அமெரிக்காவும், சர்வதேச மாணவர்களும்... | Kalvimalar - News

அமெரிக்காவும், சர்வதேச மாணவர்களும்...டிசம்பர் 02,2022,08:45 IST

எழுத்தின் அளவு :

'ஓப்பன் டோர்ஸ்’ அறிக்கையின் படி, 2021-22ம் கல்வியாண்டில் அமெரிக்கா சென்ற சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் குறித்து சென்றவாரம் பார்த்தோம். அந்த அறிக்கையின்படி, சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரத்தை இனி விரிவாக பார்க்கலாம்.

சரிவு

2018-19ம் ஆண்டில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 299 ஆக இருந்த ஒட்டுமொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2020-21ம் ஆண்டில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 95 ஆக குறைந்தது. இதற்கு, கொரானா பெருந்தொற்று, விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளும் சில காரணங்களாலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும், இந்த எண்ணிக்கை 2021-22ம் ஆண்டில் சற்று அதிகரித்து 9 லட்சத்து 48 ஆயிரத்து 519 ஆக உள்ளது. இதன்படி, அமெரிக்கா சென்ற மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

சீனாவை முந்திய இந்தியா

நாடுகளை ஒப்பிட்டோமேயானால், 2020-21ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 299 ஆக இருந்த சீன மாணவர்களின் எண்ணிக்கை 2021-22ம் ஆண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆக குறைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 582 லிருந்து, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு, 2020-21ம் கல்வியாண்டில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற சீனா மாணவர்களின் எண்ணிக்கை 8.6 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அதே ஆண்டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 18.9 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, தென் கொரிய மாணவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 491லிருந்து 40 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கனடா மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 143லிருந்து, 27 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. வியட்நாம் மாணவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 631லிருந்து, 20 ஆயிரத்து 713 ஆக குறைந்துள்ளது.

48.1 சதவீத உயர்வு

2020 - 21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இளநிலை பட்டப்படிப்புகளுக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 16.1 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து 734 லிருந்து 27 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்காக சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 48.1 சதவீதம் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு: www.iie.org/OpenDoors


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us