இந்தியாவில் தரமதிப்பீடு இல்லாத 5 ஆயிரம் கல்லூரிகள் | Kalvimalar - News

இந்தியாவில் தரமதிப்பீடு இல்லாத 5 ஆயிரம் கல்லூரிகள்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு மாநில கல்வித் தணிக்கை மற்றும் தரமதிப்பீட்டு மன்றத்தின் தலைவர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எஸ்.பி.தியாகராஜன் தினமலர் கல்விமலருக்கு அளித்த பேட்டி:

இதுவரை இல்லாத வகையில், 11வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வித் துறைக்கு மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. உயர்கல்வி விரிவாக்கம்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் உயர்கல்வி பெறுதல், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற முக்கிய காரணங்களுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரமான ஆசிரியர்களின் வகுப்புகளை நாட்டின் அனைத்து பகுதி மாணவ, மாணவிகளும் கவனிக்கும் வகையில் நேஷனல் நாலெட்ஜ் நெட்வொர்க் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு மாநில பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட வேண்டும். இணைப்பு வழங்கியுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதனை பல்கலைக்கழகங்கள் விரிவுபடுத்த வேண்டும். மத்திய கல்வி நிறுவனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அதன் தரத்தை மட்டுமே உயர்த்தும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கல்வித் தரமும் உயர்ந்துவிடாது.

மாநில அரசுகள் தங்களது பல்கலைக்கழகத்தை தீவிரமாக கண்காணிப்பது மிக அவசியம். அதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்வி வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஏற்பட வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அனைவரும் தரமான கல்வி வழங்குகிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்வி. தரமான கல்வி வழங்கும் ஆசிரியர்களையும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நியமிப்பது சாத்தியமில்லை. எனவே, தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து அவர்களையும் தரமான கல்வி வழங்கும் வகையில் தகுதிப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து கல்வி கற்பதை வாழ்நாள் பணியாக நினைத்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களால் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியும். கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி, கருத்தரங்குகள் உட்பட ஏறத்தாழ 26 வகைகளில், நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கு யு.ஜி.சி., நிதி உதவி செய்கிறது. இவற்றை கல்வி நிறுவனங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திட்டங்கள் அனைத்தும் நல்ல நோக்கோடுதான் வரையப்படுகின்றன. அவற்றை சரியான முறையில் செயல்படுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் தான் தவறவிடப்படுகிறது.

ஒரு பல்கலைக்கழகம் நூறு கல்லூரிகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை குறைவால் இந்த விதிமுறை பல மாநிலங்களில் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. தர மதிப்பீட்டு முறைகள் பொறியியல், மருத்துவம், கல்வியியல், கலை மற்றும் அறிவியல் என கல்வி முறைகளுக்கு ஏற்ப அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய தர அங்கீகாரம் வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., எம்.சி.ஐ., என்.சி.டி.இ., நாக் போன்ற தர மதிப்பீட்டு அமைப்புகள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன.

எனினும், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் முறையாக ஆய்வு செய்து தர நிர்ணயம் செய்ய முடிவதில்லை. உதாரணமாக, இந்தியாவில் உள்ள 26 ஆயிரம் கல்லூரிகளில் 5 ஆயிரம் கல்வி நிறுவனங்களை நாக் இன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில், மத்திய அரசு தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் முறையான தர மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 254 (383 தனியார்) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 456 (431 தனியார்) பொறியியல் கல்லூரிகள், 366 (307 தனியார்) பாலிடெக்னிக் கல்லூரிகள், 650 (624 தனியார்) கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் இரண்டாயிரத்து 726 கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்து 745. நடப்பு ஆண்டின் அடிப்படையில், இவற்றில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 260 இடங்கள், பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 525 இடங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 406 இடங்கள் என ஆறு லட்சத்து 96 ஆயிரத்து 531 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர தகுதியானவர்களாக பிளஸ் 2 தேர்வில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 581 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,யில் மருத்துவம்
50 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், தொழில்நுட்ப கல்வி வழங்குவதில் மிகச் சிறந்த அனுபவம் பெற்று (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ஐ.ஐ.டி.க்கள் விளங்குகின்றன. தொழில்நுட்ப படிப்புகளை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் வேறு. மருத்துவப் படிப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் வேறு. இவற்றை சமாளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து மருத்துவப் படிப்புகளை வழங்குவதாக ஐ.ஐ.டி.க்கள் தெரிவித்துள்ளன. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களைக் பெற முடியுமேயானால், ஐ.ஐ.டி.க்கள் மருத்துவப் படிப்புகளை வழங்குவதில் தவறில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us