பிரபலமடையும் ஆப்டோமெட்ரி படிப்பு | Kalvimalar - News

பிரபலமடையும் ஆப்டோமெட்ரி படிப்புபிப்ரவரி 06,2024,19:28 IST

எழுத்தின் அளவு :

மருத்துவத்துறை வேகமாக வளர்ந்துவரும் சூழலில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்றைய நவீன காலத்தில் பலராலும் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், கண் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 



ஆப்டோமெட்ரி


வரும் 2050ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு கண் தொடர்பான குறைபாடுகள் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கண் சார்ந்த படிப்புகள் இன்று பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, கண் மருத்துவத்தில் ஆரம்பநிலை சிகிச்சை மேற்கொள்ளும் பணி வாய்ப்பை வழங்கும் ஆப்டோமெட்ரி படிப்பை சொல்லலாம்.



சரியாக பார்வைத் தெரியாமை, பரம்பரை ரீதியான பார்வைக் குறைபாடு, கண் தசைகளில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு, நோயாளிகளின் கண்களைப் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கும் பணிகளை ஆப்டோமெட்ரிஸ்ட்கள் செய்கிறார்கள். லோ விஷன், கான்டாக்ட் லென்ஸ், ரிப்ரேக்‌ஷன், பனோகுலர் விஷன் உட்பட சார்ந்த பணிகளில் ஆப்டோமெட்ரி படித்தவர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். சேவை மனப்பான்மை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மிகவும் உகந்த படிப்பு 'ஆப்டோமெட்ரி'.



படிப்புகள்


செயல்முறையை அதிகம் கொண்ட ஆப்டோமெட்ரி துறையில், இளநிலையில் ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் கூடிய பி.ஆப்டோமெட்ரி என்ற 4 ஆண்டு படிப்பும், முதுநிலை பட்டப்படிப்பாக, 2 ஆண்டு எம்.ஆப்டோமெட்ரி படிப்பும் வழங்கப்படுகிறது. இவற்றில் சேர்க்கை பெற 'நீட்’ தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளில் நிறைவு செய்த மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் சேரலாம். பிறகு, முதுநிலை பட்டப்படிப்பில் கான்டேக்ட் லென்ஸ், லோ விஷன், விஷன் தெரபி உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பெறலாம். ஆராய்ச்சி வாய்ப்பும் உண்டு.



ஆப்தமாலஜிஸ்ட் 


எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு ஆப்டோமெட்ரியை சிறப்பு பிரிவாக தேர்வு செய்து படிப்பவர்களே 'ஆப்தமாலஜிஸ்ட்’. கண் மருத்தவராக கருதப்படும் அவர்களே, கண் சார்ந்த நோய்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளின் நிலை அறிந்து தேவையான மருந்துகளை பரிசீலிக்கவும் முடியும். 



வாய்ப்புகள்


மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகள், கண் கண்ணாடி கடைகள், கண் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. அப்டோமெட்ரி படிப்பவர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் வாய்ப்பும் உண்டு. அதிகளவிலான அப்டோமெட்ரி கல்லூரிகள் புதியதாக துவங்கப்படுவதால் ஆசிரியர் பணி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. 



-எஸ். கோபால கிருஷ்ணன், முதல்வர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி, சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us