எம்.பி.ஏ., பைனான்ஸ் | Kalvimalar - News

எம்.பி.ஏ., பைனான்ஸ்

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ - பைனான்ஸ் படிப்பு, உங்களை நிதித்துறையில் வல்லுநராக மாற்றுகிறது. வணிகப் பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களால், அதிகம் விரும்பப்படும் மேலாண்மை படிப்பாக இது விளங்குகிறது.

வணிகத்தில் அதிகளவு நாட்டம் கொண்டவர்களால், இயற்கையாகவே விரும்பப்படும் படிப்பாக இது திகழ்கிறது. வங்கியியல் மற்றும் வணிக செயல்பாடுகள், உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு அதிக பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, எம்.பி.ஏ., படிப்பவர்களின் பிரதான தேர்வாக இப்படிப்பு திகழ்கிறது.

கல்லூரிகள், அட்மிஷன் மற்றும் தகுதி தேவைகள்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.ஏ - பைனான்ஸ் படிப்பில் சேர தகுதியானவர்கள். எம்.பி.ஏ., பட்டப் படிப்பை வழங்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், பைனான்ஸ் ஸ்பெஷலைசேஷன் படிப்பை கட்டாயம் கொண்டுள்ளன.

சில கல்வி நிறுவனங்கள், CAT தேர்வு மதிப்பெண்களுடன், குழுக் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மாணவரின் செயல்பாட்டையும் கணக்கில் எடுக்கின்றன. அதேசமயம், வேறுசில கல்வி நிறுவனங்கள், XAT, GMAT போன்ற தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

அதேசமயம், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., சேர வேண்டுமெனில், உங்கள் படிப்பு சம்பந்தப்பட்ட பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டியது தேவையாகிறது. மேலும், பல கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்களையும் வழங்குகின்றன.

தேசிய அளவில் எம்.பி.ஏ - பைனான்ஸ் படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

* IIMs - Ahmedabad, Bangalore, Kolkatta, Lucknow
* Narsee Monjee institute of management studies - Mumbai
* Symbiosis centre for management and human resource development, Pune
* Management development institute, Gurgaon
* Xavier labour relations institute, Jamshedpur
* S P Jain institute of management, Mumbai
* Indian school of Business, Hyderabad

மேலும், இப்படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் கற்பதற்கும், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், இப்படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள விரும்புவோருக்கு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள மேலாண்மை பல்கலைகள் போன்றவை கணக்கில் கொள்ள வேண்டியவை.

இப்படிப்பில் கற்றுக்கொள்வது என்ன?

இப்படிப்பில், பைனான்சியல் செக்டார் மற்றும் பைனான்சியல் மார்க்கெட் பற்றி, பல்வேறு அம்சங்கள் அடங்கிய ஒரு விரிவான படிப்பை மேற்கொள்கிறார்கள். மேலும், Budgeting, Costing, Corporate finance, Financial management, Financial planning, International Finance, Investment Banking, Retail Banking, Working Capital Management, Risk Management, Securities, Investments, Trading போன்ற அம்சங்களும் இப்பாடத்திட்டத்தில் அடங்கியவை.

வகுப்பறை படிப்பிற்கு அப்பால், எண்கள், பகுப்பாய்வு, நிதி, நுணுக்க சிந்தனையை மேம்படுத்தல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்றவற்றை கற்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம், நீங்கள் படிப்பை முடித்து, நிதித்துறையில் ஈடுபடுகையில், ஒரு திறன்வாய்ந்த நிபுணராக பரிணமிக்கிறீர்கள்.

கெஸ்ட் லெக்சர்கள், Summits, தொழில்துறை மற்றும் பாடரீதியாக நிபுணத்துவம் பெற்ற நபர்களுடனான கலந்துரையாடல், இன்டர்ன்ஷிப் மற்றும் பயிற்சி திட்டங்கள் போன்றவை படிப்பின்போதே ஒரு மாணவருக்கு கிடைக்கின்றன. இதன்மூலம், ஒரு நடைமுறை சவாலை சந்திப்பதற்கு தயார்படுத்தப்படுகிறார்.

இந்த படிப்பால் உங்களுக்கான நன்மைகள்

இப்படிப்பு, உங்களை ஒரு நிதி வல்லுநராக மாற்றுகிறது. இந்த இரண்டு வருட விரிவான படிப்பில், உங்களுக்கு விருப்பமான பிரிவை, பட்டம் பெற்றதும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். Financial Relationship and Management, Investment Banking, Corporate Finance போன்ற பணி வகைகள், பலராலும் பரவலாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதேசமயம், பைனான்ஸ் தொடர்பற்ற இதர சில அலுவலகப் பணிகளிலும், இப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது. இப்படிப்பு, உங்களை ஒரு எதிர்கால தலைவர் என்ற நிலைக்கும் உயர்த்துகிறது. பைனான்ஸ் என்பதுதான் ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாட்டு ஆதாரம். மேலாண்மை செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதி பைனான்ஸ்.

எனவே, இப்பிரிவுடன் தொடர்புடைய பட்டதாரிகள், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறார்கள். பலவிதமான எம்.பி.ஏ., பிரிவுகளுடன் ஒப்பிடுகையில், பைனான்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஏனெனில், நிதி தொடர்பான அறிவு குறைவாக பெற்றிருக்கும் ஒருவர், ஒரு நிறுவனத்தின் மேல் பொறுப்பிற்கு வருகையில், மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படும். எனவேதான், எம்.பி.ஏ - பைனான்ஸ் படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பணியின் தன்மைகள்

இந்தப் படிப்பு, உடனடியாக ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு படிப்பதாகும். இப்படிப்பை முடித்தவுடனேயே, நல்ல சம்பளத்தில் வேலை பெறும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதேநேரம், போட்டிகளும் அதிகம். அதேசமயம், நிதித்துறை சம்பந்தப்பட்ட பணிகள், அந்தந்த நேரத்தின் பொருளாதார சூழல்கள் சம்பந்தப்பட்டது.

ஒவ்வொரு நேரத்தின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், இப்பணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்படும் எந்த தாக்கமும், இப்பணியில் உள்ளவர்களால் உடனடியாக உணரப்படும். சமீப காலங்களில், இப்படிப்பு தொடர்பான பணிகளைப் பெறுவதற்கு போட்டிகள் அதிகரித்துள்ளன.

MBA Finance படித்த மாணவர்கள், இதர நிதி தொடர்பான படிப்புகளான, MS Finance, CFA and Quantitative Finance போன்ற படிப்புகளை முடித்தவர்களுடன் கடும் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது. MBA Finance மாணவர், சிறந்த வணிகத் திறன்களை தானே முன்வந்து வளர்த்துக் கொள்வதன் மூலமாக, நீண்ட போட்டியில் நிலைத்து நிற்க முடியும். நிதித்துறையில் அதீத ஆர்வமும், முன்னேற வேண்டும் என்ற உந்துதலும் ஒருவருக்கு கட்டாயம் தேவை.

பகுப்பாய்வு திறன்கள் மற்றும் நல்ல உறவுநிலைத் திறன்கள் உங்களுக்கு இன்னும் அதிக முன்னேற்றத்தைத் தரும். இத்துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் மோசடி செயல்பாடுகளை அடையாளம் கண்டு, உங்களை நீங்கள் காத்துக்கொள்ள, மேற்சொன்ன பலவித திறன்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.

மேம்பாட்டுக்கான உத்தரவாதம்

உலகம் முழுவதுமுள்ள நிதி சந்தைகள் அவ்வப்போது மாறி வருகின்றன. இத்தகைய மாற்றங்களுடன் ஒத்துப்போய், அதை திறம்பட சமாளிக்கும் திறன் படைத்த நிபுணர்கள்தான் இன்றைய தேவை. இத்தகைய நிபுணர்களை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகள், கல்லூரி நிலையிலேயே தொடங்கப்பட்டுவிட வேண்டும். எனவே, MBA Finance படிப்பை, இன்னும் சில படிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது.

தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கும் வகையில், தேவைப்படும் நேரத்தில், இப்படிப்பின் பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, நவீன பயிற்சிகளும் அவசியமானவை. இத்தகைய அம்சங்கள், கல்வித்துறைக்கு கட்டாயம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us