எக்ஸிகியூடிவ் எம்.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

எக்ஸிகியூடிவ் எம்.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் உள்ள எக்ஸிகியூடிவ்களுக்கென வடிவமைக்கப்பட்டதுதான், எக்ஸிகியூடிவ் எம்.பி.ஏ., படிப்பு.

பணிபுரியும் நிறுவனத்தில், பதவி உயர்வை எதிர்பார்க்கையில், தனது கல்வித் தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கென உருவாக்கப்பட்டதுதான் Executive MBA படிப்பு.

நீங்கள் ஏன் எக்ஸிகியூடிவ் எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்கிறீர்கள்? உங்களுடைய புரபஷனல் வாழ்க்கையில் எந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கும், உங்களிடையே இன்னும் எழப்போகும் சில அடிப்படையான கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரை பதிலளிக்கிறது.

Executive MBA & MBA for Executives ஆகிய படிப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?

Executive MBA படிப்பதால் உங்களுக்கான நன்மைகள் யாவை?

இப்படிப்பை பற்றி சந்தையில் நிலவும் அபிப்ராயம் என்ன?

எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன?

இந்தப் படிப்பில் சேரும் முன்பாக, நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Executive MBA அல்லது MBA for Executives

MBA for Executives படிப்பு என்பது, புகழ்பெற்ற மற்றும் இதர வணிகப் பள்ளிகளால் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்புகளில் ஒன்றாக மதிப்பிடத்தக்கது. அதாவது, தனது பணிநிலை முன்னேற்றத்திற்காக ஒருவர் மேற்கொள்ளும் படிப்பு வகையில் வைத்துக்கொள்ளலாம். இது 24 மாதங்கள் காலஅளவு கொண்ட ஒரு முழுநேர படிப்பு மற்றும் படிப்பின் முடிவில் எம்.பி.ஏ., சான்றிதழ் கிடைக்கும்.

இந்தப் பட்டத்தை தவிர, கல்வி நிறுவனங்கள், பணி வாய்ப்புகள் மற்றும் நிறுவன தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதன்மூலம், இன்டர்ன்ஷிப் மற்றும் பயிற்சிகளைப் பெறலாம்.

அதேசமயம், Executive MBA என்பது, இயல்பில் ஒன்றாக இருந்தாலும், அதிகளவில் மாறுபட்ட ஒன்றாகும். இப்படிப்பிற்கு, தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் பணி அனுபவம் என்பது ஒரு முக்கியமான தகுதி நிலையாகும். இப்படிப்பை வழங்கும் பல கல்வி நிறுவனங்கள், இதில் சேரும் நபர்களுக்கு, குறைந்தபட்சம் 2 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் எதிர்பார்க்கின்றன.

இப்படிப்பு, 1 ஆண்டு காலஅளவு கொண்டது மற்றும் நாட்டின் பல புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள், இதை ஒரு ரெசிடென்ஷியல் படிப்பாக வழங்குகின்றன. சிலர், இதை வார இறுதி படிப்பாக மேற்கொள்கின்றனர். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.

அதேசமயம், சர்வதேச சூழல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. உலகளவில் புகழ்பெற்ற சில மேலாண்மை பள்ளிகள், இப்படிப்பை, பணியில் இருக்கும் புரபஷனல்களுக்காக வார இறுதி படிப்பாக வழங்குகின்றன. இதன்மூலம் ஒருவரின் பணிகள் பாதிக்கப்படாமலும், அவர் தொந்தரவின்றியும் தனது படிப்பை மேற்கொள்ள முடிகிறது. இதன்மூலம், மேம்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொண்டு, பணி உயர்வு பெறுவதை உறுதிசெய்ய முடிகிறது.

Executive MBA படிப்பின் பயன்கள்

இப்படிப்பை மேற்கொள்ளும் ஒருவர், தனது பணியில் இருந்து விலகாமலேயே, தனது பணியில் பெறும் சலுகைகளில் எதையும் இழக்காமலேயே, தனது தொழிலுக்குரிய புதிய அறிவு மற்றும் திறன்களை பெற்றுக்கொள்கிறார்.

இந்தப் படிப்புக்கு, வேலை வாய்ப்பு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. சில தொழில் நிறுவனங்கள், தங்களின் இடைநிலைப் பணியாளர்களை, மேல்நிலைப் பணியாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்தும் வகையில், இப்படிப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை அளிக்கின்றன.

புதிய மற்றும் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொள்வது என்பதே இப்படிப்பின் பிரதான அம்சமாக அறியப்பட்டாலும், வெளியே அதிகம் அறியப்படாத பல நன்மைகளும் இப்படிப்பில் கிடைக்கிறது. அவைகளில் சில,

ஒருவர் வாங்கும் சம்பளத்தில் சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கிறது.

30 முதல் 35 சதவீதம் வரையிலான தொழில்துறை ஏற்பு.

பணிபுரியும் நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்படல்.

மேலாண்மைப் பணியில் சிறப்பான பதவி உயர்வு.

இப்படிப்பிற்கான மதிப்பு

இப்படிப்பிற்கு இருக்கும் சர்வதேச மதிப்பு உயர்ந்தது. தற்போது, இந்தியாவிலும் இதன் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பிற பாரம்பரிய எம்.பி.ஏ., படிப்புகளோடு ஒப்பிடுகையில், இதற்கான ஏற்புத்தன்மை அதிகமாக உள்ளது. இப்படிப்பை முடித்தப்பிறகு கிடைக்கும் பணி வாய்ப்புகள் மற்றும் பணி உயர்வுகள் ஆகியவற்றை வைத்து, இப்படிப்பின் முக்கியத்துவம் மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இதற்கான சரியான புள்ளி விபரங்கள் அறியப்படவில்லை. அதேசமயம், Executive MBA படிப்பை வழங்கும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இப்படிப்பை தேர்ந்தெடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இப்படிப்பை வழங்கும் முக்கியமான இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் பட்டியல்

IIM - Ahmedabad
IIM - Bangalore
IIM - Calcutta
IIM - Indore
IIM - Kozhikode
IIM - Lucknow
FMS
MDI
NMIMS
Symbiosis

மேலும், இப்படிப்பை பொறுத்தவரை, நேரம், கட்டண விபரம், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கான பல ஆலோசனைகள்

இப்படிப்பில் சேரும் முன்பாக நீங்கள் அவதானிக்க வேண்டியவை

வழங்கப்படும் சான்றிதழ்

இப்படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடமிருந்து, டிகிரி அல்லது டிப்ளமோ சான்றிதழ் கிடைக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போதைய ஆசிரியர்கள்

தங்களிடமுள்ள நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் Guest Lecturers ஆகியோரின் விபரங்களை, தங்களின் இணையதளத்தில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வெளியிடும். எனவே, உங்களுக்கு வகுப்பெடுக்கக்கூடிய ஆசிரியர்கள் பற்றி விரிவாக ஆராய வேண்டும்.

பணி வாய்ப்புகள்

கல்வி நிறுவனத்திலுள்ள placement cell -ஐ அணுகி, யாருடைய பெயர்கள் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதோ, அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்களைத் தருமாறு கேட்கவும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, நிறுவனத்தின் பெயர், சம்பளம் மற்றும் பணி நிலை ஆகிய விபரங்களைப் பற்றி கேட்டறியலாம்.

நிதி உதவி

கல்விக் கடன்களின் மீதான நிதி சலுகைகளுக்காக வங்கிகளுடன் கூட்டு.

கடனை எளிதாக திருப்பிச் செலுத்தும் வசதி.

இலக்குப் பற்றிய தெளிவு

கல்வி நிறுவனம் மற்றும் படிப்பு தொடர்பாக, அனைத்து விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். தங்களுடைய திட்டங்களையும், இலக்குகளையும் யார் எழுதி வைத்துக்கொள்கிறார்களோ, அவர்கள், மற்றவர்களைவிட 10 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த குறிப்பிட்ட எம்.பி.ஏ., படிப்பை நீங்கள் தேர்வு செய்வதற்கான காரணம்?

* அதிகமான சம்பளத்திற்காகவா?
* நல்ல வணிக அங்கீகாரத்திற்காகவா?
* கற்றல் மற்றும் மேம்பாட்டிற்காகவா?

இப்படிப்பை முடித்தவுடன் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

படிப்பை முடித்தவுடன் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல நிலையிலான ஒரு பணி.

நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ள ஒரு பணியை, ஒரு தனிநபராகவோ அல்லது ஒரு குழுவின் உறுப்பினராகவோ பெறுதல்.

சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குதல்.

இப்போதிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் உங்களின் நிலை எப்படி இருக்கும்?

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சீனியர் மேலாண்மை பணியில் இருத்தல்.

ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிதல்.

குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட ஒரு சொந்த நிறுவனத்தை நடத்துதல்.

உங்களுக்கு கிடைக்கும் லாபத்தில், சமூகத்திற்கு ஏதேனும் பங்களிப்பை செய்வீர்களா? அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால், உங்களின் திட்டம் என்ன?

ஒரு சமூக நிறுவனத்தை(social enterprise) ஏற்படுத்தல்.

என்.ஜி.ஓ., உள்ளிட்ட இதர சமூக சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தல்.

சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு இயக்கங்களில் இணைந்து செயல்படுதல்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us