நியூட்ரிஷன் படிப்பு | Kalvimalar - News

நியூட்ரிஷன் படிப்பு

எழுத்தின் அளவு :

நமது நாட்டின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு, சரியான உணவுப் பழக்க செயல்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, உலகிலேயே அதிகளவு சர்க்கரை நோயாளிகளைக் கொண்டிருப்பதோடு, இதர வகை நோயாளிகளையும் அதிகளவில் கொண்டிருக்கும் இந்நாட்டிற்கு, நல்ல நியூட்ரிஷன் அறிவு தேவைப்படுகிறது.

நியூட்ரிஷன் வளர்ச்சி

கடந்த 1930ம் ஆண்டுகளிலேயே, இந்தியாவில் நியூட்ரிஷன் தொடர்பான படிப்புகள் தொடங்கி விட்டன. ஆரம்ப காலங்களில், சமைத்தல் மற்றும் டெக்ஸ்டைல் மேலாண்மை தொடர்பான படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேசமயம், கடந்த 1960ம் ஆண்டுகளில்தான், நியூட்ரிஷன் தொடர்பான படிப்புகள் முக்கியத்துவமும், பிரபலமும் அடையத் தொடங்கின. தற்போதைய நிலையில், அந்த துறை பெரியளவில் வளர்ச்சியடைந்த ஒன்றாக உள்ளது.

முன்பு, ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சினைகளுக்குத்தான், இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஆரோக்கியம் தொடர்பான பார்வை, இன்றைய நிலையில், பெரியளவில் மாறியுள்ளது. இந்தியாவில், ஊட்டச்சத்து பிரச்சினைகள், பல நிலைகளில் இருக்கின்றன. ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு, இன்னொன்று அளவுக்கு மீறிய உணவினால் வரும் பிரச்சினை. இந்த இரண்டுக்கும்தான் அதிகளவு முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படுகிறது.

டயடீஷியன் - நியூட்ரீஷனிஸ்ட் வேறுபாடுகள்

டயடீஷியன்

பணி செய்யும் இடத்தைப் பொறுத்து, Clinical அல்லது Therapeutic டயடீஷியன்கள் என்று இருவகையாக அழைக்கப்படுவார்கள். மருத்துவமனைகள், கிளீனிக்குகள், ஹெல்த்கேர் மையங்கள், wellness புரோகிராம்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர் மற்றும் சொந்த கிளீனிக் வைத்திருப்போர் ஆகியோர், ஒரு நோயாளிக்கென திட்டமிடப்பட்ட உணவு செயல்பாட்டை மேற்கொள்வதில், திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல் மற்றும் தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

ஒரு தனிநபரின் உணவுப் பழக்கத்தை, திட்டமிட்டு உருவாக்கி கொடுத்தல் மற்றும் அதை மேற்பார்வையிடுதல் ஆகியவை, ஒரு டயடீஷியனின் பிரதான பணி. மருத்துவமனைகளில், டயடீஷியன்கள், மருத்துவர்களுடன் நெருங்கி பணியாற்றும் பணி முக்கியத்துவத்தைப் பெறுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட வார்டுகளில் மேற்பார்வை பணிகளை மேற்கொள்வதுடன், மருத்துவமனை சமையலறையின் சுகாதாரம் மற்றும் தரம் ஆகியவை குறித்தும் சோதனையிடும் பணியை டயடீஷியன்கள் மேற்கொள்கிறார்கள். மருத்துவ உலகைப் பற்றிய நல்ல புதுப்பிக்கப்பட்ட அறிவைப் பெற்றுள்ள டயடீஷியன்கள், தங்கள் துறையில் பெயர்பெற்று விளங்குவார்கள்.

நியூட்ரிஷியன்கள்

உணவு அறிவியல், சமூக மேம்பாடு, ஆராய்ச்சி திட்டங்கள், அதிகம் விற்பனையாகும் பொருட்களைத் தயாரிக்கும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் ஆகிய துறைகள் மற்றும் இடங்களில், இவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் பணி ஆராய்ச்சி தொடர்பானது.

இவர்கள், களப்பணி, ஆய்வகப் பணி மற்றும் அலுவலகப் பணி ஆகியவற்றை மேற்கொள்பவர்கள். பொது சுகாதார நியூட்ரிஷியன்கள், மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்றுகிறார்கள். டயட்(diet) என்ற எல்லையைத் தாண்டி, பயோகெமிஸ்ட்ரி மற்றும் உணவு அறிவியல் ஆகிய நிலைகளுக்கு அவர்கள் செல்கிறார்கள். டயடீஷியன்கள் போன்று, கிளீனிக்கல் தொடர்பான பணிகளை இவர்கள் அதிகம் செய்வதில்லை.

இத்துறையில் நுழைய...

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தப்பின்னர், நியூட்ரிஷன் படிப்புகளை மேற்கொள்ளலாம். அதேசமயம், அதுதொடர்பான பட்டப்படிப்பின் பெயர், கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். டெல்லி பல்கலையைப் பொறுத்தவரை, BSc Home Science என்பது ஒரு பட்டம். இதில், உணவு மற்றும் நியூட்ரிஷன் என்பது ஒரு பாடம்.

அதேசமயம், Manav Rachna கல்வி நிறுவனத்தில், BSc Nutrition and Dietetics என்ற படிப்பை, மாணவர்கள் 3 ஆண்டுகள் மேற்கொள்வார்கள். BSc Home Science (Hons) படிப்பில், 2 மற்றும் 3ம் வருடத்தில் உணவு மற்றும் நியூட்ரிஷன் தொடர்பான ஸ்பெஷலைசேஷனை மேற்கொள்கிறார். ஹானர்ஸ் படிப்பை பொறுத்தவரை, அறிவியல் படிப்புகளை படித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல், இயற்பியல், விலங்கியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்கள் இப்படிப்பில் அடங்குவதால் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.

பணி வாய்ப்புகள்

நியூட்ரிஷன் படிப்பை முடித்தவர்களுக்கு, பல்வேறான மருத்துவமனைகள், Kellogs, Britannia போன்ற உணவுத் தொழிற்சாலைகள் போன்ற பல இடங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமூக நலம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில், நியூட்ரிஷன் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், பொது சுகாதார துறைகளிலும் அவர்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகம்.

இருக்கும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில், உணவு மற்றும் நியூட்ரிஷன் வாரியத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய, UPSC, நேர்முகத் தேர்வுகளை நடத்துகிறது. UPSC பணி வாய்ப்பை பெற்றுவிட்டால், class - 1 gazetted officer என்ற நிலையை நீங்கள் அடைவீர்கள்.

ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் அல்லது உதவி ஆலோசகர்கள் என்ற நிலைகளில் பணியாற்றும் நியூட்ரிஷன்களின் எண்ணிக்கை மிக அதிகம். நாடு முழுவதும், மொத்தம் 43 உணவு மற்றும் நியூட்ரிஷன் யூனிட்டுகள் உள்ளன. எனவே, நியூட்ரிஷன்களின் தேவை அதிகம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். மேலும், விளையாட்டுத் துறை நியூட்ரிஷன்களுக்கான மதிப்பும், தேவையும் மிக அதிகம்.

வெளிநாட்டில் படித்தல்

ஹெல்த் மற்றும் நியூட்ரிஷன் படிப்புகளுக்கு, அமெரிக்காவும், பிரிட்டனும் புகழ்பெற்ற நாடுகள்.

பாடத்திட்டம்

உடலியல்(Anatomy), உணவு மற்றும் நியூட்ரிஷன், மைக்ரோபயாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி நியூட்ரிஷன் ஆகிய அம்சங்களை இப்பாடத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

வருமான வாய்ப்புகள்

புதிதாக படித்து வெளிவருபவர், மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் பெற்றபின்னர், சம்பளம் ரூ.30,000 மற்றும் அதற்குமேல் செல்லும். அரசு மருத்துவமனைகளில், 6வது சம்பளக் கமிஷன் அடிப்படையில், ஊதியம் ரூ.25,000 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us