ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு | Kalvimalar - News

ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவுஜூலை 11,2023,14:19 IST

எழுத்தின் அளவு :

நாம் பயன்படுத்தும் ஒரு இயந்திரமோ, மென்பொருளோ நாம் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட்டால், அதுவே செயற்கை நுண்ணறிவு. இன்று நாம் அத்தகைய அறிவின் நிலைகளை பயன்படுத்தத் துவங்கி விட்டோம். 



முக்கியத்துவம்



கடந்த காலத்தில் இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் என பணியாளர்களுக்கு பதற்றம் தந்தவற்றின் வரிசையில் அண்மைக்கால வரவுதான், இந்த செயற்கை நுண்ணறிவு. மனித உடல் உழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. 



கைபேசி முதல் தானியங்கி போக்குவரத்து வரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நுகரத் தொடங்கியிருக்கிறோம். பாதைகளின் போக்குவரத்து நெரிசல்களை துல்லியமாக கூறும் நேவிகேட்டர், நம் கட்டளைகளை செவிசாய்த்து கேட்டு விடை அளிக்கும் அலெக்சா, கூகுள் வாய்ஸ் போன்ற அனைத்தும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவே. 



மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. வாகன உற்பத்தி, மென்பொருள், ட்ரோன் உற்பத்தி, நிதி ஆலோசனை போன்ற தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. அனைத்துமே தொடக்க நிலையில் இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப திறன்களை பெருக்கிக்கொள்ளலாம்.



படிப்புகள்



வரும் காலங்களில், ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது. அதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில்லை. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என, அடிப்படை பாடப்பிரிவு படித்த அனைவரும் இணைந்து தான், ஏ.ஐ., தொழில்நுட்பகங்களில் செயல்பட உள்ளனர். எனவே, சிறப்பு பாடங்களை தேர்வு செய்யாமல், அடிப்படை முக்கிய பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.



அடிப்படைக் கணினி அறிவியல் பொறியியல் படிப்புகளுடன் டீப் லேர்னிங், மிஷின் லேர்னிங் போன்றவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பாதை அமைத்துத் தரும். தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் இவற்றைப் பகுதி நேர சான்றிதழ், டிப்ளமா படிப்பாக வழங்குகின்றன. இளநிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பொறியியல் படிப்புகளை முடிப்பவர்கள் முதுநிலையில் ரோபாடிக்ஸ் - ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படிப்பைப் படிக்கலாம். முதுநிலை டிப்ளமா படிப்பாகவும் பல கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பை வழங்குகின்றன. 



தேசிய அளவில், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரியின் பாடப்பிரிவில் சேர்வது முக்கியம். வேலைவாய்ப்புக்கு ஏற்ற கூடுதல் பாடத்திட்டம் மற்றும் படிப்பை கற்றுத் தரும் தன்னாட்சி கல்லுாரிகளை தேர்வு செய்வதும் இன்றியமையாதது. 



வேலை வாய்ப்பு



டேட்டா இன்ஜினியர், பிசினஸ் இன்டெலிஜென்ஸ் டெவலப்பர், டேட்டா சயின்டிஸ்ட், மிசின் லேர்னிங் இன்ஜினியர், ரிசர்ச் சயின்டிஸ்ட், ஏ.ஐ. இன்ஜினியர், ரோபாட்டிக்ஸ் சயின்டிஸ்ட், என்.எல்.பி. இன்ஜினியர், யு.எக்ஸ். டெவலப்பர், ஆராய்ச்சியாளர், டேட்டா மைனிங் என மாணவர்கள் தங்களுக்கான பணிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 



ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. மேலும் ஹெல்த்கேர், கல்வி, விளையாட்டு, விவசாயம், கட்டுமானம், வங்கியியல், சந்தைப்படுத்தல், ஈ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் தேவை அதிகம் உள்ளன. 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us