பாரம்பரியமும்... நவீன தொழில்நுட்பமும்... | Kalvimalar - News

பாரம்பரியமும்... நவீன தொழில்நுட்பமும்...மார்ச் 28,2022,09:14 IST

எழுத்தின் அளவு :

சமீபத்திய நீண்டகால ஊரடங்கு நமக்கு பல்வேறு படிப்பினைகளையும், மாற்றத்தையும் வழங்குயுள்ள நிலையில், கல்வி முறையிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை! 



இரண்டும் முக்கியம்



பாரம்பரிய வகுப்பறை வழி கல்வி முறையில் இருந்து திடீரென நவீன தொழில்நுட்பங்கள் வாயிலான கல்வி முறைக்கு பழக்கப்பட்டோம். பெருந்தொற்று வெகுவாக குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தருவாயில் மீண்டும் பாரம்பரிய கல்வி முறையை முழுவதுமாக பயன்படுத்து ஏற்புடையதல்ல. அதேபோல், நவீன தொழில்நுடங்கள் வாயிலான கல்வி முறையையும் முழுவதுமாக பயன்படுத்துவதும் சரியல்ல. இரண்டு கல்வி முறைகளிலும் நிறை, குறை உள்ளன.



நவீன தொழில்நுட்பங்கள் கல்வி முறையை அடுத்த நிலைக்கு கொண்டுசென்றுவிட்டது. என்றபோதிலும், ஆன்லைன் வழிக் கற்றலில், வகுப்பறை வழி கற்றலில் உள்ளது போன்ற கலந்துரையாடல், குழு செயல்பாடு போன்றவற்றின் வாயிலான திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்பு வெகு குறைவு. 



இத்தகைய சூழலில், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பாரம்பரிய கல்வி முறையையும், நவீன கல்வி முறையையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்ததாக அமையும். விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றிலான ஈடுபாட்டிற்கும் மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 



ஆசிரியர்களின் பங்கு



டிஜிட்டல் நூலகம் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் மத்தியில் பெரியளவில் பயன்படுத்தப்படாத நிலையில், சில ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. முன்பு ஆன்லைன் வாயிலான கருத்தரங்குகளை மாணவர்கள் விரும்பாத நிலையிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலான வகுப்புகளிலும் திறம்பட கல்வி கற்க கற்றுக்கொண்டுவிட்டனர். புதியவற்றை பயன்படுத்துவதில் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துவருவதை உணர முடிகிறது. 



மாணவர்களாக தேடி சென்று அறிந்து, ஆராய்ந்து, அறிவை விருத்தி செய்துகொள்ளும் இச்சூழலில் ஆசிரியர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்வது மிக மிக அவசியமாகிறது. பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும். தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளாமல் ஆசிரியர்களால் வகுப்பறைகளில் திறம்பட செயல்பட முடியாது. பாடப்புத்தகத்தை மட்டுமே பார்த்து கற்பிக்கும் நிலை இனிமேல் எடுபடாது. 



உதாரணமாக, கம்ப்யூட்டர் ஆசிரியர் முதலில் அவரது துறை சார்ந்து நவீன தொழில்நுட்ப படிப்புகளை தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களது சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும், அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் முடியும். இரண்டாவதாக, அவரது துறை மட்டுமின்றி இதர துறை சார்ந்த திறன்களையும், அறிவையும் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 



ஏனெனில், ஆசிரியர்களை விட, மாணவர்களுக்கு ஆன்லைன் அதிகம் கற்றுக்கொடுத்துவிடும். ஒவ்வொரு மாணவரும் சாதனை படைக்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை நிச்சயம் உண்டு. அவற்றை சரியாக அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்துவம் ஆசிரியர்களது பிரதான கடமை.



-கிருஷ்ணகுமார், செயலர், நேரு கல்வி நிறுவனங்கள், கோவை




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us