மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்கள்-(2)

எழுத்தின் அளவு :

மாணவர்களின் கேள்விகளுக்கு கலாமின் பதில்கள் இதோ!



இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறார். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகுமா?
(வனிதா, அசோக் நகர், சென்னை,
 திவ்யா, ஸ்ரீ அகோபில மட ஓரியண்டல் பள்ளி, சென்னை
 முகில் வண்ணன், காருண்யா பல்கலை. கோவை
 மோகன் சிவானந்தம், புதுச்சேரி பல்கலை.,
 சண்முக சுந்தரம், திருவள்ளுவர் நகர், ராஜபாளையம்)


டாக்டர் அப்துல் கலாம்: கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் 22 கோடி மக்களை கைதுவக்கி விடவும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே நம் நாட்டின் முன் உள்ள சவால். அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் கடின உழைப்பால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.



கல்வி, சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் மதிப்பு கூடுதல் சேவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்போதுள்ள தனிநபர் சராசரி வருமானத்தை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சியை உள்ளடக்கிய உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தலைவர்கள் செயல்பட வேண்டும்.


 


இதுபோன்று உழைத்தால் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும். அதுவரை நம்வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், நகர்ப்புறத்தையும், மாநிலத்தையும் மற்றும் தேசத்தையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்துதான் சுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.



வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவது எப்படி... இலக்குகளை அடைவதில் சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன. இவற்றை கடந்து சாதிப்பது எப்படி?
(செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
 பிரீத்தா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுரை
 புருஷோத்தமன், பாங்காக், தாய்லாந்து
 ஐஸ்வர்யா, டி.ஏ.வி. பள்ளி, சென்னை
 சுப்பையா, லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி
 ஐஸ்வர்யா, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி, சென்னை
 சுரேஷ்கிருஷ்ணா, ஐ.சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட், சிவகாசி)


டாக்டர் அப்துல் கலாம்: கீழ்கண்ட நான்கு விஷயங்களை நீங்கள்
கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1. உங்கள் வாழ்க்கையின் தெளிவான லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. அது தொடர்பான உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அதை அடைவதற்காக மிகக் கடினமாக உழையுங்கள்.
4. விடாமுயற்சி அவசியம். பிரச்னை உங்களை தோற்கடிக்கக்கூடாது. நீங்கள்தான் பிரச்னைகளை வெல்ல வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் லட்சியத்தை அடைவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கண்டிப்பாக லட்சிய சிகரத்தை தொடுவீர்கள். எந்த பணியானாலும் அதை மிகச்சிறப்பாக செய்து முடியுங்கள். அதன் மூலம் நீங்கள் தேச வளர்ச்சிக்கு பாடுபடுகிறீர்கள்.




இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்படும்?


(சவும்யா, கேந்திரிய வித்யாலயா,  அசோக்நகர், சென்னை.
 பாலாஜி கவுலா, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை.
 மன்னர் மன்னன், அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால்
 காசிநாதன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுவரி, சிவகாசி
 நெல்சன், பயனியர் கலை அறிவியல் கல்லுவரி, கோவை
 ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி)



டாக்டர் அப்துல் கலாம்: யுரேனியம் அணு உலைகள் மூலமாக நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. தற்போது யுரேனிய அணு உலைகள் 55 சதவீத திறனையே வெளிப்படுத்துகின்றன.



உயர்திறன் கொண்ட அணு உலைகளுக்குத் தேவையான தோரியம் எரிபொருளுக்கு வெளிநாடுகளை சாராமல் நம் ஆராய்ச்சியின் வழியாக சொந்தக் காலில் நிற்கும் நிலை வரும் வரையில் யுரேனியம் நமக்குத் தேவைப்படும்.


 


2030ம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே நம் லட்சியம். பூமியிலிருந்து எடுக்கப்படும் மரபுசார்ந்த எரிபொருள் குறைந்துவருவதால், சூரிய சக்தி, அணுசக்தி மற்றும் உயிரி எரிபொருள் வழியாகவும் காற்றாலை, ஹைட்ரஜன் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல பிற சக்தி மூலமாகவும் நாம் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். எனவே அணு எரிபொருள் எங்கு கிடைத்தாலும் அதை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது.


 


இதே கேள்வியை இளைஞர்களும் பொதுமக்களும் என்னிடம் இமெயில் வழியாக கேட்டு வருகிறார்கள். அந்த கேள்விகளுக்கு பலமுறை நான் மீடியா வாயிலாக பதில் அளித்திருக்கிறேன். இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் அளித்துள்ள விரிவான விளக்கம் பில்லியன் பீட்ஸ் இபேப்பரின் அடுத்த இதழில் வெளியாகிறது. www.abdulkalam.com இணையதளம் வழியாக இந்த இதழை நீங்கள் படித்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us