கைகொடுக்கும் இன்டர்ன்ஷிப்! | Kalvimalar - News

கைகொடுக்கும் இன்டர்ன்ஷிப்!மார்ச் 04,2024,09:29 IST

எழுத்தின் அளவு :

கடந்த பத்தாண்டுகளில் இன்டர்ன்ஷிப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகமாக ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு தொடர்பான நடைமுறை அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் பெரிதும் உதவியாக உள்ளது.



திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு, பல புதிய அம்சங்களை இன்டர்ன்ஷிப் பயிற்சி வாயிலாக பெறுகிறார்கள். தங்கள் எதிர்கால திட்டத்தை பற்றிய தெளிவான அறிவைப் பெற இது உதவுகிறது. மேலும், போட்டி நிறைந்த இன்றைய உலகில் தங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்திக் கொள்வதோடு, வேலை வாய்ப்பிலும் இன்டர்ன்ஷிப் பயிற்சி கூடுதல் பலமாக உள்ளது.



'இன்டர்ன்ஷிப்’பிற்கு விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய 4 முக்கிய அம்சங்கள்:



1. நிறுவனத்திற்கு ஏற்ப விண்ணப்பத்தை தயார் செய்தல்:


விண்ணப்பிக்கப்படும் நிறுவனத்தைப் பற்றிய முழுமையான ஆய்வை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் மாணவர்களின் ஆர்வத்தை அவர்களது விபரக்குறிப்பு மூலமே தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே, தங்கள் ஆர்வத்தை தெளிவாக விளக்குமாறு விண்ணப்பங்களை அமைக்க வேண்டும்.



2. முகப்பு கடிதத்தை சுருக்கமாக தயாரித்தல்:


ஒரு குறிப்பிட்ட வேலையில் பணி அமர்த்துவதற்கு முன், உங்களுக்கு ஏன் அவ்வேலையை கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு முகப்பு கடிதம் பதிலளிப்பதாக இருக்க வேண்டும். அதில் மாணவரின் பட்டப்படிப்பு, கல்வித் திறன், செயல் திறன், திட்ட செயல்பாடுகள், கல்வி அல்லாத பிற தொழில் செயல்பாடுகள் மற்றும் முந்தைய இன்டர்ன்ஷிப் அனுபவம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். பாடத்திலும், இதர செயல்திட்ட பணிகளிலும் உங்களின் திறமைகளை முன்னிலைப் படுத்தி விண்ணப்பத்தை தயாரிப்பது நல்ல பலன் தரும்.



3. விண்ணப்பத்தில் தனித்திறன்களை முன்னிலைப்படுத்தல்:


விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் கடினத் திறன்கள் மற்றும் மென்திறன்கள் குறித்து வெளிப்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் புரோகிராமிங், கிராபிக் டிசைனிங், பொறியியல், மார்க்கெட்டிங், கணக்கியல், நிதி பகுப்பாய்வு போன்றவைகள் கடினத் திறன்கள் எனப்படுகின்றன. மென்திறன் என்பது ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லிணக்கம், பேச்சுத் திறன் போன்ற மனித வள திறன்களைக் குறிக்கிறது. மாணவர்கள் தங்களை தனித்துக் காட்ட மென்திறன்கள் கைகொடுக்கின்றன. தொழில்நுட்ப நுண்ணறிவு, துரிதமாக செயல்படுதல், தகவல் தொடர்பு திறன், நேர மேலாண்மை, படைப்பாற்றல் திறன் ஆகையவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.



4. விண்ணப்பத்தை சரிபார்த்தல்: 


எழுத்துப்பிழை அல்லது இலக்கணப் பிழைகள் இல்லாமல் விண்ணப்பத்தை தயாரிக்க வேண்டும். உங்கள் இறுதி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், இரண்டு அல்லது மூன்று முறை பிழைகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மொழி மற்றும் இலக்கணத்தில் புலமைப் பெற்றவர்களிடம் விண்ணப்பத்தை சரிபார்க்கச் சொல்லலாம் அல்லது இணையத்திலுள்ள ப்ரூப்-ரீடிங் வலைதளங்களைப் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 




-சர்வேஷ் அகர்வால், நிறுவனர், இன்டர்ன்சாலா.காம்



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us