எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை படிப்பின் முக்கியத்துவம்! | Kalvimalar - News

எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை படிப்பின் முக்கியத்துவம்!

எழுத்தின் அளவு :

கிராமப்புற மேலாண்மையில் எம்.பி.ஏ. படிப்பதென்பது, பலரும் நினைப்பதுபோல அல்ல. வயலில் நடைபெறும் தினசரி நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வது மட்டுமல்ல அந்த எம்.பி.ஏ.

திட்டமிடுதல், அமைப்பாக்குதல், வேளாண் வணிகத்தை நிர்வகித்தல் மற்றும் மேற்கண்டவை தொடர்பான இதர அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் "எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை". இன்றைய உலகில், இந்தவகை எம்.பி.ஏ. படிப்பின் தேவை அதிகமாக உள்ளது.

படிப்பு

எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை என்பது, கிராமப்புற சூழலுக்குத் தேவையான மேலாண்மை அறிவை உள்ளடக்கியதாகும். இந்திய மக்கள் தொகையில், ஏறக்குறைய 70% மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். ஆனால், அந்தப் பகுதிகளின் வளங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை அல்லது சுரண்டப்படுகின்றன.

எனவே, Rural manager எனப்படுபவர், அத்தகைய வளங்களை கண்டறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதற்கு உதவுகிறார். அவர், தான் கற்றது மற்றும் கற்றுக் கொண்டிருப்பது ஆகிய அனைத்தையும், நடைமுறைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறார்.

ஊரகப் பகுதி மக்களின் வாழ்வும், வணிகமும் மேம்படும் வகையில், அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, தேவையான மேற்பார்வையையும், இவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியா ஒரு வேளாண்மை நாடு என்பதற்காக மட்டுமின்றி, இத்துறையில் இன்னும் பல்வேறான  பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள், எதிர்காலத்தில் உருவாகவுள்ளன என்பதற்காகவும், எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படிப்பின் மூலம் கிடைக்கும் பயன்கள்

கொள்கை மதிப்பீடு, வேளாண்மை ஆய்வு மற்றும் வேளாண் வணிகம் ஆகியவை, தொழில்துறையை முன்னேற்றுவதில் பங்காற்றுகின்றன.

நாட்டின் மிக முக்கிய வாழ்க்கை ஆதாரமான கிராமப்புறமும், அதன் மக்களும் முன்னேற உதவுவதன் மூலம், ஒரு தேசத்தினுடைய உண்மையான வளர்ச்சிக்கு உதவி புரிகின்ற திருப்தியை, இத்துறை நிபுணர் பெறுகிறார்.

உயர்கல்வி

இத்துறை சார்ந்த பிஎச்.டி. படிப்பை கீழ்கண்ட நிறுவனங்களில் மேற்கொள்ளலாம். அவை,

* அமைட்டி ஸ்கூல் ஆப் ரூரல் மேனேஜ்மென்ட், நொய்டா
* இன்ஸ்டிட்யூட் ஆப் ரூரல் மேனேஜ்மென்ட், ஆனந்த்
* டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்சஸ்

இவைதவிர,

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ரூரல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனமும், மேற்கண்ட எம்.பி.ஏ. படிப்பை கற்பதற்கான ஒரு முக்கிய கல்வி நிறுவனமாகும்.

பணி வாய்ப்புகள்

தொழில்நுட்ப வளர்ச்சி, ஊரகப் பகுதியிலுள்ள வளங்கள் கண்டறியப்படுதல் மற்றும் எதிர்காலத்தில் அதிகளவிலான வளங்கள் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை, Rural manager -களின் தேவையை பெரியளவில் அதிகரிக்கும்.

இந்திய அரசாங்கம், அரசுசாரா அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறியளவிலான தொழில் துறைகள் ஆகியவற்றுக்கு, Rural manager - களின் சேவை தேவையான ஒன்றாக இருக்கிறது.

எம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை படிப்புத் தகுதியுடன், பைனான்ஸ் பின்னணியும் கொண்ட நபர்களுக்கு, வங்கிகள் மற்றும் இதர நிதிசார் நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us