கலைப்பிரிவு மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வாய்ப்பு தினமலர் வழிகாட்டி கருத்தரங்கில் தகவல் | Kalvimalar - News

கலைப்பிரிவு மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வாய்ப்பு தினமலர் வழிகாட்டி கருத்தரங்கில் தகவல்மார்ச் 26,2024,09:47 IST

எழுத்தின் அளவு :

மதுரை: பிளஸ் 2வில் கலைப் பிரிவு படித்தாலும் ஐ.ஐ.டி.,யில் படிக்க வேண்டும் என்ற கனவை எளிதாக்கலாம் என அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.


மதுரையில் தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் எல்லோருக்கும் ஐ.ஐ.டி., என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:


கலை, அறிவியல் உள்ளிட்ட எந்த படிப்பு படித்தாலும் ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஜெ.இ.இ., மூலம் தேர்ச்சி பெறுவதன் மூலம் 16 ஆயிரம் பேர் ஐ,ஐ.டி.,க்கு தேர்வு பெறுகின்றனர். முதல் ஆயிரம் மாணவர்களே சென்னை ஐ.ஐ.டி.,க்குள் சேரும் வாய்ப்புக் கிடைக்கும். சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்வது பலரின் கனவு. அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் தான் அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டம் 2022ல் துவங்கப்பட்டது. இளங்கலை பி.எஸ்.சி., டேட்டா சயின்ஸ் படிப்பு உள்ளது. தற்போது எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2வில் எந்த பிரிவை படித்தாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு வாரம் ஐ.ஐ.டி.,யே பயிற்சி அளித்து மாணவர்களை தேர்வு செய்கிறது. இதுவரை 24 ஆயிரம் பேர் படித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் சாதித்துள்ளனர். படிப்பதை புரிந்து படித்தால் சாதிக்கலாம்.


என்றும் ராயல் படிப்புகள்


மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியை பத்மாவதி பேசியதாவது:


வணிகவியல் எப்போதுமே ராயல் படிப்புகளாக தான் உள்ளன. யு.ஜி.,யில் பி.காம்., பி.சி.ஏ., பி.காம்., பேங்கிங் இன்சூரன்ஸ், பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என அனைத்து பிரிவுகளும் எதிர்காலம் உள்ளவையே. திட்டமிட்டு படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். வணிகவியல் படிப்புகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு வேலை வாய்ப்புகளை அளிக்க கூடியவை. உங்கள் திறமைகளை அறிந்து படிப்புகளை தேர்வு செய்யுங்கள். அப்படி தேர்வு செய்தால் கஷ்டப்படாமல் படிக்கலாம்.


படிப்புடன் தரமான கல்லுாரிகளையும் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். குறிப்பாக நீங்கள் எடுக்கும் படிப்புக்கு உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா, கல்லுாரியில் தேவையான கட்டமைப்புகள் உள்ளதா, மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டமா, பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.


சுகாதார அறிவியல் படிப்புகள்


திருச்சி எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில் நுட்ப நிறுவன மருத்துவ, சுகாதார அறிவியல் பிரிவு துணை இயக்குநர் வி.பி.ஆர்., சிவக்குமார் பேசியதாவது:


மருத்துவ படிப்புகளை தாண்டி சுகாதார அறிவியல் படிப்புகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பல் மருத்துவம், பிஸியோதெரபி படிப்பு, ஆக்குபேஷனல் தெரபி, பார்மஸி மற்றும் அதற்கு இணையான ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்ஸி டெக்., ஹார்டியாக் கேர் டிரைனிங், கிளினிக்கல் சைக்காலஜி, மெடிக்கல் லேபரட்டரி டெக்., ஆடியோ ஸ்பீச், அனஸ்தீசியாஸ் டெக்., மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ் என 40க்கும் மேற்பட்டவை உள்ளன. இப்படிப்புகளை தரும் கல்வி நிறுவனங்கள் மெடிக்கல் காலேஜ்களுடன் இணைந்துள்ளனவா என்பதை அறிந்துகொள்ளுங்கள். கல்லுாரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம், பேராசிரியர்களிடம் விபரம் கேட்டு கல்லுாரிகளின் தரம், வசதிகளை அறிந்துகொள்ளுங்கள். இப்படிப்புகள் மூலம் அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. படிக்க வேண்டிய படிப்புகள், கல்லுாரிகளை பட்டியலிட்டு மாணவர், பெற்றோர் கலந்து பேசி முடிவு எடுங்கள். 


இவ்வாறு பேசினர்.


ஸ்மார்ட் வாட்ச் பரிசு வென்றவர்கள்


கருத்தரங்கில் காலை அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த அருப்புக்கோட்டை தேஜஸ்வினி, மதுரை தீக் ஷிதா, கீர்த்தனா, வித்யாகர், நவீன் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச் பரிசு வென்றனர். மாலை அமர்வில் மதுரை கீர்த்தனா, துளசிலட்சுமி, மோகன்குமார், ஹிதாயத் அஸ்மா, விருதுநகர் சுபாஷினி ஆகியோர் வாட்ச் பரிசு வென்றனர். சிறப்பு பரிசாக மேலுார் திவ்யதர்ஷினி லேப்டாப் வென்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us