சவுஜன்யா (12ம் வகுப்பு - சென்னை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014) | Kalvimalar - News

சவுஜன்யா (12ம் வகுப்பு - சென்னை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014)

எழுத்தின் அளவு :

சைதாப்பேட்டை ஆலந்துார் சாலையை சேர்ந்தவர் மாலகொண்டையா. பிறவியிலேயே பார்வை இழந்தவர். அவரது மனைவி கமலம்மாள், சில ஆண்டுகளுக்கு முன் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த தம்பதியின் மகள் சவுஜன்யா, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 1168 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து சவுஜன்யா கூறியதாவது: என் தந்தைக்கு பார்வை இல்லை. அவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வாடகை 5000 ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தில்தான் குடும்பம் நடக்கும். என் தந்தையின் கஷ்டத்தை போக்க வேண்டும். அவருக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வையை பெற்று தர வேண்டும். இதுதான் என் அடுத்த இலக்கு. இதற்கு அதிக பணம் தேவை.

நியாயமான வழியில் நிறைய பணம் சம்பாதிக்க சி.ஏ. படிக்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். முதியோர் இல்லங்கள் அமைக்க வேண்டும் என்பதும் என் ஆசை. நான் சம்பாதிக்கும்போது, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன். இந்த மதிப்பெண் பெற நான் இஷ்டப்பட்டு படித்ததே முதல் காரணம். அன்பான ஆசிரியர்கள், தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மாலை நேர சிறப்பு வகுப்புகள் என மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதிக்க நிறைய வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இதை மாணவர்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சவுஜன்யா கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us