ஆசிரியர் பயிற்சியே எங்கள் பணி! | Kalvimalar - News

ஆசிரியர் பயிற்சியே எங்கள் பணி!நவம்பர் 14,2023,19:15 IST

எழுத்தின் அளவு :

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் டீச்சர்ஸ் டிரைனிங் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனம் மத்திய அரசின் கீழ், தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. சென்னை தரமணியில் 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தால், துவக்க காலத்தில் பாலிடெக்னிக் ஆசியர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கும் விதம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்களுக்கும், தொழில்நுட்ப கல்வியை கற்பிக்கும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 



புதியதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தொழில்நிறுவனங்களில் சிறப்பு செயல்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப பாடத்திட்டத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று யுக்தியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீன மாற்றத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை வகுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைதவிர, ஆராய்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகவும் என்.ஐ.டி.டி.டி.ஆர்., செயல்படுகிறது.




குறுகிய கால பயிற்சி



தொழில்நுட்ப உதவியோடு, அனிமேஷன், இ-லேர்னிங் பயன்பாட்டில் வீடியோ தயாரிப்பதிலும் எங்கள் கல்வி நிறுவன பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தேசிய அளவிலான பயனாளர்களுக்கு மட்டுமின்றி, இதுவரை 107 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் ஒரு மாத கால பயிற்சியை என்.ஐ.டி.டி.டி.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில் வழங்கியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற தலைப்புகளில், ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் என குறுகிய கால பயிற்சியையும் அவர்கள் இடத்திலேயே வழங்குகிறோம். ஆன்லைன் வாயிலாகவும் இதுவரை 40 பயிற்சிகளை ஸ்சுவயம் வாயிலாக வழங்கியுள்ளோம். 



முழுநேர படிப்புகள்



அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இன்ப்ராஸ்டரக்ச்சர் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட், வி.எல்.எஸ்.ஐ. டிசைன் அண்டு எம்பெட்டடு சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் மற்றும் இண்டஸ்ட்ரியல் சேப்டி இன்ஜினியரிங் ஆகிய நான்கு எம்.இ., படிப்புகளையும் வழங்குகிறோம். இவை தவிர, முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தேவைக்கு ஏற்ப, ரோபாட்டிக்ஸ் பேக்ட்ரி ஆடோமேஷன், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு மிஷின் லேர்னிங், கைடன்ஸ் அண்டு கவுன்சிலிங், என்விரான்மெண்டல் மானிட்டரிங் அண்டு இம்பேக்ட் அசெஸ்மெண்ட் உட்பட மொத்தம் ஏழு சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறோம். மேலும், எலக்ட்ரீசியன், பியூட்டிசியன் போன்ற திறன்வளர்ப்பு பயிற்சி மட்டுமின்றி, ஒரு புராஜெக்ட் எழுதும் விதம் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்.



தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஏராளமான பயிற்சியை செயல்முறையில் வழங்குவதற்காக அதிகளவில் ஒப்பந்தம் செய்துவருகிறோம். மாணவர்களுக்கு அல்லாமல், புத்தாக்க சிந்தனை உள்ள ஆசிரியர்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்.



-உஷா நடேசன், இயக்குனர், என்.ஐ.டி.டி.டி.ஆர்., சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us