முழுமையான மனிதன் ஆக்குகிறோம்! | Kalvimalar - News

முழுமையான மனிதன் ஆக்குகிறோம்!ஜூலை 11,2023,14:18 IST

எழுத்தின் அளவு :

அனுபவத்தின் வாயிலாக அனைத்தையும் அறிந்தவரே படித்தவர் என்று பிறரால் மதிக்கப்படுகின்றார். கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெறாதவர், படிக்காதவர் என்றும் கருதப்படுகிறார். இதில், பொது அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சூழலில் கல்வி என்பதன் உண்மையான பொருள் தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. 



கல்வி என்பது வேலை பெற்றுத்தரும் ஒரு கருவியாக பார்க்கப்படுவதாலும், பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கல்வி கற்கப்படுவதாலும், இத்தகைய கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாவதும், பின்னர் வேறு படிப்பு முக்கியத்துவம் பெருவதும் நிகழ்கிறது. 



மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன்



இத்தகைய மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், சுயமாக சிந்திக்க தெரியும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே எங்கள் கல்வி நிறுவனத்தின் சிறப்பம்சம். ஆகவே, அத்தகைய மாற்றத்தை எங்களது மாணவர்களால் எளிதாக கையாள முடியும். எந்த தொழில்நுட்பம் புதியதாக வந்தாலும் அவற்றை கற்று, மாற்றத்தை சமாளிக்கும் திறனை ஊக்குவிக்குறோம். வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான வேறுபாட்டினையும் நாங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம். 



சமஸ்கிருதம், நுண்கலை, ஆயுர்வேதம், அறிவியல், பொறியியல், கலை, மேலாண்மை என பல்வேறு படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனமாக ’ஸ்ரீ சந்தரசேகரேந்தர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா’ விளங்குகிறது. இவ்வாறு வழங்கப்படும் பலதரப்பட்ட படிப்புகளில், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான முக்கியத்தை பெற்றுள்ள அதேநேரம், ஒரு படிப்பிற்கும் மற்ற படிப்பிற்கும் இடையேயான தொடர்பும் குறிப்பிடத்தக்க ஒன்று. 



நோய்களை அதிகம் கற்றுக்கொடுப்பது ஆங்கில மருத்துவம். உடல் ஆரோக்கியத்தை கற்றுக்கொடுப்பது ஆயுர்வேதம். அவசரகால சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவமும், நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதமும் உதவுகிறது. அதேபோல், ஒவ்வொரு படிப்பும் ஒவ்வொரு விதமான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு பாடப்பிரிவையும் அதனுடைய மொழியில் கற்பது முழுமையான அறிவை வளர்க்கும். அந்தவகையில் தான், சம்ஸ்கிருத படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 



பாடங்களை தேர்வுக்காக மட்டும் படித்தால் மனதில் தங்காது. புரிந்து படித்தால் மட்டுமே என்றும் மனதில் நீடித்து நிலைக்கும். ஆகவே, ஒவ்வொரு படிப்பின் முக்கியத்துவத்தை மட்டுமின்றி, ஒவ்வொரு பாடத்தையும் புரிந்து படிக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். மற்றவரது செயல்திறன், திறமை, அறிவை பாராட்ட தெரிந்திருக்கும் வகையில், கல்வி அறிவோடு இதர பண்புகளையும் வளர்த்துக்கொள்ள கற்றுத்தருகிறோம். 



இவ்வாறு மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான கல்வி அறிவு மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவரையும் முழுமையான மனிதனாக மாற்றுவதும் எங்களது குறிக்கோள்.



- டாக்டர். எஸ்.வி., ராகவன், துணைவேந்தர், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., காஞ்சிபுரம்.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us