கல்விக் கடன் மறுக்கப்படுவதற்கான காரணம் | Kalvimalar - News

கல்விக் கடன் மறுக்கப்படுவதற்கான காரணம்

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி சிலருக்கு கல்விக் கடன் மறுக்கப்படுகிறது.

அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்து, வேறு வங்கியிலும் மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒவ்வொரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றும். வங்கிகள் கோரும் சான்றுகளும் கூடு வேறுபடும். எனவே, ஒரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் முன், அதன் நடைமுறையை சரியாக படித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

கல்விக் கடன் நடைமுறைகள் முடிய 2 வாரங்கள் முதல் ஒரு மாதமும் அதற்கு மேலும் கூட ஆகலாம். அதேப்போல, வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்தை முதலில் கேட்டு, எங்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதோ அங்கு விண்ணப்பிப்பது நல்லது.

பொதுவாக வங்கிகள் தொழிற்கல்வி எனப்படும் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், மேலாண்மை படிப்பு, சார்ட்டட் அக்கவுண்ட் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க ஆர்வம் செலுத்துகின்றன. ஏனெனில், இப்படிப்புகளை முடித்ததும், மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து, கடன் திருப்பி செலுத்தப்படும் என்பதுதான்.

இதே ஒரு கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பணி உறுதி குறைவு என்பதால் அவர்களுக்கு கல்விக் கடன் வழங்க நிறைய நடைமுறைகளைப் பின்பற்றுகிறது வங்கிகள்.

இந்தியாவில் தற்போது 20க்கும் மேற்பட்ட வங்கிகள், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குகிறது. ஆனால், மாணவர்கள் திருப்பி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையை, மாணவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில் வங்கிகள் எதிர்பார்க்கின்றன என்பதும் ஒரு ரகசியமாகும்.

அதாவது, எதற்காக கடன் கேட்கிறோம் என்று மாணவர்கள் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். ஒரு மாணவர், எங்கள் தந்தை செய்து வந்த தொழில் தற்போது நலிந்துவிட்டது. கையில் காசில்லாததால் படிக்க கடன் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நம்பிக்கை இங்கு குறைகிறது. வீட்டில் மாத வருமானமே நிரந்தரமில்லாத நிலையை இந்த வாக்குமூலம் உணர்த்துகிறது.

இதுவே, உயர் கல்வி பயில கடன் அளித்தால், அதைக் கொண்டு படித்து முடித்து அந்த கடனை அடைப்பேன் என்று ஒரு மாணவர் குறிப்பிட்டிருந்தால் அவருக்கு கடன் அளிக்க வங்கி முன்வருகிறது.

இது மட்டுமல்ல, ஜாமீன் போடுபவரின் கணக்கு விவரம் சரியில்லாமல் இருத்தல், மாணவரது மதிப்பெண், தேவையான சான்றுகளை சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள், அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையம் அல்லது பாடப்பிரிவில் சேர்நதிருப்பது, குடும்ப மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பது போன்றவையும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட காரணங்களாகும்.

சரியான கல்வித் தரம் இல்லாத கல்வி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது. அந்த கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள், உயர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனுடன் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் என்பதே காரணமாகும்.

ஆனால், எந்த விதமான காரணமும் இன்றி, ஒரு மாணவருக்கு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அவர் வங்கியின் மேலதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துவிட்டு, வேறொரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்து கடன் பெறலாம் என்பதே கல்வி ஆலோசகர்களின் கருத்தாகும்.

ஒரு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டதும் துவண்டு விடாமல், விண்ணப்பிக்கும் போது செய்த தவறுகளை திருத்திக் கொண்டு உடனடியாக வேறு வங்கியில் கடன் உதவி பெற முயற்சிப்பதே மாணவர்களின் புத்திசாலித்தனமாகும்.

மேலும், அரசு வங்கியாக இருப்பின், கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணத்தை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனால், தனியார் வங்கியாக இருந்தால் காரணத்தை அறிந்து கொள்ள இயலாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us