திரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News

திரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.ஜூன் 27,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொழுதுபோக்குத் துறையின் உலகத் தலைமையகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்தியாவில் இத்துறை பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதை அறிவீர்கள். சாட்டிலைட் ‘டிவி’ மீடியாவின் வளர்ச்சியானது அசுரத்தனமாக உள்ளது. இதையெல்லாம் விட இந்தியத் திரைப்படத் துறையானது விஸ்வரூபம் எடுத்து உயர்ந்திருக்கிறது. ஆக இந்தத் துறையின் ஆதார நாடியாக விளங்குவது ஆர்ட் டைரக்ஷன் என்றால் அது மிகையில்லை.

படம் எடுப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வது, 3டி விசுவல்களை உருவகிப்பது, இயக்குனரோடும் ஒளிப்பதிவாளரோடும் இணைந்து செயல்படுவது, பட்ஜெட்டுக்குள் கதையின் இயல்பான களத்தை வடிவமைப்பது என ஆர்ட் டைரக்ஷன் பணியானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். டைட்டில் போடும் போது ஒரு சில வினாடிகளுக்கு வந்து போகும் எண்ணற்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இதுவும் முதன்மையானது. இத்துறையில் டிப்ளமோ, பிஜி டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2 அல்லது 3 ஆண்டுப் படிப்புகளாக இவை பொதுவாகத் தரப்படுகின்றன. இப்படிப்பினால் பெறும் திறன்களை விட ஒருவருக்கு இயல்பான உந்துதலாகத் தோன்றும் திறன்கள் கொண்டுவரும் படைப்புகள் தான் சிறப்பானவை.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிறுவனங்கள், விளம்பர ஏஜன்சிகள் என ஆர்ட் டைரக்ஷன் அறிந்தவருக்கான வாய்ப்புகள் உள்ளன. இது தவிர மேடை நாடகங்கள் போன்றவற்றிலும் இவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று மிகவும் பிரபலமாக உள்ள ‘டிவி’ ரியாலிடி ஷோக்களில் போடப்படும் செட்கள் திரைப்படங்களில் கூட காண முடிவதில்லை. மேலும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா நிறுவனங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஏற்கனவே பிரபலமாக உள்ள டிசைனர்களிடம் சேர்ந்து புதியவர்கள் தொழில் திறன்களை வளர்த்துக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

புனேயிலுள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புதுடில்லியிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா, கோல்கட்டாவிலுள்ள சத்யஜித்ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், நொய்டாவிலுள்ள ஏசியன் அகாடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவிஷன், சென்னையிலுள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் இதைப் படிக்கலாம். இயல்பிலேயே கிரியேடிவிடி, புதுமை எண்ணம் போன்றவற்றைப் பெற்றிருப்பவருக்கு இது சிறப்பான துறையாகத் திகழும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us