கற்றலும் சுவாரஸ்யமே! | Kalvimalar - News

கற்றலும் சுவாரஸ்யமே!அக்டோபர் 23,2023,08:20 IST

எழுத்தின் அளவு :

பள்ளி என்பது குழந்தைகள் கற்கும் இடம். ஆனால் கற்றல் என்பது பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களுடன் முடிவடைந்துவிடுவதில்லை. அறிவு, புதிய பரிமானங்கள், திறன்கள், மதிப்புகள், அணுகுமுறைகள், விருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே கல்வி. 



இன்றைய வேகமான வாழ்க்கை முறை, வளர்ச்சியடைந்து வரும் சமூகத்துடன், கல்வி முறையையும், கற்றல் அணுகுமுறையையும் புதிதாக உருவாக்கி வருகிறது. மேலும், பழைய அணுகுமுறையிலிருந்து மாற்றம் அடைந்து வருகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் முறையையும், புதிய நுட்பங்களையும் பயன்படுத்தி இன்றைய சூழலுக்கேற்ப குழந்தைகளை தயார் படுத்த வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்க உதவுகிறது. அவர்களின் ஆர்வங்களை கண்டறிய உதவுகிறது. அதற்கேற்ப அவர்களின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது.



குழந்தைகள் அனைவரும் வேறுபட்டவர்கள், வித்தியாசமானவர்கள். ஒரு குழந்தையைப் போல் மற்றொரு குழந்தை இருப்பதில்லை. இங்குதான் குழந்தைகளுக்கான கற்றல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தை கற்றுக்கொள்வதற்கும், தவறுகளைச் செய்வதற்கும், அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் சூழலும், சுதந்திரமும் வழங்க வேண்டும். குழந்தைகள்  கல்வி மற்றும் கல்விசாரா அறிவைப் பெறுவதற்கு வகுப்பறைகள் முதன்மைச் சூழலாக இருந்தாலும், அவர்களின் வளர்ச்சி வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடக் கூடாது. பள்ளிக் கல்வியுடன், வெளி உலக அனுபவங்களிலிருந்து கற்கும் பாடமும் மிக முக்கியமானது. இது குழந்தைகளுக்கு சிறந்த அனுபவத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளின் கற்றல் முறையை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்



நட்பு மனப்பான்மை


ஆரம்ப நிலை பள்ளிகளில் நட்பான சூழல் என்பது இன்றியமையாதது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவ்வாறான சூல்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம். முறைசாரா கற்றல் முறை, குழந்தைகள் தங்களுடன் பயிலும் மாணவர்களுடன் நட்பு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது மற்றும் குழுவாக செயல்படுதலை கற்றுக்கொடுக்கிறது. ஆசிரியர்கள் நட்புடன் அணுகுவதன் மூலம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.



சக மனிதரை புரிந்து கொள்ளுதல்


இன்குளூசிவ் லேர்னிங் முறை  ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. இது குழந்தைகளுக்கான பழமையான கற்றல் முறைகளில் ஒன்றாகும். எல்லா காலகட்டங்களிலும் மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது நற்பண்புகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தை இதைக் கற்றுத்தருவது, ஊக்குவிப்பதின் பிற்காலத்தில் அவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக வழிவகுக்கும். மேலும் குழந்தைகள் தங்களுக்குள் எழும் சந்தேகங்களை கேள்விகளாகக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும், புதிய சிந்தனைகளை செயல்படுத்தவும் இக்கற்றல் முறை உதவியாக இருக்கிறது. இதற்கென பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.




செயல்முறை கற்றல்


செயல்பாட்டின் அடிப்படையிலான கற்றல் என்பது குழந்தைகளிடையே புதிய யோசனைகள், கருத்துகள், அறிவு மற்றும் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தருவதற்கான ஒரு சிறந்த வழியாகும். பல சமயங்களில், பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது கற்றுக் கொள்ள வைப்பதற்கும், குழந்தைகள் கேம் விளையாடுவது, லெகோ பொம்மைகளை உருவாக்குவது போன்ற வேடிக்கையான மற்றும் உற்சாகமான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் இச்செயல்முறை கற்றல் வழிவகை செய்கிறது.



ஒருங்கிணைந்த கற்றல்


புத்தகங்களில் வரும் படக்கதைகள், வெறும் படங்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட கதைகள், குழந்தைகள் மனதில் எளிமையாகவும், விரைவாகவும் பதிகிறது. கதைகளை காட்சி வடிவமாக பதியப்படும் பொழுது அதன் கருத்தும் ஆழமாக நினைவில் வைக்க உதவுகிறது. இந்த முறையை கணிதம், அறிவியல் பாடங்களுடன் இணைத்து கற்பிக்கப்படும் பொழுது அவற்றை வரைய செய்வதன் மூலம், அந்தக் கருத்தை குழந்தை சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த கற்றல் முறை, வரைதல் கலையுடன், சமூகம், தொழில்நுட்ப பாடங்களையும் ஒருங்கிணைத்து கற்றுக் கொள்ள உதவுகிறது.



வாழ்க்கைப் பாடத்தைக் கற்றல்


இது ஒரு முக்கியமான கற்றல் முறை ஆகும். கதைகளில் வரும் வெற்றி தோல்விகளை நிஜ வாழ்க்கையுடன் பொருத்தி கற்பிக்க வேண்டும். தங்களுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் கதைகளாக குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.  இது குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது குறித்த புரிதலை உருவாக்குகிறது. அவர்கள் எதையாவது சாதிக்கும்போது அவர்களை பாராட்டுவதும், அவர்கள் தோல்வியடையும் போது அவர்களை ஊக்குவிப்பதும் மிகவும் முக்கியம். இது குழந்தைகளிடையே வெற்றியின் உற்சாகத்தையும், தோல்வியடையும் பொழுது அதை ஏற்கும் மனபக்குவமும் குழந்தையின் செயல்திறனிலும், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும்.



நேர்மறை அணுகுமுறை கற்றல்


வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான ஒரு முக்கியமான பண்பு நேர்மறையான அணுகுமுறை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேர்மறையான கற்றல் மனப்பான்மையை உருவாக்கி வளர்க்க வேண்டும். இது குழந்தைகள் தங்கள் வாழ்வில் கற்றல் எனபது தொடர்ச்சியான செயல்முறை என்பதை உணர வைக்கிறது. கற்றலில் நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள்.



குழந்தைகள், இலக்குகளை அடையாவிட்டால், அவர்களைக் குறை கூறாமல், அவர்கள் அதற்காக மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைக்க வேண்டும். இயன்றவரை முயற்சி செய்தார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், ஒவ்வொரு அனுபவமும் ஒரு கற்றல் வாய்ப்பாகும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளிடம் மதிப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை வளர்த்துக் கொள்ள நேர்மறை அணுகுமுறைகளை கையாள்வது சிறந்ததாக இருக்கும்.



சவாலை சமாளி


சவால்களை சமாளிக்கும் திறன்களை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களின் சாதனைகளை மட்டுமல்ல, சவால்களை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் அங்கீகரிக்க வேண்டும். 



இது குழந்தைகளை புத்துணர்வு அடைய செய்கிறது.  குழந்தைகளின் யோசனைகளை பெற்றொர் மதிப்பதன் மூலம் அவர்களை புதிய சவால்களை, முயற்சிகளை செய்ய ஊக்குவிக்கிறது. அவர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதாலும், அங்கீகரிப்பதாலும் அவர்களது கற்றல் மனநிலையை வளர்கிறது.



நேர மேலாண்மை


இணையதளத்தில் கற்றலுக்கு உண்டான விஷயங்கள் நிரம்பி இருந்தாலும், அதில் எவற்றைக் கற்க வேண்டும் எவற்றை கற்கக்கூடாது, என்பதை பெற்றோர்களே குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அவர்களது எதிர்காலம் சிறக்க எந்தெந்த விஷயங்கள் உதவியாக இருக்கும் என்பதை புரிய வைத்தல் அவசியம். பெற்றோர்கள் தங்களுடைய தொலைக்காட்சி நேரத்தையும், மொபைல் பயன்பாட்டையும் குறத்துக் கொண்டு குழந்தைகளின் கற்றல் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும், அவர்கள் எப்படி படிக்கிறார்கள், கற்றலில் ஈடுபாடு, எலக்ட்ரானிக் சாதன பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தகுந்த முறையில் வழிநடத்துவதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றலைச் சிறப்பாக வழிநடத்த உதவலாம். 



ஆர்வமுடன் கற்றல்


குழந்தைகள் சலிப்புடன் கற்றலில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கற்க சூழ்நிலைகளை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். அவர்களுக்கு எந்த பகுதியில் ஆர்வம் உள்ளதோ அதைப் பற்றிய மேலும் பல விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ள உதவ வேண்டும். உதாரணமாக, குழந்தைகளுக்கு விலங்குகள் பற்றிய ஆர்வம் இருந்தால், அதன் சமபந்தப்பட்ட, புத்தகங்கள், படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள் ஆகியவற்றில் ஈடுபடுத்தலாம். உயிரியல் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் நேரடி அனுபவத்தை பெறுவார்கள்.



சுவாரஸ்ய கற்றல்


கற்றலை சுவாரஸ்யமாக்க வேண்டும். முன்பு குழந்தைகள் வெளியே வேடிக்கைப் பார்ப்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மொபைல்களிலும், லேப் டாப்புகளிலும் நேரத்தை போக்குகிறார்கள். பெற்றோர்களும் அந்த சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாடத்திட்ட வீடியோக்கள், கேம்கள், அனிமேஷன் படங்கள், நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் கற்றலை வழங்கலாம்.



கற்றலும் ஆராய்ச்சியும்


மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் உருவாக பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு செய்ய கூடாது. ஒவ்வொரு குழந்தைகளின் தனித் திறமையை வெளிக்கொணர்ந்து மேம்படுத்த வேண்டும். பாடங்களை வெறும் மனப்பாடம் செய்வது மட்டும் உதவாது என்பதைப் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். புரிந்து கற்றலே எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்பதை  எடுத்துரைக்க வேண்டும். படித்தலை விட கற்றலே சிறந்தது என்பதை உணரும் பொழுது, அவர்கள் படிக்கும் பாடங்களில் ஆர்வம் ஏற்படும். அது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வழி வகுக்கும். 



குழந்தைகள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், கேள்விகளைக் கேட்கவும், அதன் தொடர்புடைய செய்திகளை சேகரிக்கவும் ஊக்கப்படுத்தலாம். ஒவ்வொரு நாளையும் ஒரு கற்றல் நாளாக மாற்றுவதன் மூலம், குழந்தைகள் தங்களை உள்ளார்ந்த முறையில் ஊக்கப்படுத்தி, அவர்களைக் கற்க வைக்க உதவலாம். கற்றல் என்பது அவர்களின் அன்றாட அனுபவங்களின் இயல்பான பகுதியாக இருக்க வேண்டும்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us