கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது | Kalvimalar - News

கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியதுமார்ச் 24,2024,09:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் நேற்று துவங்கியது. மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, கல்வியாளர்களின் ஆலோசனைகளை பெற்றனர்.


இனிதே துவக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்துள்ள மாணவர்கள், அடுத்து உயர்கல்வியில் சேருவதற்கு ஆலோசனை தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, இந்த ஆண்டு கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.


இந்த நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது.


கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, கண்காட்சி அரங்கத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். காலை, 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.


கருத்தரங்கில் பல்வேறு துறை கல்வியாளர்கள் பங்கேற்று, உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ - மாணவியரும், பெற்றோரும் ஆர்வமாக பங்கேற்றனர்.


நிகழ்ச்சிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு வினாடி - வினா நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் பரிசாக வழங்கப்பட்டன. கண்காட்சியில், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சென்ற மாணவ - மாணவியருக்கு, புதிய படிப்புகள் குறித்து, கல்லுாரி பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.


சென்னை ஐ.ஐ.டி.,யின் சார்பில் உருவாக்கப்பட்ட முதல் சூரியசக்தி கார் மற்றும் குகா என்ற நிறுவனத்தில் ரோபோ, ட்ரோன் செயல்முறை போன்றவை, கண்காட்சியில் இடம் பெற்றன.


நிறுவனங்கள் பங்களிப்பு


கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, இந்த நிகழ்ச்சியின் பவர்டுபை நிறுவனங்களாக செயல்படுகின்றன.


ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள், இணைந்து செயல்படுகின்றன.


வழிகாட்டி நிகழ்ச்சியின் விரிவான தகவல்களை, https://kalvimalar.dinamalar.com/index.asp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


மொழிகள் அறிவோம்


பெற்றோர் தங்கள் எண்ணங்களை திணிக்காமல், பிள்ளைகளின் விருப்பமான படிப்புகளை கேட்டு, கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். எல்லா படிப்பும் முக்கியமானது தான். மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு, கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வது, சர்வதேச அளவிலான வேலைவாய்ப்புக்கு உதவும் என கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் தலைவர், நிர்வாக அறங்காவலர், எஸ்.மலர்விழி கூறினார்.


கார்ப்பரேட் நிறுவன நிதி ஆலோசகராக்கும் சி.ஏ., படிப்புகள்


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி ஆலோசகர் பணியில் சேர, சி.ஏ., படிப்பை தேர்வு செய்யலாம் என ஆடிட்டர் சேகர் தெரிவித்தார்.


சி.ஏ., ஏ.சி.எஸ்., உள்ளிட்ட படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர் பேசியதாவது:


உயர்கல்வியில் சேரும் முன், எந்த படிப்பு சிறந்த படிப்பு என்பதை முடிவு செய்வதற்கே, பல கட்ட ஆலோசனை மேற்கொள்கின்றனர். ஆனால், எந்த படிப்பும் நல்ல படிப்பு தான்; எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பு உண்டு.எந்தவொரு படிப்பையும் முழுதுமாக புரிந்து படிக்க வேண்டும்; முழு ஈடுபாட்டுடன் நன்றாக படிக்க வேண்டும். ஆடிட்டிங் மற்றும் நிதி மேலாண்மை சார்ந்த, சி.ஏ., - ஏ.சி.எஸ்., - காஸ்ட் அக்கவுன்டன்சி போன்ற படிப்புகளை, பிளஸ் 2 முடித்ததும் படிக்கலாம். இந்த படிப்புகள் குறித்த விபரங்களை, https://www.icai.org/, https://www.icsi.edu/ மற்றும் https://icmai.in/ என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.அம்பானி நிறுவனம் முதல் அனைத்து வகை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆனாலும் சரி, ஆர்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகளானாலும் சரி, அனைத்துக்கும் நிதி மேலாண்மை பணிகளில், ஆடிட்டிங் முடித்தவர்களே முக்கிய பங்காற்றுகின்றனர்.இந்த படிப்புகள் முடித்தவர்களை, நேரடியாக பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள, பல்கலைகள் அனுமதிக்கின்றன. சி.ஏ., - ஏ.சி.எஸ்., போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெறுவது கடினம் என, மாணவர்கள் நினைக்கின்றனர். உண்மையில், சரியான செய்முறை பயிற்சி பெற்று தேர்வெழுதினால், வெற்றி பெறுவது மிகவும் எளிதாகும். 


இவ்வாறு அவர் பேசினார்.


பி.எஸ்., ஆன்லைன் படிப்பு


ஐ.ஐ.டி., இயக்குனர் ஆலோசனை


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த பட்டப்படிப்பில் சேர்ந்தாலும், ஐ.ஐ.டி.,யின் பி.எஸ்., ஆன்லைன் படிப்பையும் சேர்த்து படிக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:சென்னை ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் மட்டுமின்றி, மற்ற பாட தொகுப்புகள் சார்ந்த படிப்புகளும் உள்ளன. அவற்றில் சேர, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இன்ஜினியரிங் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, 6ம் வகுப்பில் இருந்தே மாணவர்கள் பயிற்சி பெறுவது சிறந்தது.இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளில் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற, ஐ.ஐ.டி., சார்பில், அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் என்ற திறனறிவு மேம்பாட்டு படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை; ஆன்லைன் வழியிலேயே எல்லா வயதினரும் படிக்கலாம். கணிதம் மற்றும் புள்ளியியல் போன்ற நுழைவுத்தேர்வுக்கு தேவையான பாட அம்சங்களை, எளிய முறையில் கற்று தருகிறோம். அதேபோல, பி.எஸ்., ஆன்லைன் பட்டப்படிப்பும் நடத்துகிறோம். மாணவர்கள் இந்த படிப்பிலும் சேர்ந்து, பட்ட சான்றிதழ் பெறலாம். இவை தவிர, மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், டேசி என்ற பெயரில், புதிய பயிற்சி திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளோம். அதில், கிராமப்புற மாணவர்களும் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான, பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


விண்வெளி தொழில்நுட்ப படிப்பில் குவியும் வேலைவாய்ப்புகள் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசியதாவது: எல்லையற்ற விண்வெளியில் பூமி என்பது ஒரு சிறு துாசு அளவே. அப்படியென்றால், நாம் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது எவ்வளவு உள்ளது என்பதை, மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப படிப்புகளில், ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைக்கோள் அனுப்புவது மட்டும் வேலையல்ல. பூமியில் உள்ள பல்வேறு வகை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து, பாதுகாப்பு, தொலைதொடர்பு, வேளாண் நிலங்களின் வகைப்பாடு, கடல்கள், காடுகள் ஆராய்ச்சி, இயற்கை வளங்களை கண்டறிதல், குற்றத்தடுப்பு என, எண்ணற்ற வேலைகளும், தொழில்நுட்பங்களும், விண்வெளி ஆராய்ச்சிகளை மையப்படுத்தியே அமைந்துள்ளன.அதனால், தொழில் முனைவோர் ஆவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், இஸ்ரோ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களில், பல்வேறு வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே, மாணவர்கள் விண்வெளி சார்ந்த இன்ஜினியரிங் குறித்த எதிர்காலத்தை நன்றாக தெரிந்து, தங்கள் படிப்பை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


இன்றைய ஆலோசனை


இன்றைய நிகழ்ச்சியில், பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர். காமர்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்து, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமம் கல்லுாரி டீன் ராஜன் பேச உள்ளார்.அம்ரிதா நிகர்நிலை பல்கலையின் பேராசிரியர் வெங்கடசுப்ரமணியம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., செயற்கை நுண்ணறிவு படிப்புகள் குறித்து பேச உள்ளார். 21ம் நுாற்றாண்டின் திறன்கள் குறித்து, மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார்; இன்ஜினியரிங் எதிர்காலம் குறித்து, ராஜலஷ்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன பேராசிரியர் சுந்தர் பேச உள்ளனர்.மெஷின் லேர்னிங், ரொபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் குறித்து, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவன பேராசிரியர் முருகராஜன் மற்றும் உடனடி வேலை வழங்கும் படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர் ஆலோசனை அளிக்க உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us