மாணவன் எதையோ சொன்னான். ‘அதைப்பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுங்களேன்’ என்றார். மாணவனால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. தேனீர் சூப்பர்தான். ஆனால் கோப்பை சரியில்லை.

மொழியின் மேல் ஆளுமை வேண்டும் என வலியுறுத்தும்போது, ஆங்கிலத்தையே குறிப்பிடுகிறேன். நல்ல வேலை, வெளிநாட்டில் வேலை வேண்டுமெனில், ஆங்கில ஆளுமை அவசியம்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி. சொல்லப் போனால் கற்க சுலபமான மொழி. ஆனால் பள்ளியிலும், கல்லுõரியிலும் கற்பிக்கும் முறை சரியில்லை. ஆங்கிலத்தை தமிழ் மூலம் கற்பிக்கிறார்கள்.

அடுத்து நாம் செய்யும் தவறு, ஆங்கிலத்துக்கு அளவுக்கு மேல் முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கிறோம். அதனால் தான் சரியாக கற்க முடிவதில்லை.

நேர்காணலில் ஒரு பெண்ணிடம் ‘உன் ஆங்கிலம் சரி இல்லையே’ என கூறினேன். ஆங்கில பேச்சுப்போட்டியில் அவள் வாங்கிய சான்றிதழ்களை கண்பித்து, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

சரளமாக ஆங்கிலம் பேசுவது என்பது பேச்சுப் போட்டியில் பேசுவது இல்லை. ஏற்கனவே தயாரித்து மனப்பாடம் செய்த பேச்சை உணர்ச்சியோடு கொட்டி பரிசை வாங்கலாம். புதிதாக சந்திக்கும் நபரிடம் இயல்பாக ஆங்கிலம் பேசுவதற்குத்தான் பயிற்சி வேண்டும்.

ஆங்கிலம் சரியில்லை என கூறினால், ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும்? ஆங்கிலம் பேசத் தெரியாததை ஏன் அவமானமாக கருத வேண்டும்? ஊர்ப்பக்கங்களில் ஆங்கிலம் தெரியாதவர்களைத்தான் கேலி செய்வர். என்னை கேட்டால் தமிழகத்தில் பிறந்து தமிழில் பேச, எழுத தெரியாதவர்களைத்தான் கேலி செய்ய வேண்டும்.

தமிழைப் போல் ஆங்கிலத்தை அழுத்தம் திருத்தமாகப் பேகூடாது. மென்மையாக கூடிய வரையில் நுனி நாக்கிலேயே பேச வேண்டும். சிலர் ஆங்கிலம் பேசும் போது, அதட்டலுடன் பேசுவார்கள். அதுவும் தவறு. பேசும் ஆங்கிலம் மற்றவருக்கு புரியவில்லை எனில் மீண்டும் சொன்னதையே சத்தமாக சொல்லக் கூடாது. வார்த்தைகளை மாற்றிப்போட்டு வேறுமாதிரி சொல்ல வேண்டும்.

‘ஆங்கிலம் பேசினால் சரியாக பேசுவேன்; இல்லாவிடில் பேசமாட்டேன்’ என பலர் இருக்கிறார்கள். அவர்கள் கடைசி வரை பேசுவதேயில்லை. சிலர் முதலில் தப்புதப்பாக பேசுவார்கள். அவர்களை கேலி செய்வோம். ஆனால் சில மாதங்களிலேயே, தவறுகளை திருத்திக் கொண்டு சரியாக பேச ஆரம்பித்துவிடுவார்கள். நாமோ கடைசிவரை ஆரம்ப கட்டத்திலேயே இருப்போம்.

ஒரு மொழியில் ஆளுமை என்பது, அந்த மொழியிலேயே நம்மால் சிந்திக்க முடிவதுதான். அதற்கு ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும். ஆங்கிலப் படங்கள் பார்க்க வேண்டும். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும்.

- வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us