கல்வி செயல்திறனில் பின் தங்கிய தமிழகம்! | Kalvimalar - News

கல்வி செயல்திறனில் பின் தங்கிய தமிழகம்!நவம்பர் 18,2022,15:49 IST

எழுத்தின் அளவு :

மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செயல்திறன் தரக் குறியீட்டு ஆய்வு அறிக்கையின்படி, தமிழகம் கல்வி தரநிலையில் கீழே சென்றுள்ளது. மொத்தம் உள்ள 1000 புள்ளிகளில் 2019-20ம் ஆண்டில் 906 புள்ளிகளை பெற்ற தமிழகம், 2020-21ல் 855 புள்ளிகளை மற்றுமே பெற்று பின் தங்கி உள்ளது!

முக்கியத்துவம்:

மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த ஆய்வு, முறையான கொள்கைகளை உருவாக்குவதும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.



கல்வி அமைப்பில் உள்ள இடைவெளிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுட்டிக்காட்டவும், பள்ளிக் கல்வி முறை அனைத்து மட்டங்களிலும் உயர் தரத்தில் இருப்பதை உறுதிசெய்யவும் இந்த பி.ஜி.ஐ., புள்ளிகள் உதவும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரநிலையைக் குறிக்கும் 'கிரேடிங்’ முறை 2017-18ல் அறிமுகப்படுத்தப்பட்டது.



பி.ஜி.ஐ., என்றால் என்ன?
நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி செயல்பாட்டை, பி.ஜி.ஐ., எனும் செயல்திறன் தரக் குறியீட்டை கணக்கிடுவதின் மூலம் மத்திய கல்வி அமைச்சகம் வெளிக்கொணர்கிறது. மேலும், செயல்திறன் தரக் குறியீடு - பி.ஜி.ஐ., என்பது நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வி முறையின் விரிவான பகுப்பாய்வாகும்.

ஆய்வு முறை:
இதன்படி, கற்றல் விளைவு மற்றும் தரம், எளிதில் அணுகுவதற்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், ஈக்விட்டி மற்றும் அரசாங்க செயல்திறன் ஆகிய ஐந்து களங்களில் உள்ள 70 அம்சங்கள் ஆராயப்பட்டு மொத்தம் 1000 புள்ளிகளுக்கு பி.ஜி.ஐ., கணக்கிடப்படுகிறது. 2020-2021ம் ஆண்டிற்கான பி.ஜி.ஐ., அறிக்கையானது கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு மற்றும் தேசிய சாதனை ஆய்வு உள்ளிட்ட பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகள்:
நாட்டின் முதல் ஏழு செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், சண்டிகர், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்த ஏழு மாநிலங்கள் 901-950 புள்ளிகளுடன் 2வது நிலையில் உள்ளன.

சரிவு
ஆனால், 2019-20ம் ஆண்டில் பி.ஜி.ஐ.,யின் இரண்டாம் நிலையில் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், 2020-2021ம் ஆண்டில் ஈக்விட்டி, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மோசமான மதிப்பெண்களுடன் மூன்றாம் நிலைக்கு சரிந்துள்ளது. 2019-2020ல் 906 ஆக இருந்த ஒட்டுமொத்த புள்ளிகள் 2020-2021ல் 855 ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, எந்த மாநிலமும் 951-1000 புள்ளிகளுக்குள் பெற்று முதல் நிலையை எட்டவில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us