ஸ்டிக்கர் ஒட்டும் மாநில கல்வி கொள்கை குழு! | Kalvimalar - News

ஸ்டிக்கர் ஒட்டும் மாநில கல்வி கொள்கை குழு!ஏப்ரல் 16,2022,21:02 IST

எழுத்தின் அளவு :

தமிழக பள்ளி கல்வித்துறையின் உள்கட்டமைப்பில் அடிப்படைத் தேவைகளை தீர்த்து வைப்பதற்கு, பல பிரச்னைகள் இருக்கும்போது, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையுடன், தமிழக அரசு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறது.



கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சி காலங்களில், கல்வித்துறையில் பல்வேறு வகை அரசியல் புகுந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்ட, தேசிய அளவிலான கல்விக் கொள்கையை மாற்றி, கல்வியாளர்கள் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைப் பெற்று, புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 



இந்த கொள்கையை, தமிழக அரசு முற்றிலுமாக புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, அதில் உள்ள அம்சங்களை மட்டும், பல்வேறு திட்டங்களின் பெயரில் அமல்படுத்தி வருகிறது. மேலும், மாநிலத்திற்கு தனி கல்விக் கொள்கையை வகுப்போம் என்று கூறி ஒரு குழுவை அமைத்துள்ளது. 



பள்ளிக் கல்வியில் இருந்து ஒருவரும், உயர் கல்வியில் இருந்து ஒருவரும் தவிர, கல்வித்துறை சார்ந்தவர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை. கல்வியாளர்களை புறந்தள்ளிவிட்டு, சிறந்த கல்விக் கொள்கையை ஒரு நாளும் உருவாக்க முடியாது. இந்த கல்வி கொள்கைக்கு தற்போதைய தேவை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.



மத்திய கொள்கை அமல்



தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம், புதிய கல்விக் கொள்கையில் இருந்து அமல்படுத்தப்பட்டதாகும். பள்ளியில் இடைநிற்றலை குறைப்பதற்காக தன்னார்வலர்கள் கொண்ட குழுக்களை அமைத்து, மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுஉள்ளது. மாலை நேரங்களில், பள்ளி வளாகத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார். 



இதுவும், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சம். முக்கிய பாடங்கள் தவிர, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விருப்ப பாடமாக ஒன்றை எடுத்துப் படிக்கலாம் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது. அதை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டு, 10, 12ம் வகுப்புகளின் பொது தேர்வு அட்டவணையில் விருப்ப பாடத்தை சேர்த்துள்ளது. 



ஆறு முதல் 8ம் வகுப்பு வரை அந்தந்த பகுதியில் உள்ள தொழில்களில், அவர்களுக்கு பிடித்தவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு தரப்படும் என, தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. இதை குலக்கல்வி என்று மறுத்துவிட்டு, தற்போது சொந்த ஊர்களில் உள்ள தொழில்களை அறிந்து கொள்ள, மாணவர்களுக்கு வட்டார தொழில் பற்றிய அறிமுகம் வழங்கப்படும் என, தமிழக அரசு கூறியுள்ளது.




காப்பி அடிப்பு



மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளிகளை அமைத்து, அதன் வெற்றியின் அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறியது. அதையேதான் டில்லி சென்று திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்' என்று கூறியுள்ளார்.



பல மொழிகளில் உள்ள புத்தகங்களை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து அறிவியல் தொழில்நுட்பம், மொழி ஆளுமைகளை கற்றுத் தரவேண்டும் என்கிறது தேசிய கல்வி கொள்கை. பிற மொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க, நிதி ஒதுக்கி உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. கட்டாய கல்வி சட்டம் 8ம் வகுப்பு வரை உள்ளது; புதிய கல்வி கொள்கையில் பிளஸ் 2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 



இதை, மாநில கல்வி கொள்கை ஏற்றால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றதாக அர்த்தமாகும். இல்லாவிட்டால், 8ம் வகுப்புக்கு மேல் இடைநிற்றல் ஏற்பட்டால், அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.




தாய்மொழி கல்வி



'தாய் மொழி அவசியம், தமிழ் மொழி எங்கள் மூச்சு' என்று பேசுவது உண்மை என்றால், தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் தொடக்க கல்வியில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி கட்டாயமாகும். இதை தமிழக அரசு ஏற்க மறுப்பது ஏன்? இதனால், தமிழ் மொழிப்பற்றை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துவது தெளிவாகிறது. 



தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும், மூன்று மொழி திட்டம் அமலாகவில்லை. தனியார் பள்ளிகளில் அந்த வாய்ப்பு கிடைக்கும்போது, அதே வாய்ப்பை கடைக்கோடி கிராமத்தில் உள்ள பிள்ளைக்கும் கிடைக்கச் செய்வதே அரசின் கடமை. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு தர மறுப்பதன் காரணம் என்ன?



மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே புதிய கல்வி கொள்கை கூறுகிறது. என்ன கற்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய பள்ளிக் கல்வித்துறையும், பல்கலைகளின் கல்விக்குழு, ஆட்சிக்குழு போன்றவையும் உள்ளன. எனவே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மேலான, ஒரு கல்வியை தமிழக அரசு தருவோம் என்பது சாத்தியமில்லாதது.




ஸ்டிக்கர் ஒட்ட குழு



தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது; ஆனால், போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கழிவறைகளை சுத்தம் செய்ய துாய்மைப் பணியாளர்கள் இல்லை. இதனால் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்து, அவ்வப்போது பிரச்னையாகி விடுகிறது. மாணவியர் மட்டுமின்றி, ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லைகள் அதிகரிக்கிறது. பருவ வயதில் தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க, சுழற்சி முறையிலாவது உளவியல் ஆலோசகர்களை பணி அமர்த்த வேண்டும். 



பல இடங்களில் கட்டடங்கள் உறுதித்தன்மை இல்லாமல், மரத்தடியில் பாடங்கள் நடத்தப்படும் நிலை உள்ளது. இத்தனை அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்ததாலேயே அந்தத் திட்டத்தை எதிர்த்து, பணம் செலவு செய்து, 'ஸ்டிக்கர்' ஒட்ட ஒரு குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன.



இதை கல்வியாளர்கள் கேட்பதை விட, தங்கள் பிள்ளைகளுக்கு அரசு இலவசமாக கல்வி தரவில்லை; மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் தருகிறது என்பதை உணர்ந்து, பெற்றோர்தான் அரசை கேட்க வேண்டும். அப்போதான், இந்த விடியல் அரசில், ஒரு விடிவு காலம் கிடைக்கும்.



- ஆர். காயத்ரி, கல்வியாளர்



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us