பொறியியல் துறையின் புதிய சுவாரஸ்யமான அம்சங்கள்! | Kalvimalar - News

பொறியியல் துறையின் புதிய சுவாரஸ்யமான அம்சங்கள்!

எழுத்தின் அளவு :

இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் சரியான பணி வாய்ப்புகளை பெற முடிவதில்லை என்று கூறப்பட்டாலும், உலகளவில், பொறியாளர் என்பது ஒரு மதிப்பும், வருமானமும் மிகுந்த தொழில்தான்.

கடந்த 10 ஆண்டுகளாக, பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரித்துள்ளதோடு மட்டுமின்றி, தொழில்நுட்பத்தின் உபாயத்தால், அத்துறையில் பல புதிய புதிய அம்சங்களும், அதன்மூலமான பணி வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

ஒரு கூண்டுக்குள் சிக்கிக் கொண்டு, பார்த்த வேலையையே பார்க்க விரும்பாமல், புதிய விஷயங்களில் சாதிக்க விரும்பும் நபர்களுக்கான சில வாய்ப்புகளைப் பற்றிய விபரங்களை இக்கட்டுரைக் கொண்டுள்ளது.

3D பிரின்டிங்

3D பிரின்டிங் என்பது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு நவீன பணி துறைகளிலும் விரவியிருக்கும் ஒன்று. இந்தியாவின் சில பெரிய தொழில் நிறுவனங்கள், டிசைன் விசுவலைசேஷன் மற்றும் ஆப்டிமைசேஷன் ஆகியவற்றுக்காக இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இந்த தொழிலின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், உற்பத்தியை, சந்தைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அருகில் கொண்டு செல்கிறது. எனவே ஒருவர், உற்பத்தி setup கொண்ட, பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்பு தொழில்துறைகளும் கூட, நகைகளை நவீன எதிர்பார்ப்பு மற்றும் சந்தை நிலவரத்திற்கேற்ப வடிவமைக்க, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

எனர்ஜி அமைப்புகள் (systems)

எனர்ஜி அமைப்பு பொறியியல் என்பது, ஒரு பன்முகத்தன்மை கொண்ட படிப்பாகும்.  பாரம்பரிய நிலத்தடி எரிபொருள் தீர்ந்துவரும் நிலையில், அதற்கான மாற்று எரிபொருளைக் கண்டறிதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவை, இப்படிப்பின் முக்கிய நோக்கம்.

எனர்ஜி ஜெனரேஷன், கன்வெர்ஷன், எலக்ட்ரிகல் பவர் சிஸ்டம்ஸ் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட் ஆகிய பல்வேறான துறைகளில், பொறியியல் அறிவு மற்றும் திறன்களை, இப்படிப்பு வழங்குகிறது.

மேலும், எனர்ஜி கன்வெர்ஷன் தொடர்பாக ஏற்படும் உலகளாவிய மற்றும் உள்ளூர் அளவில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வகையில், மாணவர்களுக்கு தேவையான அறிவை வழங்குகிறது.

UAV டெவலப்மென்ட்ஸ்

ஆர்டர் கொடுக்கப்பட்ட பொருட்களை, வாடிக்கையாளர்ளுக்கு விரைவான முறையில் டெலிவரி செய்ய, சில முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பிரபல பெயரிடப்படாத வான்வளி வாகனம்தான், சுருக்கமாக UAV எனப்படுகிறது.

UAV துறையில், பணி வாய்ப்புகள், அதிகளவில் வளர்ந்து வருகின்றன. பல்வேறான நோக்கங்களுக்காக UAV பயன்பாடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. சிவில் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காக aerial imagery, தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து போராடுதல், சுற்றுச்சூழல் படிப்புகள், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதிகளை ஆய்வுசெய்தல் மற்றும் தீவிரமான செயல்பாடுகள் தேவைப்படும் பணிகள் ஆகியவற்றுக்கு UAV அப்ளிகேஷன்ஸ் தேவைப்படுகின்றன.

அட்வான்ஸ்டு மெட்டீரியல்கள்

இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் மூலமாக உருவான துறைதான் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்.

அட்வான்ஸ்டு மெட்டீரியல்கள் தொடர்பான விவரிப்பு, பகுப்பாய்வு மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலமாக, அவற்றின் உண்மை அம்சங்களை அறிதல் ஆகியவை தொடர்பானது இந்தப் படிப்பு.

மருத்துவத் துறையில் பயன்படுத்தக்கூடிய, Nuclear magnetic resonance (NMR) போன்ற உயர்தொழில்நுட்ப சாதனங்களில், அட்வான்ஸ்டு மெட்டீரியல் இன்ஜினியரிங் பயன்படுத்தப்படுகிறது. இது இன்னும் பெரியளவில் பிரபலமடையாத படிப்பாக இருந்தாலும், உலகின் சில பிரபலமான பல்கலைக்கழகங்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் மற்றும் இதர தொடர்புடைய நபர்களுக்காக, இத்துறையில், முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகின்றன.

Fuel Cells

கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின் ஒரு முக்கிய பிரிவாக, இன்றைய நிலையில், Fuel Cell வளர்ந்து வருகிறது. ஆக்சிஜன் அல்லது இதர ஆக்சிடைசிங் ஏஜென்ட் உடன், ஒரு வேதி வினை மூலமாக, எரிபொருளை, மின் ஆற்றலாக மாற்றுவது குறித்த அறிவுதான் இந்த துறையாகும்.

புதிய நவீன தொழில்நுட்பங்களின் மூலம், குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி, அதிகளவிலான வெப்ப சக்தியை உற்பத்தி செய்வது, இந்த தொழில்நுட்பத்தின் ஒரு அம்சமாகும்.

இந்த தொழில்நுட்ப பிரிவை, தங்களுக்கான துறையாக வரித்துக் கொண்டிருக்கும் பொறியாளர்கள், எனர்ஜி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

நானோடெக்

மெட்டீரியல்ஸ் சயின்ஸ், இன்ஜினியரிங், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய துறைகளில் நன்மையளிக்கும் ஒரு பல்துறை பயன்பாடு கொண்ட தொழில்நுட்பமாக, நானோ டெக்னாலஜி திகழ்கிறது.

நானோஸ்கேலில், மெட்டீரியல்களின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதே நானோடெக்னாலஜி ஆகும். இத்துறையில், பட்டம் பெறுவதென்பது, பொறியாளர்கள் நடைமுறைக் கல்வியைப் பெறும் ஒரு செயல்பாடாகும். அடிப்படை வேதியியல், இயற்பியல் மற்றும் நானோஸ்டரக்சர் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைமுறை அறிவைப் பெற முடிகிறது.

ரோபோடிக்ஸ்

ரோபோட்டுகள், இன்றைய நிலையில், குறைந்தளவு சேவையை மனிதனுக்கு வழங்கி வந்தாலும், எதிர்காலத்தில், மனித வாழ்க்கையில், ரோபோட்டுகளின் பயன்பாடு பெரியளவில் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

ரேபோட்டுகளை உருவாக்குவது செலவு மிந்த செயல்பாடாக இருந்தாலும், அத்துறையில் இருக்கும் பெரிய எதிர்கால வாய்ப்பிற்காக, அத்துறையை நோக்கி செல்வதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.  எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய 3 துறைகளின் கோட்பாடுகளை ஒன்றாக இணைத்த தொழில்நுட்பத் துறைதான் ரோபோடிக்ஸ். மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் பல அறுவை சிகிச்சைகளில், நுட்பம், உயர்தரம் போன்ற அம்சங்களின் பொருட்டு, ரோபோக்களின் உதவி பெறப்படுகிறது.

மாதிரி(simulation) உபகரணங்கள்

சிமுலேஷன் தொழில்நுட்பம் என்பது, குறிப்பிட்ட கணித பார்முலாக்கள் மற்றும் புரோகிராம்கள் மூலமாக, மேம்பட்ட செயல்முறையை மீண்டும் பெறும் வகையில், உருவாக்கப்பட்ட ஒரு பொறியியல் கருத்தாக்கமாகும்.

சிமுலேஷன் சாப்ட்வேர் என்பது, ஒரு உபகரணத்தை வடிவமைக்க, பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதிக செலவில்லாமல், கண் கண்ணாடிகள் போன்ற பொருட்களை, வடிவமைக்க முடிகிறது. சிமுலேஷன் துறையை தேர்வுசெய்ய விரும்பும் பொறியாளர்களுக்கு செழிப்பான எதிர்காலம் உண்டு.

ஏனெனில், மருத்துவம், விளையாட்டு, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில், இத்துறைக்கென்று ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துறையின்பால் ஆர்வமுள்ள மாணவர்கள், இப்படிப்பை தாரளமாக தேர்வு செய்யலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us