நானோடெக்னாலஜி துறை | Kalvimalar - News

நானோடெக்னாலஜி துறை

எழுத்தின் அளவு :

நானோடெக்னாலஜி துறை, இந்தியாவில் வளர்ந்துவரும் துறையாக உள்ளது. மருத்துவம் முதற்கொண்டு, வேளாண்மை வரை, பல்வேறான துறைகளில் பணிவாய்ப்புகளை அளிக்கும் துறையாக இத்துறை திகழ்கிறது.

ஒரு பறக்கும் ஈ உங்களின் மீது வந்து அமரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை அடிக்க முயல்வீர்கள். அதேசமயம், நீங்கள் முயற்சி செய்தாலும், உங்களால் அடிக்க முடியாத ஈ ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். நம்ப முடிகிறதா? இது கற்பனையல்ல, நிஜம்.

சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், ஈ போன்றே ஒரு சிறிய ரோபோ ஈ தயார் செய்துள்ளனர். இந்த ரோபா ஈ, ஒரு கிராம் அளவு மட்டுமே எடைக் கொண்டது.

ஒரு நகைக் கடைக்கு செல்லுங்கள். அங்கே தங்கமானது, மஞ்சள் நிறத்திற்கு பதிலாக, சிவப்பு வண்ணத்திலோ அல்லது ஊதா வண்ணத்திலோ இருப்பதாய் கற்பனை செய்யுங்கள். அது எப்படி சாத்தியம்? ஆம், மேற்கண்ட அனைத்தும் சாத்தியம்தான். எல்லாம் நானோ டெக்னாலஜி செய்யும் மாயம்.

கடந்த 1950களில், நோபல் பரிசுபெற்ற இயற்பியல் மேதை ரிச்சர்ட் பெயின்மேன் என்பவர், இத்துறைப் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். ஆனால், 1990ம் ஆண்டுகளில்தான், நானோடெக்னாலஜி ஒரு தனித்த துறையாக பரிணாமம் பெற்றது. 2000ம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் இத்துறைக்கான முயற்சியைத் தொடங்கியது. இதன்மூலம், இத்துறை பெரியளவில் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு வழியேற்பட்டது. மேலும், ஐரோப்பிய நாடுகளிலும் இத்துறை சார்ந்த ஆய்வுகள் மேம்படத் தொடங்கின.

இந்திய நிலை

பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் என்பவரால், இந்தியாவில், இத்துறை சார்ந்த முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், இத்துறையில் ஆரம்ப காலங்களில் கால்பதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமை கிடைத்தது. ஆனாலும், இத்துறை சார்ந்த வளர்ச்சியில், இந்தியா இன்னும் அதிகதூரம் செல்ல வேண்டியுள்ளது.

இத்துறையின் பயன்பாடு குறித்த முழுமையான விழிப்புணர்வு இத்துறையில் இன்னும் ஏற்படவில்லை. தேசிய நானோ மிஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திறன் உருவாக்கத்திற்கான சிறந்த திட்டமாகும் இது.

படிப்பில் சேரும் தகுதி

ஒருவர் தனது பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்(PCM) ஆகிய பாடங்களை படித்திருந்தால், நானோ டெக்னாலஜி பட்டப் படிப்பில் சேர முடியும். பி.டெக்., நானோடெக்னாலஜி படிப்பில் சேர, பள்ளிப் படிப்பில் கணிதத்தை அவசியம் படித்திருக்க வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பில் PCM படித்தவர்கள், இத்துறையில் பி.எஸ்சி., படிப்பிலும் சேரலாம்.

அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஐ.டி., மும்பையில் பி.டெக்., நேனோடெக்னாலஜி படிப்பை மேற்கொள்ள விரும்பினால், அவர் JEE (Advanced) தேர்வை எழுத வேண்டும். இந்த 5 வருட இரட்டைப் பட்டப் படிப்பு(பி.டெக்., மற்றும் எம்.டெக்.,) ஒருவர் இத்துறையில் நிபுணத்துவம் பெற்று பணிபுரிய உதவுகிறது.

மாணவர் சேர்க்கை

அமைட்டி பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைப் போன்றவை, 4 ஆண்டு பி.டெக்., படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கென நானோடெக்னாலஜி மையங்களை வைத்துள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அறிவியல் பாடங்களில் எடுத்த கூட்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அந்தந்த கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

நானோடெக்னாலஜியில் இளநிலைப் படிப்பை மேற்கொள்ள, இந்தியா முழுவதும் பல கல்லூரிகளும், பல்கலைகளும் உள்ளன. ஐ.ஐ.டி.,கள், அமைட்டி பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை, லவ்லி புரபஷனல் பல்கலைப் போன்றவை அவற்றுள் முக்கியமானவை.

படிப்பின் பாடத்திட்டம்

இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளின் கருத்தாக்கங்களின் அடிப்படையில், இப்படிப்பு உருவாக்கப்பட்டதாகும். ஆற்றல், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சென்சார் ஆகிய பல துறைகளில் ஸ்பெஷலைசேஷன்கள் பரந்துள்ளன.

எனவே, இவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ள, நல்ல சிறப்பு பயிற்சிபெற்ற நிபுணருடைய வழிகாட்டுதலின் கீழ், உபகரணப் பயிற்சிகளைப் பெற வேண்டும். ஐ.ஐ.டி., மும்பையில் வழங்கப்படும் இத்துறை படிப்பு, தொழில்துறையுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இதன்மூலம், நானோடெக்னாலஜி ஆராய்ச்சி மேம்படுத்தப்பட்டு, வணிகமயமாக்கப்படும்.

பல கல்வி நிறுவனங்கள், மெட்டீரியல் சயின்சஸ் மற்றும் பொறியியல் துறைகளில், பி.எஸ்சி., மற்றும் பி.டெக்., படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகள், நானோடெக்னாலஜி கருத்தாக்கங்களை, ஒரு interdisciplinary அறிவியலாக கற்பிக்கின்றன.

Interdisciplinary Science

நானோசயின்ஸ் என்பது, உண்மையில் ஒரு Interdisciplinary Science துறையாகும். படிப்பின் தன்மை மற்றும் கட்டமைப்பானது, ஸ்பெஷலைசேஷன் தொடர்பானதாகும். இத்துறையின் 3 முக்கியப் பிரிவுகள் நானோமெட்டீரியல்ஸ், நானோஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோபயோடெக்னாலஜி.

இளநிலை அளவில் நீங்கள் படிக்கும் சில பாடங்களாவன, Solid State Physics, Foundation of Nanoscale Science and Technology, Electronic and Optical properties of Material, Material Science, Non - conventional enery sources, Nano Measurement, Automic and Electronic Structure of matter, Experimental methods in Nanotechnology, Characterization Tools for Nano Materials, Bioengineered Nanomaterials, Generic Methodology for Nanotechnology etc.,

ஒருவரை தொழில்துறைக்கு ஏற்ற வகையில் சிறப்பான முறையில் தயார்செய்ய, தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

பட்டம் பெற்ற பிறகு...

நாட்டின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நானோசயின்ஸ் துறையில் எம்.டெக்., படிப்பை வழங்குகின்றன. இப்படிப்பை மேற்கொள்ள நானோடெக் அல்லது நானோசயின்ஸ் பிரிவில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நீங்கள், பி.இ., அல்லது பி.டெக்., அல்லது அடிப்படை அல்லது பயன்பாட்டு அறிவியலில் முதல் வகுப்பில் முதுநிலைப் படிப்பை முடித்திருந்தால் போதும்.

ஸ்பெஷலைசேஷன் பிரிவைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், அறிவியல் அல்லது பொறியியல் பட்டதாரிகளை தேர்வுசெய்து கொள்கின்றன. தனியார் பல்கலைகள் பெரும்பாலும் நானோசயின்ஸ் பிரிவில் முதுநிலைப் படிப்பை வழங்குகின்றன.

பொதுவாக, எம்.எஸ்சி., நானோசயின்ஸ் படிப்பு என்பது ஒரு ஆராய்ச்சிப் படிப்பாகும். இதில் சேர, பி.டெக்., முடித்திருக்கலாம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது துணைநிலை அறிவியலில் அடிப்படை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

எம்.டெக்., - எம்.எஸ்சி., படிப்பு

நானோசயின்ஸ் பிரிவில், ஒருவர் எம்.எஸ்சி., படிப்பை மேற்கொள்வதைவிட, எம்.டெக்., படிப்பை மேற்கொள்வதே சிறந்தது. ஏனெனில், இப்படிப்பில்தான் பெல்லோஷிப் அல்லது உதவித்தொகை போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் முதுநிலைப் படிப்பு

நானோசயின்ஸ் துறை இந்தியாவில் வளர்ந்துவரும் ஒரு துறையாகும். வெறும் 15 கல்லூரிகள் மட்டுமே இத்துறையில் படிப்புகளை வழங்குகின்றன. பெங்களூரிலுள்ள மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், இப்படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சிறந்த இடமாகும். இக்கல்வி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகிறார்கள்.

நல்ல திறன்வாய்ந்த மாணவர்கள், இங்கே, ஒருங்கிணைந்த எம்.எஸ் / பிஎச்.டி., படிப்பில் சேரலாம். ஆரம்ப நிலையில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் மாதம் ரூ.8,000 உதவித்தொகையாக பெறுகிறார் மற்றும் அந்தத் தொகை காலப்போக்கில் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சில என்.ஐ.டி.,கள் வழங்கும் இத்துறையின் எம்.டெக்., படிப்புகள் சிறப்பானவை. இதில் சேர, ஒருவர் GATE / CSIR/ JRF ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேறியிருக்க வேண்டும். என்.ஐ.டி.,களில் ஐ.ஐ.டி.,களைப் போன்ற வசதிகள் இருக்காது, இருந்தாலும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள். என்.ஐ.டி.,யில் படிப்பை முடித்தவர்கள், எப்போது வேண்டுமானலும் ஐ.ஐ.டி.,களில் பிஎச்.டி., படிப்பில் சேரலாம்.

அம்ரிதா, சாஸ்த்ரா மற்றும் அமைட்டி போன்ற தனியார் பல்கலைகள் இப்படிப்பிற்கான நல்ல வசதிகளை வழங்குகின்றன. ஆனால் செலவு மிகவும் அதிகம். இந்த கூடுதல் செலவை, புராஜெக்ட் மற்றும் ரிசர்ச் அசோசியேட் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சம்பாதித்து ஈடுசெய்யலாம். ஆனால், இந்த தகுதிநிலைகள், பிஎச்.டி., படிப்புகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியவை.

வெளிநாடுகளின் சிறந்த கல்வி நிறுவனங்கள்

முதுநிலை அளவில் நானோடெக்னாலஜி படிக்க சிறந்த வெளிநாடு எதுவெனில், அது அமெரிக்காதான். இத்துறை தொடர்பான 5 உலக தரத்திலான மையங்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்களான ஹார்வர்டு, கார்னெல், நார்த் வெஸ்டர்ன், கொலம்பியா மற்றும் ரெனெசெல்லர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு மையமும் ஒரு சிறப்பு அம்சத்தில் கவனம் செலுத்துகிறது.

டிரெஸ்டன் போன்ற சில மையங்களின் மூலம், ஜெர்மனியும் தன் பங்கிற்கு உலகத் தரத்தினாலான நானோசயின்ஸ் கல்வியை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டனைப் பொறுத்தவரை, இம்பீரியல் கல்லூரி மற்றும் யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன் போன்றவை இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்கான சிறந்த கல்வி நிறுவனங்கள்.

பணி அம்சங்கள்

மருத்துவம் தொடங்கி வேளாண்மை வரை, பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றன. நானோ தொழில்நுட்பமானது, தற்போது இருக்கும் அம்சங்களுக்கு தூய்மையான மற்றும் பசுமையான மாற்றுகளை தருகிறது. நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

உதாரணமாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் தொழில்நுட்ப துறையானது, கடந்த 2007ம் ஆண்டு ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் இத்துறை சார்ந்த கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்க, நானோ மிஷன் என்ற செயல்பாட்டை மேற்கொண்டது. டில்லியிலுள்ள TERI அமைப்பு, நானோ டெக்னாலஜியை, சுற்றுச்சூழலை கெடாமல் வைத்திருக்க உதவக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதாக கருதுகிறது.

பணி விருப்பங்கள்

உங்களின் ஆர்வம் மற்றும் நீங்கள் எதில் ஸ்பெஷலைசேஷன் செய்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து வாய்ப்புகள் மாறுபடுகின்றன. இத்துறையில் படிப்பை முடித்தவர்கள், விஞ்ஞானிகள் அல்லது எக்சிகியூடிவ் மேனேஜர்களாக பணியில் சேர தகுதி படைத்தவர்கள். அதேசமயம், ஒரு நிபுணத்துவ நிலையிலான பணி வாய்ப்புகளைப் பெற வேண்டுமெனில், இத்துறையில் ஸ்பெஷலைஸ்டு அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆராய்ச்சி

இத்துறையில் இளநிலைப் படிப்பை முடித்தப் பின்னர், முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகளில் சேரும்போது, ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பல மையங்களில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை, ஐ.ஐ.எஸ்சி., பெங்களூர், சி.ஆர்.என்.டி.எஸ் - ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., ரூர்கி, பாபா ஆட்டோமிக் ஆராய்ச்சி மையம், மும்பை போன்றவை அந்த மையங்களில் குறிப்பிடத்தக்கவை.

வளர்ந்துவரும் அம்சங்கள்

நானோமெட்டீரியல்ஸ், நானோஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோபயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில், அதிகளவில், நன்கு பயிற்சிபெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், முதல் இரண்டு பிரிவுகளில் மிக அதிகளவில் பணி வாய்ப்புகள் உண்டு.

இந்த துறைகள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஏரோஸ்பேஸ் மற்றும் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கோட்டிங் மற்றும் இணைப்புகளை(Composites), 100 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்கின்றன. எனவே, மெட்டீரியல் அறிவியல் பிரிவில் எம்.டெக்., அல்லது பிஎச்.டி., ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு மிகச் சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.

பணி வாய்ப்புகள் என்பவை, நானோ மெட்டீரியல்களை மேம்படுத்தும் நிறுவனங்களில் கிடைக்கலாம் அல்லது அப்ளிகேஷனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்பெஷலிஸ்ட் பணி வாய்ப்பை பெறலாம்.

அதிகளவிலான சாத்தியக்கூறுகள்

நானோடெக்னாலஜியைப் பொறுத்தவரை, Nanomedicine, non-invasive surgery, sutureless surgical applications, targeted surface medical applications and nanoprobes etc., ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுள்ளன. சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுதல், ஒரு மருந்தை ஆபத்து நிறைந்த ஒரு செல்லாக மாற்றுதல், பயோசிப் வடிவத்தில் சென்சார்களை உருவாக்குவதில் இருந்து, ரசாயன கேடயமாக பயன்படும் வகையில் கார்மெண்ட்டுகளை உற்பத்தி செய்தல் வரையில், இத்துறையில் பலவிதமான சாத்தியக் கூறுகள் உள்ளன.

அதேசமயம், மேற்கண்ட சோதனைகளில் விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us