அறிவோம் டேட்டா சயின்ஸ் | Kalvimalar - News

அறிவோம் டேட்டா சயின்ஸ்மே 12,2023,12:59 IST

எழுத்தின் அளவு :

புள்ளி விபரங்கள், கணினி அறிவியல் மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தரவுகளில் இருந்து தேவையான தகவல்களை திரட்டும் ஒரு வேகமாக வளர்ந்து வரும் துறை டேட்டா சயின்ஸ். 




முக்கியத்துவம்:


’டேட்டா’விலிருந்து தகவல்களை பிரித்தெடுக்க புள்ளிவிவர மற்றும் கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்துவதே ‘டேட்டா சயின்ஸ்’ என்றும் சொல்லலாம். இன்றைய நவீன காலத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாத துறைகளே இல்லை. அத்தகைய டிஜிட்டல் யுகத்தில், டேட்டா எங்கும் பரவி உள்ளதோடு, தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வணிகங்கள், அரசாங்கம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு இது ஒரு இன்றியமையாத கருவியாகவும் திகழ்கிறது.



டேட்டா சயின்டிஸ்ட்:


ஹெல்த்கேர், பைனான்ஸ், ரீடெய்ல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் 'டேட்டா சயின்ஸ்’ பயன்படுத்தப்படுகிறது. டேட்டாவை சேகரித்தல், சேமித்தல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விளக்குதல் ஆகியவற்றின் வாயிலாக முடிவுகளை எடுப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது. 



உதாரணமாக, கிரெடிட் கார்டு மோசடி அல்லது காப்பீட்டு மோசடி போன்றவற்றை அடையாளம் காணவும் டேட்டா பயன்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கு ஏற்ப வணிக உத்திகளை வகுக்கவும் இன்று பெரிதும் டேட்டா சயின்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இத்துறை வல்லுனர்கள் ‘டேட்டா சயின்டிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்றனர்.



சிக்கலான, பெரிய டேட்டா தொகுப்புகளை கையாளுவதிலும், பகுப்பாய்வு செய்வதிலும், கண்டறியப்பட்ட தகவல்களைக் கொண்டு வணிக முடிவுகளை எடுப்பதிலும், தயாரிப்புகளை மேம்படுத்துவதிலும் மற்றும் தீர்வு காண்பதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்துறையில் திறமையான நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில்  ‘டேட்டா சயின்டிஸ்ட்’களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 



படிப்புகள்:


சமீபகாலமாக, வாய்ப்புகள் மிகுந்த டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தமிழக கல்லூரிகள் இத்துறை சார்ந்து எட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை இந்த ஆண்டில் மட்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிக்கலாம். பொதுவாக, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினிஅறிவியல் பயின்ற மாணவர்கள் டேட்டா சயின்ஸ் துறையை தேர்வு செய்து படிக்கலாம்.




வேலைவாய்ப்புகள்:


டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்கிடெக்ட், டேட்டா மைனிங் இன்ஜினியர், பிசினஸ் இன்டெலிஜென்ஸ் அனலிஸ்ட் என ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதோடு சில ஆண்டுகள் அனுபவத்திலேயே அதிக வருமானம் வழங்கும் துறையாகவும் 'டேட்டா சயின்ஸ்’ கருதப்படுகிறது. இத்துறைக்கு உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளதால் இத்துறை மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us