சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் பணி | Kalvimalar - News

சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் பணி

எழுத்தின் அளவு :

நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால், நாம் அடையும் துயரம் மிகக் கடுமையானது. அந்த நேரத்தில், இறந்த நபருக்கு செய்யப்படும், மிகச் சிறப்பான முறையிலான இறுதி சடங்கு, ஆறுதலை தருவதாக அமைகிறது.

உறுதியான இதயம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றுடன், நல்ல ஒருங்கிணைக்கும் திறனையும் பெற்ற ஒருவர், சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பொருத்தமானவர். இதைப் படித்ததும் உங்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இது ஒரு உன்னதமான பணி. ஒரு மனிதன் பிறந்துவிட்டால், அவனுக்கு இறப்பு என்பது சர்வ நிச்சயம். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. குழந்தை முதல் வயோதிகர் வரை, இறப்புக்கு வயது வித்தியாசம் என்று எதுவும் கிடையாது.

ஒரு உறவை இழந்து வாடும் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு, மன ஆறுதலை தரும் வகையிலான ஒரு சிறப்பான சவ அடக்க செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு ஒரு சந்தோஷத்தைக் கொண்டுவர முடியும். அந்த சவ அடக்கம் என்றும் நினைவில் நிற்பதாக அமைய வேண்டும். இறந்தவர் மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், அவரின் அடக்கத்தையாவது சிறப்பாக செய்து, இழந்தவர்களை சந்தோஷப்படுத்தலாம். இந்த உன்னதப் பணியைத்தான் சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் செய்கிறார்.

இந்த சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் பணி என்பது, சவ அடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுப்பதுதானே தவிர, இறந்த உடலுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை அவர் கையாளப்போவதும் இல்லை.

சவ அடக்க ஒருங்கிணைப்பாளரின் பணிகள்

சவ அடக்கம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவை குறித்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் விரிவாக பேசுதல்.

சவப்பெட்டியை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொள்ளுதல், மலர்களுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் புதைத்த இடத்திற்கு மேல் நட்டு வைக்கும் head stone என்ற கல்லுக்கு ஏற்பாடு செய்தல்.

சவ அடக்கம் நடைபெறவுள்ள குறிப்பிட்ட கல்லறை தோட்ட நிர்வாகிகளை சந்தித்தல் மற்றும் குறிப்பிட்ட இடத்தை வாங்குதல் குறித்து அவர்களுடன் பேசுதல்.

இறப்பு சான்றிதழ் பெறுதல் மற்றும் அடக்க அனுமதி பெறுதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளுதல்.

தேவைப்படும் நேரத்தில், இறந்தவரின் உடலுக்கு ஆடை அணிவித்தல் மற்றும் பதனம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இத்துறை பணி வாய்ப்புகள்

மேலை நாடுகளில் பிரபலமாக இருக்கும் சவ அடக்க ஒருங்கிணைப்பாளர் பணி, இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் பிரபலமாகவில்லை. அதேசமயம், தற்போது வளர்ந்துவரும் துறையாக இது உள்ளது. மேலை நாடுகளில், சவ அடக்க ஒருங்கிணைப்பு தொடர்பான படிப்புகள் மற்றும் அவற்றை வழங்கும் கல்லூரிகள் பல இருக்கின்றன.

சவ அடக்க ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளும் ஒருவர், சர்வதேச தரத்தின் அடிப்படையில், முறையான பயிற்சியளிக்கப்பட்டு, லைசன்ஸ் பெற்றவராக இருக்க வேண்டும். இத்தொழில் முறை, கிறிஸ்தவ சவ அடக்க முறையில் கடந்த காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், தற்போதைய நாட்களில், வேறு மத மக்களும், இந்த சவ அடக்க ஒருங்கிணைப்பு குழுவினரை பரவலாக நாட ஆரம்பித்துள்ளனர்.

இத்துறை தொடர்பான படிப்புகள்

* மேலை நாட்டுப் பல்கலைகளில், Mortuary Science என்ற பெயரில், 2 அல்லது 4 வருட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

* இப்படிப்பு, அனாடமி, பிசியாலஜி, பேதாலஜி, பதனம் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

* சவ அடக்க செயல்பாட்டை மேற்கொள்வதற்கென்று, இந்தியாவில் எந்த தனி தகுதிநிலை படிப்புகளும் இல்லை. எனவே, அதன் தொடர்புடைய, Funeral Homes -ல் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளும் வாய்ப்புகளுடன் வழங்கப்படும் வணிக அல்லது ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளை மேற்கொள்ளலாம்.

சலுகைகள் என்ன?

இந்த தொழில்துறை, இந்தியாவில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால், போட்டிகள் மிகவும் குறைவு. எனவே, இத்துறை படிப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பிரபலமாவது எளிது.

மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, இத்தொழிலுக்கு தொய்வு என்பதே இல்லை. இவ்வுலகை விட்டு நீங்கிய ஒருவரின் உடலை, மரியாதையுடன், தேவையான சடங்குகளை செய்து, சிறப்பான வகையில் அடக்கம் செய்து, அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு நடவடிக்கை, உன்னதமான ஒன்று எனலாம். இதன்மூலம், இத்தொழிலில் ஈடுபடுபவருக்கு பெரிய திருப்தியும், வருமானமும், மரியாதையும் கிடைக்கிறது.

சவால்கள் என்ன?

இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதால், இத்தொழில் சார்ந்த ஒருவர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இப்பணிக்கென்று, குறிப்பிட்ட நேரம்-காலம் அல்லது விடுமுறை நாள் என்று எதுவும் இல்லை.

உடல் உழைப்பு என்பதை மீறி, இதுவொரு உணர்வு சம்பந்தப்பட்ட தொழிலாகும். வாழ்க்கையில் எப்போதுமே சவ அடக்க நடவடிக்கையையே மேற்கொண்டு, சோகம் மற்றும் அழுகை ஆகியவற்றையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு மனோரீதியாக சோர்வும், உளவியல் சிக்கல்களும் ஏற்படலாம்.

வருமானம்

இத்தொழிலின் வருமானம் என்பது, ஒருவர் மேற்கொள்ளும் சவ அடக்கப் பணியின் தன்மை மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும், குறிப்பிட்ட மதங்களில் சடங்குகள் அதிகம் இருக்கலாம். அப்போது, சவ அடக்க ஒருங்கிணைப்பாளரின் பணிகளும் அதிகரிக்கலாம். எனவே, இத்தொழிலின் வருமானம் மேற்கூறிய அம்சங்களை பொருத்து மாறுபடும்.

தகுதிகள்

எளிதில் உணர்ச்சிவசப்படாத மனஉறுதி, இரக்க உணர்வு மற்றும் உறவினரை இழந்த குடும்பத்தின் துயரத்தை புரிந்துகொள்ளும் மனப்பாங்கு இருக்க வேண்டும். மேலும், உளவியல் ரீதியாக துயரமுற்றவருக்கு தைரியம் கொடுக்கும் தன்மை இருப்பதோடு, சவத்தைப் பார்த்து அருவெறுப்படைதல் மற்றும் சில வாசனைகளைக் கண்டு அலர்ஜியாதல் போன்ற பலவீனங்கள் இருக்கக்கூடாது.

இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கும் சில வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்

University of Minnesota, USA
Cincinnati college of Mortuary Science, USA
Worsham university of Mortuary Science, USA
Wayne State university, USA
University of Chester, UK.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us