சட்டப் படிப்பின் பிரிவுகள் | Kalvimalar - News

சட்டப் படிப்பின் பிரிவுகள்

எழுத்தின் அளவு :

பெரும்பாலான சட்ட மாணவர்கள், இளநிலைப் படிப்பை முடித்தாலே, பணி வாய்ப்புகளைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறு.

சட்டத் துறையில் மேற்கொள்ளப்படும் முதுநிலைப் படிப்பு, ஒரு மாணவர் அத்துறையில் தனது விருப்பமான அம்சங்களை புரிந்துகொள்ள உதவுவதுடன், அதில் ஸ்பெஷலைசேஷன் செய்யவும் வழியேற்படுத்துகிறது. சட்ட முதுநிலைப் படிப்பை முடித்தவர்கள், வெறும் இளநிலைப் படிப்பை முடித்தவர்களைவிட, சிறந்த பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஸ்பெஷலைசேஷன் செய்வது தொடர்பானது முதுநிலைப் படிப்பு என்பதால், அதை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, முதுநிலை சட்டப் படிப்பில் பலராலும் விரும்பப்படும் ஒரு பிரிவு என்னவெனில், அது சிவில் சட்டம்தான். ஒரு தனிமனிதரின் உரிமைகள், ஒப்பந்த விதிமீறல்கள், உயில்கள், அடமானம் மற்றும் சொத்து விவகாரங்கள் தொடர்புடையது இந்த சிவில் சட்டங்கள்.

சட்ட முதுநிலைப் படிப்பு

LLB, BA LLB போன்ற சட்ட இளநிலைப் படிப்புகளை முடித்தவர்கள், பொதுவாக, LLM எனப்படும் 4 செமஸ்டர்களைக் கொண்ட, இரண்டு வருட முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்கிறார்கள்.

சட்டத் துறையின் ஏதேனும் ஒரு பிரிவில் சிறப்புத்துவம் பெற வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், LLM படிப்பை விரும்பி மேற்கொள்கிறார்கள். அதில், சிவில் சட்டம், அரசியலமைப்பு சட்டம், குடும்ப சட்டம், வரிவிதிப்பு சட்டம், குற்றவியல் சட்டம், கார்பரேட் சட்டம் மற்றும் பணியாளர் சட்டம் உள்ளிட்ட பலவிதமான ஸ்பெஷலைசேஷன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சட்டத் துறையில் பலவிதமான ஸ்பெஷலைசேஷன் படிப்புகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்க அம்சமே. முதுநிலை சட்டப் படிப்பு, ஒரு மாணவரை பல்துறை அறிவுள்ளவராய் மாற்றுகிறது. மனித உரிமைகள், சர்வதேச வணிகம், கார்பரேட் சட்டம் மற்றும் சிவில் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள், முதுநிலை சட்ட மாணவர்கள் மத்தியில் பிரபலமாய் உள்ளன.

இந்தியாவின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், முழுநேர சட்ட முதுநிலைப் படிப்பை வழங்கிவரும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பணிபுரியும் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில், தொலைநிலை முறையில், பகுதிநேர சட்ட முதுநிலைப் படிப்பும் நடைமுறையில் உள்ளது.

டிப்ளமோ படிப்புகள்

ஸ்பெஷலைசேஷன் பெற விரும்பும் மாணவர்களுக்கு முதுநிலைப் படிப்புகளைத் தவிர, வேறுசில வாய்ப்புகளும் உள்ளன. அவை, முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் பிஎச்.டி., ஆய்வுகள். அறிவுசார் சொத்துரிமைப்(Intellectual Property Rights) பிரிவில் முதுநிலை டிப்ளமோ மேற்கொள்வது பலரின் விருப்பமாக இருக்கிறது.

ஏனெனில், வியாபாரத்தில் மேலும் மேலும் சம்பாதித்துக்கொண்டே செல்வது மட்டுமே முக்கியமில்லை. சம்பாதித்ததை பாதுகாப்பதும் சமஅளவு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், அறிவுசார் சொத்துரிமை டிப்ளமோ படிப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு வருட அறிவுசார் சொத்துரிமை படிப்பில், கண்டுபிடிப்புகள் மற்றும் பலவிதமான படைப்புகள் மீதான காப்புரிமை மற்றும் பதிப்புரிமை பெறுதல் மற்றும் அந்த உரிமையை பாதுகாப்பது குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்படிப்பின் முக்கிய நோக்கமே, அறிவுசார் சொத்துரிமை அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் குறித்து வழக்கறிஞர்களுக்கு தேவையான அறிவை வழங்குவது, அதுசார்ந்த சட்ட விஷயங்கள், தொழில்நுட்ப அம்சங்கள், வர்த்தகம் மற்றும் காப்புரிமை மீறல் ஆகியவை குறித்து பயிற்சியளிப்பது ஆகும்.

முதுநிலை சட்டத்துறை டிப்ளமோ படிப்பில் மாணவர்களை அதிகம் கவரும் இன்னொரு பிரிவு, குற்றவியல் நீதி(Criminal Justice) என்பதாகும். குற்றவாளிகளை விசாரித்தல், தன் கட்சிக்காரரை பாதுகாத்தல் மற்றும் வழக்காடுதல் உள்ளிட்ட அம்சங்களை, குற்றவியல் நீதி துறையில் மேற்கொள்வதற்கு வேண்டிய பயிற்சிகளை இப்படிப்பு அளிக்கிறது.

குற்றவியல் நீதி நிர்வாகம், குற்றவியல் நீதி அமைப்பு, குற்றவியல் நீதி அமைப்பின் மீதான சவால்கள், குற்றவியல் நீதி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவு ஆகிய அம்சங்கள் இப்படிப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, குற்றவியல் சட்டத் துறையில் நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன. சமீப காலங்களில், இந்தியாவில், முன்பைவிட, குற்றவியல் சம்பவங்கள் பெருகி வருவதால், புதிதாக சட்டம் படிக்கும் மாணவர்கள், இதுதொடர்பான ஸ்பெஷலைசேஷனை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.

பாரம்பரிய சட்டத்துறை ஸ்பெஷலைசேஷன் படிப்புகளான, சிவில், கார்பரேட் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தவிர, இன்றைய நிலையில் வேறுபல வித்தியாசமான பிரிவுகளின் மீதும், சட்ட மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

மருத்துவ சட்டம், வணிகச் சட்டம், கடல்சார் மற்றும் கப்பல் சட்டம் உள்ளிட்டவைகளை இந்திய மற்றும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் விரும்பி படிக்கிறார்கள். முதுநிலை சட்டப் படிப்பை முடித்தப் பிறகு, தங்களுக்கான சிறப்பு பிரிவில், பிஎச்.டி ஆய்வு படிப்பையும் மேற்கொள்ளலாம்.

சட்டப் படிப்பின் ஸ்பெஷலைசேஷன் பிரிவுகள்

* நிர்வாகச் சட்டம்
* நுகர்வோர் சட்டம்
* குற்றவியல் சட்டம்
* சைபர் சட்டம்
* சுற்றுச்சூழல் சட்டம்
* குடும்பச் சட்டம்
* மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி
* அறிவுசார் சொத்துரிமை சட்டம்
* சர்வதேச வணிக சட்டம்
* பணியாளர் சட்டம்
* கடல்சார் சட்டம்
* வரிவிதிப்பு சட்டம்
* வணிகம் மற்றும் கார்பரேட் சட்டம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us