பயமுறுத்திச் சொல்லிக் கொடுக்கும் பாடம் மனதை சேராது | Kalvimalar - News

பயமுறுத்திச் சொல்லிக் கொடுக்கும் பாடம் மனதை சேராது

எழுத்தின் அளவு :

"குழந்தைகளுக்கு வற்புறுத்திக் கொடுக்கப்படும் உணவும், பயமுறுத்திச் சொல்லிக் கொடுக்கும் பாடமும் உடலையும், மனதையும் சேராது" என குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

இந்திய குழந்தை மருத்துவ சங்க திருச்சி கிளை மற்றும் இந்திராகாந்தி கல்லூரி, மருத்துவமனை நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர், குழந்தை நல டாக்டர்கள் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் குஞ்சிபாதம் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க மாநிலத்தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகளுக்கு பெரும்பாலான நோய்கள் வைரஸ் கிருமிகளால் தான் வருகிறது. குழந்தைகளின் நோய்கள் உடனே தீர வேண்டும் என டாக்டர்களை பெற்றோர் நிர்பந்திக்கக் கூடாது. படித்தவர்கள் கூட இந்த தவற்றைத்தான் செய்கிறார்கள். திருமண வயதிற்கு முன்னரும், வயதைத் தாண்டியும் திருமணம் செய்வதால் தான், 46.5 சதவீதம் பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் விருதகிரி பேசியதாவது: குழந்தைகளுக்கு செயற்கை உணவுகளை அளிக்கக் கூடாது. பீஸா, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை ஊட்டாமல், தாய்ப்பால், கீரை, காய், பழம், தானியங்கள், பருப்பு வகைகள் போன்வற்றை கொடுக்க வேண்டும். குழந்தைகளை நான்கு வயதில் தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு வற்புறுத்திக் கொடுக்கப்படும் உணவும், பயமுறுத்திச் சொல்லிக் கொடுக்கும் பாடமும் உடலையும், மனதையும் சேராது. இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தை நல டாக்டர்கள் லட்சுமிநாராயணன், ராமநாதன், கிருஷ்ணா, அசோக்குமார், சதீஷ்குமார், ராகவன், ஹேமலதா, ரத்தினம், சாமிநாதன் ஆகியோர் பேசினர். முன்னதாக சங்க திருச்சி கிளை தலைவர் நந்தகுமார் வரவேற்றார். டாக்டர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us