குழந்தையும்... பெற்றோரும்... | Kalvimalar - News

குழந்தையும்... பெற்றோரும்...டிசம்பர் 29,2022,14:34 IST

எழுத்தின் அளவு :

’என் குழந்தைகள் பொறுப்பாகவும், ஊக்கமாகவும், புத்திசாலியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மற்றும் பல நல்ல பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்’ என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர்.



இவ்வாறு நாம் ஒன்றும் அதிகமாக நம் குழந்தைகளிடம் எதிர்பார்க்கவில்லை; அவர்கள் வாழ்க்கையில் நல்லதைச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறோம்... ஆனால் பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விரும்புவதில்லை... அது அவர்களின் நன்மைக்காகவே என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை...



துரதிர்ஷ்டவசமாக, பெற்றோரிடமிருந்து வரும் இந்த எதிர்பார்ப்புகள் குழந்தைகளுடன் மோசமான உறவுக்கு காரணமாகின்றன. இந்த எதிர்பார்ப்புகள் மேலும் வளரும்போது, குழந்தைகளுடன் இடைவெளி அதிகரிக்கிறது. இறுதியில் ஒரு குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினமாகிறது!



படிப்பில் ஆர்வமின்மை, குறைந்த நம்பிக்கை, தோல்வி பயம், கேட்ஜெட் போதை, பேச்சு திறன் பாதிப்பு, விளக்க முடியாத கவலை, கோபம், மன அழுத்தம் என இன்றைய குழந்தைகள் பல விஷயங்களில் போராடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் ஒரு பெற்றோராக நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் மீறி அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்ய வேண்டும்?



குழந்தைகளின் உலகம் பற்றியோ- அவர்களின் ஆர்வங்கள், அவர்கள் படிப்பில் எப்படிச் செயல்படுகிறார்கள், அவர்களது நண்பர்களைப் பற்றியோ தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு, அவர்களுடன் நேரத்தைச் செலவிடவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர வேண்டும். ஒரு பெற்றோராக இது ஒரு சவாலான மற்றும் கடினமான பயணம். ஆனால், அது உண்மையில் பெருமதிப்புக்குரியது!



சக்திவாய்ந்த நுட்பம்



உங்கள் குழந்தைகளுடன் உறவை வலுப்படுத்த போராடும் பெற்றோராக நீங்கள் இருந்தால் அல்லது அவர்களின் வாழ்க்கையில் நல்லதைச் செய்ய அவர்களுக்கு உதவுவதில் சிரமப்படுகிறீர்கள் எனில், பின்வரும் மிகவும் சக்திவாய்ந்த 'நுட்பம்’ ஒன்றை பின்பற்றுங்கள்.



’பில்டிங் ரிலேஷன்ஷிப் பவுண்டேஷன்’ என்று அதற்கு பெயர். தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், உங்கள் குழந்தையைத் தழுவி, முத்தமிட்டு, ’லவ் யூ மை டியர்’ என்று சொல்லுங்கள். பதிலுக்கு, பெரும்பாலான நேரங்களில் உங்கள் குழந்தைகளும் உங்களைத் தழுவி முத்தமிட்டு ’லவ் யூ அம்மா, லவ் யூ அப்பா’ என்று சொல்ல முற்படுவார்கள். இதை செயல்படுத்த ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும். 



ஆனால், இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது. இது உங்கள் குழந்தைகளுடனும் உங்களுக்குள்ளும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை செயல்படுத்துகிறது!



இது மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மேலும், மனதை அமைதியான நிலைக்கு கொண்டு செல்லும். உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இடையேயான ஆரோக்கியமான உறவிற்கு இதுவே முதல் படி!



- ஜலீஷ் ரஹ்மான், பெற்றோர் பயிற்சியாளர்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us