பாலிமர் தொழில்நுட்பம் | Kalvimalar - News

பாலிமர் தொழில்நுட்பம்

எழுத்தின் அளவு :

கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் அடங்கிய பாலிமர் டெக்னாலஜி என்னும் ஒரு சிறப்பு பிரிவானது, படிப்பதற்கு ஆர்வமூட்டக்கூடியது மற்றும் நல்ல பணி வாய்ப்புகளையும் கொண்டது. தொழில்துறை கணிப்பின்படி, வரும் 2015-16ம் ஆண்டுகளில், மூன்று மில்லியன் மெட்ரிக் டன்கள் பாலிமர்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்கும் என்று தெரிவிக்கின்றன.

ரப்பர் டெக்னாலஜி, பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பிசின் மற்றும் பூச்சு தொழில்நுட்பம் போன்ற பரவலான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு படிப்பாக இந்த பாலிமர் டெக்னாலஜி படிப்பு திகழ்கிறது. பல் துலக்கும் பிரஷ், பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட் உள்ளிட்ட சாதாரண பொருட்கள் முதல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், விமானங்கள், செயற்கை கோள்கள், பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட மிகப் பெரிய விஷயங்களில் தயாரிப்புகள் வரை, பாலிமரின் பயன்பாடு மிகவும் பரவலான ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் இதன் பங்கு

இந்தியாவின் பாலிமர் சந்தையானது, ஒரு ஆண்டிற்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்கள் மதிப்புடையதாக உள்ளது மற்றும் சிறியளவிலான தொழில் நிறுவனங்களில்தான், 75% செயல்பாடு நடைபெறுகிறது. மொத்தம் 33 லட்சம் பேர் இத்துறையில் பணி வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு ஆண்டிற்கான சராசரி யூனிட் தயாரிப்பு 215 டன்கள் ஆகும். இது, சீனாவின் உற்பத்தியில் 1/4 பாகமும், அமெரிக்க உற்பத்தியில் 1/8 பாகமும் ஆகும்.

இப்படிப்பு?

கடந்த 1972ம் ஆண்டு, இந்திய ரப்பர் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன், கேரளாவிலுள்ள கொச்சின் பல்கலையால், அம்மாநிலத்தில் முதன்முதலாக பாலிமர் சயின்ஸ் மற்றும் ரப்பர் டெக்னாலஜி என்ற படிப்பு தொடங்கப்பட்டது. மேலும், அப்போது இந்த படிப்பு, பி.எஸ்சி., முடித்த பிறகு மேற்கொள்ளக்கூடிய இரண்டு வருட படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர், பள்ளிப் படிப்பை முடித்தப்பிறகு, மேற்கொள்ளக்கூடிய 4 வருட பி.டெக்., படிப்பாக, AICTE கொள்கையின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த 4 வருட படிப்பில், பாரம்பரிய படிப்புகளான, பொறியியல் கணிதம், மெக்கானிக்ஸ், கிராபிக்ஸ் மற்றும் மேலாண்மை ஆகியவை மட்டுமின்றி, கெமிக்கல் இன்ஜினியரிங், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பெயின்ட் டெக்னாலஜி, பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ், ஏரோஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் அப்ளிகேஷன்ஸ், பயோடீக்ரடேஷன் ஆப் பாலிமர்ஸ், டயர் டெக்னாலஜி மற்றும் கம்போசைட் டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்கள் அப்படிப்பில் அடங்கியுள்ளன.

நடைமுறை அனுபவம்

இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர், போதுமான நடைமுறை அனுபவத்தைப் பெற முடியும். உதாரணமாக, CUSAT (Cochin university of science and technology) மாணவர்கள், கடைசி ஒரு செமஸ்டர் முழுவதும், கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட தொழில் நிறுவனத்திலோ அல்லது ஏதேனும் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலோ பயிற்சி பெறுவார்கள். மேற்கூறிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்ற வகைப்பாட்டில், National chemical laboratory, ISRO, Sree Chitra institute of medical science and technology, Asian paints, Rubber research institute of India, General electric, Akzo nobel and 3M போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

பொதுவாக, மாணவர்கள் எந்த நிறுவனத்தில் ப்ராஜெக்ட் பணியை மேற்கொள்கிறார்களோ, அந்த நிறுவனத்திலேயே பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

முதல் 5 மாதங்களில், ஒரு லைவ் ரிசர்ச் ப்ராஜெக்டை செய்து முடிக்கும் மாணவர்கள், கடைசி ஆறாவது மாதத்தில், தொழில்துறை பயிற்சியை மேற்கொள்கிறார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் ரிசர்ச் ப்ராஜெக்ட்டுகள், அவ்வப்போது, சர்வதேச ஜர்னல்களில் வெளிவருவதால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையில் ஒரு பெரிய மதிப்பு உருவாகிறது.

சேட்டிலைட்டுகளை செலுத்தும் ராக்கெட்டுகளுக்கான ஆற்றல் கொண்ட உந்துவிசை இயந்திரங்கள், ஏரோஸ்பேஸ் மற்றும் நீரடி பயன்பாடுகளுக்கான புதிய இணைப்பு மேம்பாட்டு அம்சம், டையர் உள்ளடக்கத்திற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்ளடக்கங்களின் அறிமுகம், செயற்கை எலும்புகளின் மேம்பாடு, நேனோ உள்ளடக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை, ஜர்னல்களில் வெளியானவற்றுக்கு உதாரணமாக கூறலாம்.

சேர்க்கை பெறுவது எப்படி?

பிற பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பின்பற்றப்படும் நடைமுறைதான் இதற்கும். பள்ளிப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் படித்து, தேவையான நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதியிருக்க வேண்டும். மதிப்பெண் கணக்கீட்டில், 50% இயற்பியல் - கணிதம் - வேதியியல் ஆகிய மூன்று பாடங்களின் கூட்டிற்கும், தனியாக 50% கணிதப் பாடத்திற்கு மட்டுமாக பிரித்து கணக்கிடப்படும்.

பல பொறியியல் கல்வி நிறுவனங்கள், இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. மேலும், பல பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள், பாலிமர் டெக்னாலஜியில், டிப்ளமோ படிப்பை வழங்குகின்றன.

கட்டணம்

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் இப்படிப்பிற்கான வருடாந்திர கல்விக் கட்டணம் ரூ.8000. ஆனால், சுயநிதி கல்வி நிறுவனங்களில், ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.65,000 மற்றும் அதற்கு மேலும் செல்கிறது.

பணி வாய்ப்புகள்

டயர், mould செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பெயின்டுகள் போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மேலாண்மைப் பணி மற்றும் உற்பத்தி ஆகியவற்றிலும், நிறுவனங்களின் தொழில்நுட்ப பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், உற்பத்தி தொடர்பான தர கட்டுப்பாட்டு(quality control) பிரிவிலும் பணி வாய்ப்புகள் உண்டு. பாலிமர் கச்சாப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் பணியானது, பாலிமர் தொழில்துறையில் மிக முக்கியமான ஒன்றாகும். அதேசமயம், இப்பணியை சிறப்பாக மேற்கொள்ள, பி.டெக்., படிப்புடன் எம்.பி.ஏ., படிப்பையும் முடித்திருந்தால், இப்பணியில் சிறப்பாக சோபிக்கலாம் மற்றும் கூடுதல் முக்கியத்துவமும் பெறலாம்.

தற்போதைக்கு இருக்கும் தொழில் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் பணிவாய்ப்புகள் தவிர, பல தொழில்முனையும் வாய்ப்புகளும் உள்ளன. இப்படிப்பை பாலிடெக்னிக்குகளில் படித்தவர்கள், டயர், பெயின்ட், பிசின் மற்றும் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் மேற்பார்வையாளர் நிலையிலான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us