சீனா | Kalvimalar - News

சீனாஏப்ரல் 25,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்களை சமீப காலத்தில் கவர்ந்துள்ள முக்கிய நாடு சீனா. அண்டை நாடாக இருப்பதாலும் படிப்புச் செலவுகள் சற்றே குறைவாக இருப்பதாலும் சீனா நம்மை ஈர்த்திருப்பதில் ஆச்சரியமில்லை.

சீனக் கல்வியைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு உதவும் சில டிப்ஸ்...

உறவுகளை மேம்படுத்துவது: சீனாவில் படிக்க இந்திய மாணவர்கள் செல்லும் போது பிற நாட்டினருக்கான தனி தங்கும் விடுதி, மொழி வேறுபாடு, கலாசார மாற்றம் போன்ற காரணங்களால் சீன மாணவர்களுடன் நம் மாணவர்கள் கலந்து பழகுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உண்மையில் சீன மாணவர்கள் பிற நாட்டினரோடு கலந்து பழகுவதை பெரிதும் விரும்புகிறார்கள்.

அவர்களது ஆங்கில மொழி மேம்பாட்டுக்கு இது உதவும் என்பதால் இந்த கூடுதல் ஆர்வம் காணப்படுகிறது. எனவே சீன மாணவர்களோடு நட்பாகப் பேசிப் பழக உங்களை மனதளவில் தயார் செய்து கொள்ளுங்கள். அங்கு நடைபெறும் சீன சமூக மற்றும் கலாச்சாரப் பொழுதுபோக்குகளில் கலந்து கொள்வதன் மூலமாக சீன நடைமுறை வாழ்வுக்கு உங்களை எளிதாக தயார் செய்து கொள்ள முடியும்.

படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது: சீனாவிற்கு உயர்படிப்புக்காகச் செல்லும் போது சீனப் பல்கலைக்கழகங்களைப் பற்றிய தகவல்களை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். சீனப் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக மேம்பட்டுள்ளதால் இது சிரமமான காரியமல்ல. சீனப் பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் தகவல்களைக் கொண்டுள்ளன.

www.study-in-china.org தளத்தில் சீனக் கல்வி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெறலாம். சீன மொழியின் அடிப்படை வார்த்தைகளை அறிந்திருந்தால் நமது கல்வி நோக்கம் எளிதாக நிறைவேறும்.

சீனப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தேர்வு செய்வதற்கு முன்பு அங்கு வழங்கப்படும் படிப்புகளின் பாடத்திட்டம், இருப்பிடம் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அங்கு எவ்வளவு வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனிமை உணர்வு, மொழிப் பிரச்னை போன்றவற்றை நாம் சந்திக்க வேண்டும்.

சீன மொழி அடிப்படை வகுப்புகள் இந்தியாவிலேயே நடத்தப்படுகின்றன. 30 முதல் 80 மணி நேரப் பயிற்சியாக இது தரப்படுகிறது. இந்திய சீன சாம்பர் அமைப்பு இதை நடத்துகிறது.

இணையதளம் மூலமாக பல தகவல்களை ஒருவர் பெற முடியும் என்றாலும் கலந்துரையாடலுடன் கூடிய பல நேரடிப் பயிற்சி வகுப்புகளும் பெரிய நகரங்களில் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. வெளிநாட்டு மாணவர்களுக்காக நடத்தப்படும் அடிப்படை ஆயத்தப் பயிற்சி வகுப்புகளில் இணைவதன் மூலமாக கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் அதிர்வுகளின் வீச்சைப் பெருமளவு தடுக்க முடியும்.

மும்பையிலுள்ள சீன தூதரகத்திற்கு நேரடியாகச் சென்றும் சீனக் கல்வி தொடர்பான முழுத் தகவல்களையும் பெற முடியும். மும்பையிலுள்ள வித்யாவிகார் மையத்தில் சீனா சென்று படித்து வந்தவர்கள் தங்களது அனுபவங்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இதிலும் நமக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us