படைப்பாற்றலே மூலதனம்! | Kalvimalar - News

படைப்பாற்றலே மூலதனம்!செப்டம்பர் 21,2023,18:54 IST

எழுத்தின் அளவு :

உலகத் தரம் வாய்ந்த வடிவமைப்புக் கல்வியை வழங்குவதோடு, இந்தியாவின் பல்வேறு வடிவமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறந்த வடிவமைப்பு நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும்.



அத்தகைய நோக்கத்துடன், நாட்டின் முன்னணி வடிவமைப்பு பள்ளிகளில் ஒன்றான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், 60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டு தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம், நாட்டின் பல்வேறு நகரங்களில் கல்வி வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வளாகத்திலும், வடிவமைப்புக் கல்வியின் குறிப்பிட்ட தன்மையில் கவனம் செலுத்தப்படுகின்றன. 



மாறுபட்ட வகுப்பறைக் கல்வி



தேசிய அளவில் பல்வேறு களங்களில், ஆக்கப்பூர்வமான வடிவமைப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் இக்கல்வி நிறுவனம், சர்வதேச அளவிலும் பிரபலமடைந்துள்ளது. மாறுபட்ட வகுப்பறைக் கல்வியுடன், படைப்பாற்றலை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு கல்வி, வடிவமைப்பு பயிற்சி, வடிவமைப்பு ஆராய்ச்சி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. 



முன்னணி தொழில் நிறுவனங்களின் வாயிலாக மாணவர்களுக்கு 6 மாதகால செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புராஜெக்ட்களை மாணவர்கள் மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். 



அகமதாபாத் வளாகத்தில் படித்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியாவின் சமூக-பொருளாதார மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். பலர் சர்வதேச அளவிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் வடிவமைப்பு வாயிலாக மாணவர்கள் தனித்துவத்துடன் செயல்படுகின்றனர். இன்னும் பலர் உத்வேகம் தரும் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். 



சிறந்த எதிர்காலம்



உலகெங்கிலும் உள்ள சில முன்னணி டிசைன் கல்வி நிறுவனங்களில் ஒன்றான என்.ஐ.டி.,யில், 9 பிரிவுகளில் பி.டெஸ்., எனும் இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பும், 19 பிரிவுகளில் எம்.எடெஸ்., எனும் முதுநிலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவைதவிர, முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. படைப்பாற்றல் திறன், தொடர்பியல் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாணவர்கள் இப்படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். என்றபோதிலும், டிசைனிங் படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் இத்துறை சார்ந்த புரிதலை முதலில் பெறுவது நல்லது.



இப்படிப்புகள் வேலைவாய்ப்பை மையப்படுத்துபவையல்ல... மாறாக, மாணவர்களது உள்ளார்ந்த ஆர்வத்தை வெளிக்கொணருபவை. உண்மையாகவே வடிவமைப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தயக்கம் இல்லாமல், தங்களை சுற்றியுள்ள வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டால், அவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. 



-பிரவீன் நாகர், இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், அகமதாபாத்.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us