வாய்ப்புகள் ஏராளம்! | Kalvimalar - News

வாய்ப்புகள் ஏராளம்!ஜூன் 19,2023,16:47 IST

எழுத்தின் அளவு :

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. வரும் காலங்களில் வேறு சில புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும். இத்தகைய மாற்றம் என்றுமே மாறாதது.

கல்வி நிறுவனங்களின் பங்கு

முன்பு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்பங்களில் பெரிய அளவிலான மாற்றம் நிகழ்ந்த நிலையில், சமீப காலங்களில் 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய மாற்றத்திற்கு கல்வி நிறுவனங்கள் எப்போதும் தயாராக இருத்தல் வேண்டும். தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து, அவர்களை முதலில் தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அடுத்ததாக, ஆய்வகங்கள் உட்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கல்வி நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும்.

பிராதனமாக, தொழில்நிறுவனங்களுடனும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தொழில்துறை மாற்றத்திற்கு ஏற்ப, தொடர்ந்து கல்வி நிறுவனங்களும் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பாடத்திட்டத்தையும் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தி தேவையான புதிய அம்சங்களை புகுத்த வேண்டும்.

தொழில்நுட்பத்தில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், இன்ஜினியரிங் படிப்பிற்கான வாய்ப்புகளுக்கு என்றுமே குறைவு இல்லை. இன்ஜினியர்கள் செய்யும் வேலை முறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். ஆனால், இன்ஜினியர்களுக்கான வேலைவாய்ப்பு என்றுமே இருந்துகொண்டே தான் இருக்கும்.

மாற்றத்திற்கு தயாராகுங்கள்

மாணவர்களும், தொழில்துறை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வளர்ச்சி அடையும் தொழில்நுட்பங்கள் சார்ந்த புராஜெக்ட்களில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு துறை சார்ந்த மாணவர்களும், இதர துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது இன்றைய காலத்தில் மிக அவசியம்.

மெக்கானிக்கல் இன்ஜினியர் மாணவர்களும், சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல்தான், இதர துறை மாணவர்களும், பிற துறைகளில் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு ஹேக்கத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு தொடர் ஊக்கம் அளிக்க வேண்டும்.

சுய கற்றல் திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்று ஏராளமான சிறந்த படிப்புகள் மற்றும் பயிற்சிகள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகின்றன. அனைத்து இன்ஜினியரிங் துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள், தங்களுக்கு ஆர்வமுள்ள துறையை படித்து, திறனை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

-சுதா மோகன்ராம், முதல்வர், ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோவை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us