தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா? | Kalvimalar - News

தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா?மே 22,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில ஆண்டுகளாக பல ஊர்களிலும் ஜாப் பேர் எனப்படும் ஓட்டு மொத்த வேலை தருவோர் மேளாக்களை நடத்தி வருகின்றனர். தற்போது இறுதியாண்டு படித்து வருபவரும் படித்து முடித்து பணி வாய்ப்புகளைத் தேடி வருபவரும் இவற்றுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று தங்களது எதிர்காலத்தைத் தேடுவதைக் காண்கிறோம். இதில் கலந்து கொண்டு வேலை பெற சில தகவல்கள்..

பல ஜாப் பேர்கள் தற்போது முன்பதிவு முறையைக் கடைப்பிடிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட ஊர்களில் குறிப்பிட்ட நாளில் இவை நடத்தப்படும் என்றாலும் கூட தபால் மூலம் அல்லது போன் மூலம் அல்லது இமெயில் மூலம் உங்களது பெயரை பதிவு செய்து கொள்வதை சில கம்பெனிகள் வலியுறுத்துகின்றன. இதனால் தேவையில்லாமல் கூட்டத்தில் அல்லாடுவது தவிர்க்கப் படுகிறது. எனவே முன்பதிவு தேவையா என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஓரு ஜாப் பேரில் பல கம்பெனிகள் கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. இது போன்ற மேளாக்களில் நேரில் போய் கலந்து கொள்ளும் போது உங்களுடைய எதிர்காலத்திற்கு உகந்த கம்பெனிகள் இருப்பதைப் போலவே உதவாத கம்பெனிகளும் இருக்கக் கூடும். எனவே ஓரு மேளா பற்றிய தகவல் அறிந்தவுடனேயே அதில் கலந்து கொள்ளும் கம்பெனிகள் பற்றிய தகவல்களை சேகரித்து பட்டியலிட்டு தக்க ஆலோசனையின் அடிப்படையில் தரம் பிரித்து தேவையானவற்றின் தேர்வு முறைகளில் மட்டும் கலந்து கொள்வதும் அவசியம் தான்.

உங்களது பயோடேட்டாவை திறமையாக தயாரிப்பதே முக்கியம். நளினமாக உங்களைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டு உங்களது திறன்களும் பலங்களும் எடுத்துச் சொல்லப்படும் வண்ணம் தயாரிக்கப் பட்டுள்ள பயோடேட்டாக்கள் அவற்றில் கலந்து கொள்ள மிக அவசியம். ஓரே போன்ற தன்மையுள்ள பணிகளுக்கு மட்டும் விண்ணப் பிக்காமல் பல வித வேலைகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கேற்ப 2 அல்லது 3 வகைகளில் உங்களது பயோடேட்டா தயாரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் அணிவது போல முறையான ஆடை என்பது இதற்குச் செல்பவர்களுக்கும் அவசியம். பல கம்பெனிகள் இது போன்ற மேளாக்களிலேயே தங்களுக்கான எதிர்கால ஊழியர்களை உறுதி செய்து கொள்வதால் நேர்த்தியான உடை மிக அவசியமாகும். கண்காட்சி பார்க்கப் போவது போல டீ சர்ட்டும் பிற கேஷுவல் உடைகளையும் அணிவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

உங்களது திறன்களை வெளிப்படுத்த தரப்படக்கூடிய நேரம் பொதுவாக 2 முதல் 5 நிமிடம் தான் என்பதால் அதற்குள் உங்களை உங்கள் திறன்களை தகுதிகளை வெளிப்படுத்தக் கூடிய சாவகாசம் மிகக் குறைவே. எனவே இதற்குள் அவற்றை வெளிப்படுத்தக்கூடிய வகையில் முன்கூட்டியே கேள்விகளை எழுதி அதற்கேற்ற பதில்களையும் தயார்படுத்திக் கொள்வது முக்கியம். இதில் கலந்து கொண்டதன் அவசியம் என்ன போன்ற கேள்விகளுக்கு ஏற்ப சிறந்த பதில்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முடிக்கும் போது எப்போது அடுத்த கட்டத் தேர்வு முறைகளில் கலந்து கொள்ளலாம் என்று நீங்கள் கேட்டால் அது இன்னமும் சிறப்பான பலனைத் தரும் என்றே வேலை வாய்ப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us