தேர்வு பயத்தை போக்குங்கள்... | Kalvimalar - News

தேர்வு பயத்தை போக்குங்கள்...

எழுத்தின் அளவு :

உங்கள் குழந்தைக்கு தேர்வு பயமா? கவலை வேண்டாம் பெற்றோர்களே உங்கள் குழந்தைக்கு தைரிய மூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.

இரவு வெகு நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். நம் மூளைக்கு ஓய்வானது மிகவும் அவசியம். தூங்கும் நேரத்தை குறைப்பதால் தேர்வு எழுதுவது கடினமாகும். ஒருவித அசதி ஏற்படும், படித்தவை அனைத்தும் நினைவிற்கு கொண்டு வரும் திறனும் குறைந்து விடும். நன்றாக உறங்கி அதிகாலையில் எழுந்து படிப்பது மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும், நன்கு மனதில் பதிவதுடன் தேர்வு எழுதுவதற்கு மன தைரியமும் உண்டாகும்.

நன்கு படித்தால் மட்டும் போதாது, படிப்பதை புரிந்து படிக்க வேண்டும். சில மாணவர்கள் தேர்வில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை சரியாக கவனிக்காமல் முதல் வரி பார்த்தவுடன் எழுத ஆரம்பித்து விடுவார்கள், அது மிகவும் தவறான செயல் ஆகும். முதல் கேள்வி தாளை படித்து பாருங்கள், ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று கணித்து பதட்டமின்றி தேர்வு எழுத தொடங்குங்கள். 

தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us