தரமான கல்வி நிலையங்கள் தேவை | Kalvimalar - News

தரமான கல்வி நிலையங்கள் தேவை

எழுத்தின் அளவு :

இந்தியாவில் கல்வி நிலை சிறப்பாக இருந்தாலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் கல்விக்கென வசதிகள் உண்டு. தரமான கல்வி நிலையங்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அங்கு உள்ளனர். ஆனால் நம் நாட்டில் இவை மிக குறைவாக இருக்கின்றன என்கிறார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை., துணைவேந்தர் டாக்டர் ப.ராமசாமி.

அவர் நமது கல்விமலர் வெப்சைட்டிற்காக அளித்த சிறப்பு பேட்டி:

இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்கள், பொறியியல் கல்லூரிகள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள் செயல்படுகின்றன. இருப்பினும் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. தரமற்ற கல்வி தான் நம் நாட்டில் தரப்படுகிறது. இது அரசுக்கும், கல்வியாளர்களுக்கும் நன்றாக தெரியும். இவற்றை போக்கவே மத்திய அரசின் பல்கலை.,மானியக்குழு மற்றும் தமிழக அரசும் மாவட்டந்தோறும் பொறியியல் கல்லூரி, பல்கலை.,கழகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நம் நாட்டில் கல்வி பெற்று வெளிநாட்டில் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதே நேரம் இந்தியாவில் பணியாற்ற முன்வரவில்லை.

தரமான கல்வி நிலையங்கள் தேவை: நாட்டில் படித்தவர்களிடம் இருக்கும் மனநிலைமாற வேண்டும். உயர்கல்வி பெற்ற மாணவர்களிடம் கூட ஆங்கிலம் உட்பட பிற மொழிபேச்சுத்திறன் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சகஜமாக அனைத்து மொழிகளிலும் பேசுகின்றனர். நாட்டில் கல்வியின் தரம் உயரவேண்டுமானால் தரம்வாய்ந்த ஆசிரியர்கள், வசதிகளை கொண்டு தரமான கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். அப்போது தான் நாடு கல்வியில் முழுமையான வளர்ச்சி பெறும்.

அழகப்பா பல்கலை.,யில் படிப்புகள்:

எம்.ஏ., எம்.பில்., தமிழ் மற்றும் ஆங்கிலம். எம்.பி.ஏ., பொது, எம்.பி.ஏ., வங்கியியல் மற்றும் இன்ஸ்சூரன்ஸ், கார்ப்பரேட் செக்கட்டிரிஷிப், பன்னாட்டு வணிகம். எம்.காம்., எம்.பில்., வணிகம், உடற்கல்வியியல் துறையில் இளநிலை, முதுகலை பட்டம், எம்.பில்., எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி, எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பில்., கம்ப்யூட்டர் சயின்ஸ். கல்வியியல் துறையில் பி.எட்., எம்.எட்., எம்.பில், தொழில் வேதியியல் துறையில் எம்.எஸ்சி., எம்.பில்., கணிதத்துறையில் எம்.எஸ்சி., எம்.பில்., இயற்பியல் துறையில் எம்.எஸ்சி., எம்.பில்., மகளிரியல் துறையில் எம்.எஸ்.டபிள்யூ., நூலகத்துறையில் பி.எல்.ஐ.எஸ்சி., சி.எல்.ஐ.எஸ்சி., உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்படும் கடலியல், கடலோரவியல்துறையில் எம்.எஸ்சி., போன்ற பாடப்பிரிவுகள் செயல்படுகிறது.

தொலைதூரக்கல்வி மையம்: இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள். கம்ப்யூட்டர், வணிகம், தனிதன்மை, ஆஸ்பத்திரி மேலாண்மைகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகிறது.

எதிர்கால திட்டங்கள்: பல்கலை.,யில் பயோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேடிக்ஸ், நானோ சயின்ஸ், விலங்கியல் சுகாதாரக்கல்வி மற்றும் மேலாண்மை பாடங்கள் துவக்கப்படவுள்ளது. இங்குள்ள அனைத்து துறைகளும் நெட்வசதியுடன் இணைக்கப்படும். தொலைதூரக்கல்வி மூலம் எம்.பி.ஏ., போன்ற முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி வழங்கப்படும். பல்கலை.,யில் ரூ.20 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்படும். ஆய்வுக்கூடம் 10 மாடி கட்டடமாக கட்டப்பட்டு மனிதன், விலங்குகள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இது போன்று மேலாண்மை, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சித்துறை, கடலியல் மற்றும் கடலோரவியல் துறைகளுக்கென தனி ஆய்வகமே உருவாக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் ப.ராமசாமி தெரிவித்தார்.

  • துணைவேந்தர் டாக்டர் ப.ராமசாமி விலங்கியல் மற்றும் பயோ டெக்னாலஜி துறையில் பட்டம் பெற்றவர். அமெரிக்கா நியூயார்க் அறிவியல் கல்வி மைய ஆயுட்கால உறுப்பினர். இந்திய பல்கலை.,களில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணியில் 30 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர். பன்னாட்டு அளவில் 41, தேசிய அளவில் 25 ஆராய்ச்சி கட்டுரைகள், 6 ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டுள்ளார். தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us