பிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம்? பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா? | Kalvimalar - News

பிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம்? பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா?ஜனவரி 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரெஞ்சு கல்வியின் சில சிறப்புகள் பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில சேருகிறார்கள். பிரான்சில் உயர் படிப்பு படிக்கும் போது பிரெஞ்சு மொழி தெரிந்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால் இங்கு ஏற்கனவே பயின்ற நமது மாணவர்கள் இதனை பொய்யாக்கி இருக்கிறார்கள். உயர் கல்வி ஆங்கில வழியிலேயே இருப்பதால் நல்ல ஆங்கில அறிவே போதுமானது. யூரோவின் மதிப்பு உலகிலேயே அதிகம் என்பதால் இங்கு படிக்க பெரும் செலவாகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கல்விக்கு பிரான்சில் பெரும் நிதியுதவிகள் பிரெஞ்சு அரசால் தரப்படுகிறது. இதனால் கல்விக்கான கட்டணங்கள் மிக அதிகம் என்று கூற முடியாது. பிரான்சின் கல்வி முறை மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட முறையில் உள்ளது. பிரான்சின் கல்வி முறையைப் பொதுவாக 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். * ஆரம்பப் படிப்புகள் எனப்படும் என்செய்ன்மென்ட் பிரைமரி * பள்ளிப்படிப்புகள் எனப்படும் என்செய்ன்மென்ட் செகண்டரி * உயர் படிப்புகள் எனப்படும் என்செய்ன்மென்ட் சுப்பீரியர் ஆரம்பப் படிப்புகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரெஞ்சு குடியரசு நடத்தும் பள்ளிகளே அதிகளவில் இருக்கின்றன. இது தவிர தனியார் பள்ளிகளும் கத்தோலிக்கப் படிப்புகளுக்கான பள்ளிகளும் உள்ளன. * செகண்டரி எஜூகேசன் படிப்புகள் 7 ஆண்டுகளுக்கானவை. முதல் 4 ஆண்டு படிப்புகள் கல்லூரி படிப்பு என்றும் அடுத்த 3 ஆண்டு படிப்புகள் லைசீ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த படிப்புகளை முடித்தவர் பக்காலே என அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலை படிப்புகளை முடித்தவர்கள் பிரிட்டனின் ஏ ஸ்கூல்/அமெரிக்காவின் ஆக்ட்/ஸாட்/ஆஸ்திரேலியாவின் மேல்நிலைப் பள்ளி படிப்பு போன்றவற்றுக்கு இணையாகக் கருதப்படுகிறார்கள். பிரான்சின் உயர் படிப்புகளின் சிறப்பு. பல துறை சார்ந்த படிப்புகளே. தவிர, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் அதிக அளவிலான கல்விப் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை காரணமாக பிரான்சில் கல்வி பயிலுவது ஒரு முழுமையான கல்வி அனுபவமாக திகழ்கிறது. பிரான்சின் உயர் படிப்புகள் பொதுவாக 2 பிரிவுகளாக உள்ளது. கிராண்ட்ஸ் இகோல்ஸ் மற்றும் பல்கலைக்கழக படிப்புகள் மிகவும் பெருமைக்குரிய படிப்புகளாகக் கருதப்படுகின்றன. கிராண்ட்ஸ் இகோல்ஸின் கீழ் உள்ள இகோல் பாலிடெக்னிக் படிப்புகளே பிரான்சில் பிரசித்தி பெற்றவை. இங்கு சேருவதற்கான அனுமதியும் பெரும் போட்டியை உள்ளடக்கியது. இகோல் பாலிடெக்னிக் பள்ளியின் படிப்புகள் உலகளவில் 4வது இடத்தில் உள்ளன. இங்கு ஆசிரியர்கள் நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவது இல்லை. குறிப்பிட்ட துறைக்கு குறிப்பிட்ட பாடப் பகுதியில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமர்த்தப்படுவதால் சொல்லிக் கொடுக்கும் பகுதி முழுமையாக இருக்கிறது. ஆய்வுப் பணிகள் நமது நாட்டில் உள்ளது போல பல்கலைக்கழகங்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கென்ற தனியாக இன்செர்ம் என்ற ஆய்வு நிறுவனங்கள் தனியாக உள்ளன. பிரான்சின் கல்விக் கட்டணம் குறைவு தான். உயர் கல்விக்கு பிரெஞ்சு அரசே நிதியுதவி செய்வதால் படிக்கும் பிரிவைப் பொறுத்து ஆண்டுக் கட்டணம் மாறுபடுகிறது. பட்ட மேற்படிப்புகளைக் கூட ஒன்று முதல் 2 லட்ச ரூபாய்க்குள் படித்து விட முடிகிறது. குறைந்த வருமானம் உள்ளவர்கள் பிரெஞ்சு கல்வி பயில தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் குறைந்த கட்டண சலுகை போன்ற நிதியுதவிகள் தரப்படுகின்றன. அரசு சார்ந்த இன்ஜினியரிங் பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டாலும் தனியார் இன்ஜினியரிங் பள்ளிகளில் அதிக செலவாகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us