பொறியியல் படிப்போடு எம்.பி.ஏ., தகுதி | Kalvimalar - News

பொறியியல் படிப்போடு எம்.பி.ஏ., தகுதி

எழுத்தின் அளவு :

ஒரு பொறியியல் பட்டதாரியின் பணி வாய்ப்புத்திறனை, அவர் கூடுதலாக பெற்றுள்ள எம்.பி.ஏ., பட்டம் அதிகரிக்கிறது. இதற்கு ஏற்றாற்போல், பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்கள் MBA மற்றும் PGDM படிப்புகளில், அதிகளவு பொறியியல் பட்டதாரிகளைக் கொண்டுள்ளன.

பொறியியல் முடித்துவிட்டு, பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்களின் பணி உயர்வை உறுதியாக்கிக்கொள்ள, MBA படிப்பை நாடுகிறார்கள். இதன்மூலம், பணியாற்றும் நிறுவனத்தில் அவர்களின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

MBA படிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி, பரந்தளவிலான சிந்திக்கும் திறனைப் பெறுகிறார் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் அவருக்கு ஏற்படுகிறது. ஒரு பொறியியல் பட்டதாரி, தனது படிப்பின்மூலம் நல்ல தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பார். அதேசமயம், ஒரு நிறுவனத்தில் மேல்நிலைக்கு செல்ல, தொழில்நுட்ப அறிவுடன் சேர்ந்து, அவருக்கு வேறுபல தகுதிகளும் தேவைப்படுகின்றன.

குழுவில் இணைந்து வேலை செய்தல் மற்றும் பல்வேறு குழுக்களுடன் ஒத்திசைந்து பணிபுரிதல் போன்ற திறன்களை, MBA படிப்பின் மூலமாக ஒருவரால் வளர்த்துக்கொள்ள முடியும். மேலும், வணிகம் தொடர்பான பகுப்பாய்வு திறன்கள் மற்றும் வணிக கருத்தாக்கங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட திறன்களை MBA படிப்பு, ஒரு பொறியியல் பட்டதாரிக்கு வழங்குகிறது.

IIM உள்ளிட்ட புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டதாரிகளே அதிகம் இருப்பதற்கு காரணம், MBA படிப்பிற்கான CAT, XAT போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதுவது, பொறியியல் பட்டதாரிகளுக்கு எளிதாக இருப்பதுதான். ஏனெனில், பொறியியல் பட்டதாரிகள் தாங்கள் படித்ததற்கும், மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருக்கும் அம்சங்களுக்கும் அதிகளவிலான ஒற்றுமையை உணர்கிறார்கள்.

எனவே, இத்தகைய தேர்வுகளை, அவர்கள், மற்ற துறைகளிலிருந்து வரும் பட்டதாரிகளைவிட, எளிதாக வென்று விடுகிறார்கள் மற்றும் IIM உள்ளிட்ட பிரதான மேலாண்மை கல்வி நிறுவனங்களை நிரப்பி விடுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us