தேசிய கல்விக் கொள்கையால் நன்மையே! | Kalvimalar - News

தேசிய கல்விக் கொள்கையால் நன்மையே!அக்டோபர் 14,2022,15:59 IST

எழுத்தின் அளவு :

நமது நாடு முழுவதிலும் தேசிய கல்வி கொள்கை குறித்து பலதரப்பட்ட கருத்து நிலவுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் ஆதரவும், எதிர்ப்பும் என மாறுபட்ட சூழல் காணப்படுகிறது. ஆனால், 'தேசிய கல்வி கொள்கையால் ஏராளமான நன்மைகளே விளையும்’ என்று உறுதியாக கூறும் அளவிற்கு அவற்றில் சாதகமான அம்சங்கள் அடங்கியுள்ளன.



திறன் மேம்பாடு



மாணவர்களை மையப்படுத்தியே அனைத்துவிதமான கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பல்கலைக்கழகங்கள், 45 ஆயிரம் கல்லூரிகளை கொண்ட நமது நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியை ஒவ்வொரு ஆண்டும் எதிர்நோக்குகின்றனர். அதேநேரம், இந்திய கல்வி வரலாற்றில் பட்டம் பெற்றும், ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாதவர்களாக உள்ளதை பார்க்க முடிகிறது. 



இத்தகைய சூழலில், தரமான கல்வியை வழங்கி, பட்டதாரிகளை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் இளநிலை பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்த்தப்படும் இந்த ஓர் ஆண்டில் அனைவரும் தானாக திறன் பெற்றவர்களாக மாறிவிட மாட்டார்கள். ஆனால், திறன் படைத்தவர்களாக மாற்றும் முயற்சியாக உரிய வசதிகளையும், தேவையான பயிற்சிகளையும் சிறந்த தரத்துடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் புதிய கல்வி கொள்கையில் அதிகம் உள்ளன.



பல்துறை வளர்ச்சி



பல்துறை கல்வி திட்டத்தை தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அதன்படி, ஒரு மாணவர் ஒரு துறையில் சேர்க்கை பெற்றிருந்தாலும், அந்த துறை சார்ந்து மட்டுமின்றி, மாணவரது விருப்பத்திற்கு ஏற்ப பிற துறைகளிலும் அறிவை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். அதற்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களும் பல்துறை சார்ந்த படிப்புகளை வழங்குபவையாக தரம் உயரும். இது மிகவும் சாதகமான அம்சமே.




ஆராய்ச்சி 



நாம் வெகுகாலமாக, ஆராய்ச்சி சார்ந்த வளர்ச்சி குறித்தும், அறிவுசார் மேம்பாடு குறித்தும், சர்வதேச அரங்கில் எவ்வாறு இந்தியா திறன்சார் மற்றும் அறிவுசார் முயற்சிகளில் முக்கிய இடத்தை பிடிப்பது என்பது குறித்தும் பேசிவருகிறோம். தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களுக்கு கல்வி நிறுவனங்கள் தீர்வு காண வேண்டும் என்பது குறித்தும், கல்வி நிறுவனங்களில் 'ஸ்டார்ட் அப்’ மற்றும் தொழில்முனைவு குறித்தும் பேசி வருகிறோம். ஆனால், இவை எதுவும் குறிப்பிடும் வகையில் இதுநாள் வரை நடைபெறவில்லை. ஏனெனில், ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி சார்ந்த சூழல்களை கொண்ட பிரதான கல்வி நிறுவனங்களும் நம் நாட்டில் இல்லை. இத்தகைய சூழலில், ஆராய்ச்சிக்கு அதிகமாக நிதி உதவி அளிக்கும் வாய்ப்பு புதிய கல்வி கொள்கையால் சாத்தியம்.



இந்திய கல்வி வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் 70 சதவீதம் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுமார் 70 சதவீத மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே படிக்கின்றனர். ஆகவே, தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கை முக்கிய பங்கை பெற்றுள்ளது. இன்றைய இளைஞர்களே நாளை நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் நிலையில் அவர்களை திறன் படைத்தவர்களாக மாற்றுவதில் தேசிய கல்வி கொள்கைக்கு பிரதான பங்கு உண்டு.



-டாக்டர் சி. ராஜ்குமார், துணைவேந்தர், ஒ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், ஹரியானா.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us