இளநிலை சட்டப் படிப்பு | Kalvimalar - News

இளநிலை சட்டப் படிப்பு

எழுத்தின் அளவு :

நல்ல வருமானம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகிய காரணங்கள் தவிர, வழக்கறிஞர் தொழிலின் மூலமாக, சமூகத்திற்கு பல நன்மைகளையும் செய்ய முடியும் என்பதால், அத்தொழிலின் மீதான கவர்ச்சி எப்போதுமே குறையாமல்தான் உள்ளது. சட்டப் படிப்பிற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல மவுசு உள்ளது.

முதல் நிலை

முந்தைய நாட்களில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகு, சட்டப் படிப்பை மேற்கொண்டனர். ஆனால் தற்போதைய நாட்களில், பள்ளிப் படிப்பை முடித்தவுடன், ஒருங்கிணைந்த BA LLB படிப்பை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இப்படிப்பு, சட்டத் துறையின் அனைத்து பிரிவுகளையும் படிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது.

சிவில், கிரிமினல், கார்பரேட், டேக்சேஷன், லேபர் மற்றும் எலெக்ஷன் சட்டம்  உள்ளிட்டவை அப்பிரிவுகளில் முக்கியமானவை. மேலும், கிளினிக்கல் சட்டக் கல்வி, சைபர் சட்டம், அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைசேஷனும் மேற்கொள்ளலாம்.

BA LLB படிப்பை மேற்கொள்ளும் ஒரு மாணவர், முதுநிலை சட்டப் படிப்பில் எந்தப் பிரிவை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தனது ஆர்வத்தைக் கண்டறிய இப்படிப்பு காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், அதற்கான அடித்தளத்தை இப்படிப்பு வழங்குகிறது.

இளநிலை சட்டப் படிப்பு நிலையில், ஒரு நல்ல வழக்கறிஞராக பரிணமிக்கும் வகையில், மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

நுழைவுத்தேர்வு

நாடு முழுவதுமுள்ள பல சட்டக் கல்லூரிகள், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தங்களின் சட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்கின்றன. அதேசமயம், அதற்காக நுழைவுத் தேர்வை நடத்தும் கல்வி நிறுவனங்களும் உள்ளன.

இந்தியாவிலுள்ள 14 தேசிய சட்டப் பல்கலைகளும், தங்களின் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வான CLAT தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அளவீடாக எடுத்துக் கொள்கின்றன. இத்தேர்வில் பெறும் ரேங்க் அடிப்படையில், மேற்கூறிய சட்டப் பல்கலைகளில் இடம் ஒதுக்கப்படுகிறது. மேற்குவங்க தேசிய சட்டப் பல்கலையில் ஒருவர் இடம்பெற வேண்டுமெனில், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்பெஷலைசேஷன்

இளநிலை சட்டப் படிப்பின் இறுதியாண்டின்போதே, பல்வேறான விருப்ப ஸ்பெஷலைசேஷன் பாடங்களில் தனக்கான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். முதுநிலையில், இரண்டு வகையான ஸ்பெஷலைசேஷன் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவை,

LLM in Business Laws
LLM in Human Rights Laws.

இளநிலை படிப்பிற்கு பிறகு...

இளநிலை சட்டப் படிப்பை முடித்த ஒருவர், சட்ட அமைப்புகள், கார்பரேட் நிறுவனங்களின் சட்டத் துறைகள், லாப-நோக்கமற்ற நிறுவனங்கள், என்.ஜி.ஓ.,க்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம் அல்லது உயர்கல்வியை மேற்கொள்ளலாம்.

அரசு அல்லது தனியார் அமைப்புகளில், கொள்கை ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபடலாம். கார்பரேட் மற்றும் கம்பெனி சட்டம் என்பது, சட்டத் துறையினருக்கு எப்போதுமே விருப்பமான ஒன்று. ஏனெனில், ரெகுலர் பணிநேரம் மற்றும் நல்ல வருமானம் போன்றவற்றுக்கு அங்கு பஞ்சமே இல்லை.

ஒரு கார்பரேட் வழக்கறிஞரின் பணி என்பது, பல்வேறு தொழில்துறை சார்ந்த சட்ட ஆலோசனையை வழங்குவதாகும். கார்பரேட் வழக்கறிஞர்கள் Transactional Lawyers என்றும் அழைக்கப்படுகிறார்கள். சட்டப் படிப்பை முடித்து கார்பரேட் துறையில் நுழையும் ஒருவர், தொடக்கத்தில் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை பெறுகிறார். சம்பள விகிதமானது அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

பணி வாய்ப்புகள்

* சிவில் சொசைட்டி அமைப்புகள்
* கார்பரேட் தொழில்துறை
* வங்கிகள் மற்றும் கம்பெனிகள்
* எல்.பி.ஓ.
* கல்லூரி மற்றும் பல்கலைகளில் ஆசிரியர் பணி
* உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிக்கு துணைபுரிதல்

இவைதவிர, சிவில் சர்வீஸ் தேர்வுகள் போனற் போட்டித் தேர்வுகளையும் எழுதலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us