மீடியா பிளானிங் துறை | Kalvimalar - News

மீடியா பிளானிங் துறை

எழுத்தின் அளவு :

ஒன்றைப் பற்றி விளம்பரம் கொடுக்க வேண்டுமெனில், அந்த விளம்பரத்தை ஒரு சரியான ஊடகம் மூலமாக மேற்கொண்டால்தான், நமது விளம்பரத்தால் நன்மை கிடைக்கும். இது தொடர்பான திட்டமிடும் செயல்பாடுதான் மீடியா பிளானிங் எனப்படுகிறது.

தொலைக்காட்சி சேனல்கள், வாரப் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் புதிய டிஜிட்டல் மீடியா ஆகிய பல்வேறான மீடியா தளங்களில், மீடியா பிளானிங் என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக கருதப்படுகிறது.

மீடியா பிளானிங்கில் அடங்கியவை...

விளம்பரம் கொடுக்க விரும்பும் ஒருவரின் நிதி வசதிக்கேற்ப, அவரின் தயாரிப்பு, மக்களிடம் பரவலான வகையில் சென்று சேரும்  வகையில், பலவகையான மீடியாவை பயன்படுத்துவதாகும். ஒரு மீடியா பிளானர் என்பவர், நுகர்வோர்களின் விருப்பங்கள், அவர்கள் எந்த மீடியாவை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் மற்றும் அவர்களின் செலவிடும் தன்மை ஆகியவைப் பற்றி சிறப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எனவே, விளம்பரதாரரின் பொருள், சிறப்பான முறையில் விளம்பரப்படுத்தப்பட்டு, மக்களை சரியான வகையில் சென்றுசேரும் வகையிலான வியூகங்களை வகுக்க வேண்டும். மேலும், மீடியா பிளானர் கீழ்காணும் கேள்விகளின் பால் கவனம் செலுத்த வேண்டும். அவை,

நுகர்வோர்களாக இருப்பவர்கள் யார்?

எந்த சந்தையில் குறிப்பிட்ட பொருள் விளம்பரப்படுத்தப்பட உள்ளது?

இதற்கு மீடியாவின் சிறப்பான பங்களிப்பு என்ன?

எவ்வளவு இடைவெளிகளில் எவ்வளவு நேரம், விளம்பரமானது, திரையில் காட்டப்பட வேண்டும்?

பிரின்ட் மீடியாவாக இருந்தால், எந்த இடத்தில், என்ன நிலையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் மற்றும் எத்தனை முறை செய்யப்பட வேண்டும்?

ஒரு வெற்றிகரமான மீடியா பிளானராக மிளிர...

இத்துறையில் வெற்றிபெற, பகுப்பாய்வு திறன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இத்துறையில், கணிசமான அளவுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டியதிருக்கும். இதன்மூலமே, விளம்பரம் தருகிறவருக்கு, அவருடைய பொருள் விளம்பரமடைதல் மற்றும் விற்பனையாதல் ஆகிய இரு நிலைகளிலும் லாபகரமாக அமையும்.

எனவே, எண்களை கையாளும் விஷயத்தில் மீடியா பிளானர் தேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், மனித மன இயல்புகள் விஷயத்திலும் நல்ல அனுமானம் மற்றும் அறிமுகம் உள்ளவராக இருத்தல் அவசியம்.

கற்றல் செயல்பாடு

பல MBA படிப்புகளில், மீடியா பிளானிங் ஒரு அம்சமாக இருப்பதால், அந்த எம்.பி.ஏ., படிப்பை முடிப்பவர்களே, மீடியா பிளானராக வரும் நடைமுறை உள்ளது. அதேசமயம், MICA - Ahmedabad போன்ற கல்வி நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு மீடியா பிளானிங் படிப்புகளும் உள்ளன.

சென்னையிலுள்ள Ad Club மற்றும் கண்டலாவிலுள்ள NorthPoint ஆகிய கல்வி நிறுவனங்கள், மீடியா பிளானிங் தொடர்பான முழுநேர மற்றும் பகுதிநேர படிப்புகளை வழங்குகின்றன. இத்துறை தொடர்பான ஸ்பெஷலைஸ்டு படிப்புகள், தியரி அம்சங்களுடன், பிராக்டிகல் அம்சங்களையும் கற்றுத் தருகின்றன.

ஆராய்ச்சியின் அடிப்படை நெறிமுறைகள், தரவு பகுப்பாய்வுக்கு, குவான்டிடேடிவ் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. தொடர்புடைய தகவல்களை சேகரித்தல் மற்றும் வியூகங்களை மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அணுகுதல் மற்றும் பல்வேறான தரவுகளை பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

கேஸ் ஸ்டடீஸ் மூலமாக, தற்போது சந்தையில் இருக்கும் பொருட்களின் நிலைப் பற்றி, மிகத் தெளிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு, இப்படிப்பை படிக்கும் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிப்பில், வகுப்பறை படிப்புகள் தவிர, இன்டர்ன்ஷிப்கள் மற்றும் புராஜெக்ட்டுகள் உள்ளிட்டவையும் இடம் பெறுகின்றன. இதன்மூலம், மீடியா பிளானிங் தொழிலுக்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

மீடியா பிளானிங் துறையில், MBA முடிக்காத பல நபர்களும் நுழைகிறார்கள். மீடியா பிளானிங் துறைக்கு தேவையான திறன்களைப் பெற பல வழிகள் உள்ளன. புள்ளியியல் துறையில் பட்டப் படிப்பு அல்லது Quantitative Sciences துறையில் பட்டப் படிப்பு போன்றவை துணை புரியும். ஆனால், அதுவே கட்டாயமல்ல. விலங்கியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள்கூட, இத்துறையில் வெற்றிகரமாக திகழ்கிறார்கள்.

பணி நேரங்கள்

மீடியா பிளானிங் துறையில் நுழையும் ஒருவர், தொடக்கத்தில் நீண்ட நேரமும், பின்னர், அதைவிட நீண்டநேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும். அதாவது, 10 முதல் 12 மணிநேரம் வரை பணியாற்ற வேண்டியிருக்கும். சனிக்கிழமைகளில் வேலை செய்வது சகஜமான ஒன்று.

தற்போது நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், வீட்டிலிருந்தபடியே பெருமளவிலான பணிகளை மேற்கொள்ள முடியும். இப்பணியில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும், அந்தப் பணி அலுப்பைத் தருவதில்லை.

சம்பளம்

நபருக்கு நபர் வாங்கும் சம்பளம் வேறுபடுகிறது. சரியான தகுதியைக் கொண்டு இத்துறையில் நுழையும் ஒரு புதியவர், ஒரு ஆண்டிற்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பெறுகிறார்.

மீடியா பிளானிங் துறையின் எதிர்காலம்

தினசரி செய்தித்தாள்கள், வார பத்திரிகைகள், ரேடியோ, அவுட்டோர், டிஜிட்டல் மற்றும் மொபைல் ஆகிய பலவிதமான மீடியா அம்சங்கள் இன்று இருப்பதால், இத்துறை வலுவானதாகவும், நிறைய சவால் மிகுந்ததாகவும் உள்ளது. முன்பைவிட, இன்றைய நிலையில், இத்துறையில் அதிகமான அம்சங்கள் நிறைந்திருப்பதால், புதிதாக நுழைபவர், தனக்கு ஏற்ற ஒன்றை தேர்வுசெய்ய வேண்டியுள்ளது.

இன்றைய மீடியா துறை, பல்வேறு பிரிவுகளாகவும், ஒழுங்கமைப்பு குறைவாகவும் இருப்பதால், விளம்பரம் தருபவரின் நிதி ஒதுக்கீடு, வெற்றியாக மட்டுமே முடியும் என்று கூற முடிவதில்லை. அதில் தோல்வியும் ஏற்படலாம்.

சோசியல் மீடியாவை உள்ளடக்கிய டிஜிட்டல் மீடியா, பிறவகை மீடியாக்களை விட, வேகமாக வளர்ந்து வருகிறது. தற்சமயம், மீடியா வியூகங்கள், டி.வி, பிரின்ட் மற்றும் டிஜிட்டல் மீடியா ஆகியவற்றுக்கு முறையே 40:40:20 என்ற விகிதாச்சாரத்தில் அவ்வப்போது மாறிக்கொண்டே உள்ளது.

பிற மீடியாக்களை ஒப்பிடுகையில், செலவினங்களைப் பொறுத்து, பொருளைப் பிரபலப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயல்பாடுகளில், சோஷியல் மீடியா, அதிக பயன்விளைவு மிக்கதாக உள்ளது.

சோஷியல் மீடியா மற்றவற்றை விட, மேம்பட்டு இருந்தாலும், இந்தியாவில் அதன் பயன்பாடு இன்னும் உச்சநிலையை அடைந்துவிடவில்லை. ஏனெனில், இந்தியா இன்னும் ஒரு வளரும் நாடாக இருப்பதால், பிறவகை மீடியாக்களும் நடைமுறையில் இருப்பதை தவிர்க்க முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us