அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வு ஏ.ஐ.இ.இ.இ., | Kalvimalar - News

அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வு ஏ.ஐ.இ.இ.இ.,

எழுத்தின் அளவு :

நாடு தழுவிய பொறியியல் படிப்பு நிறுவனங்களின் தரத்தில் ஐ.ஐ.டி., களுக்கு அடுத்து வருபவை தேசிய தொழில் நுட்பக் கல்லூரிகள் (என்.ஐ.டி.எஸ்) பழையன 20ம், புதியன 10ம் ஆக மொத்தம் 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன. ஆண்டுதோறும் சி.பி.எஸ்.சி., நடத்தும் அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் (ஏ.ஐ.இ.இ.இ.,) மூலமாக மட்டுமே இவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

NITகள் தவிர, சில மாநிலங்களும், ஐ.ஐ.ஐ.டி.,க்களும், ஐ.ஐ.ஐ.டி.எம்.,கள் உள்ளிட்ட வேறு சில பொறியியல் கல்லூரிகளும், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இத்தேர்வைச் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. 2002ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இத்தேர்வை 2010ம் ஆண்டு 10,65,100 பேர்  எழுதினார்கள். துபாய், ரியாத் உள்ளிட்ட 86 நகரங்களில், 1,623 மையங்களில் தேர்வு நடந்தது. சேர்க்கைக்கு இருந்த இடங்கள்: பொறியியலுக்கு 26,816, ஆர்க்கிடெச்சர் வகைக்கு 936.

தேர்வுக்கு 2 தாள்கள் உண்டு. இரண்டும் பொதுவாக ஏப்ரல் மாத இறுதி ஞாயிறு அன்று நடத்தப்படும். அதன்படி இம்முறை தேர்வுநாள் 24.4.2011. இரண்டும் 3 மணி நேரத் தேர்வு. முதல் தாள் பி.இ.,/பி.டெக்., படிப்புகளுக்கு. தேர்வுப்பாடங்கள்: 11,12ம் வகுப்பு அளவில் கணக்கு, இயற்பியல், வேதியியல். தேர்வுநேரம்: காலை 9.30 மணி முதல் 12.30 வரை.

இரண்டாம் தாள் பி.ஆர்க்/பி.பிளான்/ பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி/ இன்டீரியர்  டிசைன் படிப்புகளுக்கு பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடத்தப்படும். இரண்டு தாள்களில்  ஒன்றையோ, இரண்டையுமோ, தேவைக்கு ஏற்றபடி எழுதலாம். பொறியியலுக்கான முதல் தாளை மட்டும் விரிவாகப் பார்க்கலாம்.

படிப்புத் தகுதிகள்
12ஆம் வகுப்பு (பொதுப்படிப்பு மட்டுமின்றித் தொழிற்படிப்பும் படித்திருக்கலாம்), இன்டர்மீடியேட், 3 அல்லது 4 ஆண்டு பட்டயப்படிப்பு, Joint Services Wing of National Defence Academy  படிப்பு, தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மேனிலைப் பள்ளித்தேர்வு, இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினால் ஏற்கப்பட்ட பிறநாட்டுப் படிப்புகள்.

தகுதிப்படிப்புக்கு இயற்பியல், கணக்கு கட்டாயமாகவும், அவற்றுடன் வேதியியல், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகியவற்றில் ஒன்றையும் படித்திருக்கவேண்டும். தகுதித்தேர்வில் தேறி இருந்தால் போதும் என்ற கட்டுப்பாடு மட்டும் இதுவரை இருந்தது.

இனி, தகுதித்தேர்வில் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 40 சதவீதத்துக்கும், பிறர் 50 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் எடுத்துத் தேறி இருக்கவேண்டும். தகுதித்தேர்வை, இந்த நுழைவுத்தேர்வு எழுதும் ஆண்டிலோ, அதற்கு முந்தைய 2 தொடர்ந்த ஆண்டுகளிலோ தேறி இருக்க வேண்டும். அதேபோல, நுழைவுத்தேர்வை எழுத 3 தொடர்ந்த ஆண்டுகளுக்கு மேல் அனுமதி இல்லை.

பாடதிட்டம்
தேர்வுக்கு விரிவான பாடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டும் மாற்றம் ஏதும் இல்லை. அகில இந்திய அடிப்படை என்பதால், எல்லா வகைப் படிப்புகளுக்கும் ஓரளவுக்குப் பொருந்துமாறு பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இக்காரணத்தால் எந்த ஒரு மாநிலப் பாடத்திட்டத்தோடும் இதன்பாடதிட்டம் முழுக்க ஒத்துப்போகாது. ஆகவே, எல்லா மாநில மாணவர்களும் சில வெவ்வேறு புதிய பகுதிகளைப் படிக்க வேண்டியிருக்கும். தவிர, பழைய வினாக்களின் தன்மைக்கு ஏற்ப, பாடப்பகுதிகளை ஒதுக்காமல், 11ம் வகுப்புப் பாடங்களையும் சேர்த்து, அதிக ஆழத்துடன் பயில வேண்டும்.

அறிமுகம்: ஆன்லைன் தேர்வு ஏ.ஐ.இ.இ.இ., 2011 நுழைவுத் தேர்வுக்கு, பொறியலுக்கான முதல் தாளுக்கு மட்டும், கணினி வழி விடையளிக்கும் நேர்வழித்தேர்வுக்கும் வழி செய்யப்பட்டுள்ளது. இதுதான் முதல் முறை என்பதாலும், இம்முறையில் பழக்கம் இல்லாமலோ, பழக முடியாமலோ போகக்கூடிய ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு மாணவர்கள் மிகுதியாக இருப்பார்கள் என்பதாலும், முதலில் விண்ணப்பிக்கும் ஒரு லட்சம் பேருக்கு மட்டும் இந்த நேரடித்தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள் பழைய பேனா முறையில்தான் தேர்வு எழுதுவார்கள்.

ஆன்லைன் தேர்வு இந்த ஆண்டு, சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட 20 நகரங்களில், நகரத்திற்கு 5,000 பேர் வீதம், குறிப்பிட்ட இடங்களில் தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்குத் தேர்வு கட்டணம் மட்டும்: ஆதிதிராவிடர்/ பழங்குடியினருககு ரூ.200, மற்றவர்களுக்கு ரூ.400. கூடுதலாக தொண்டு வரியும் உண்டு. இதற்கு விண்ணப்பித்தலையும் www.aieee.nic.in  என்ற வலைத்தளம் மூலமாக ஆன்லைனில்தான் செய்ய வேண்டும். கட்டணத்தை credit / Debit Card  வழியாக மட்டுமே செலுத்தமுடியும்.

நிறையும் குறையும்
தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டிய தூரமும் பயணச் செலவும் சிலருக்கு இதனால்  குறையலாம். தேர்வு நாளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஓரளவு சுதந்திரம் உண்டு. இவை ஆன்லைன் தேர்வின் முக்கிய வசதிகள். ஆன்லைனில் சில குறைகளும் உண்டு. ஆன்லைன் தேர்வு எழுதுபவர்கள் எல்லோருக்கும் அதே கேள்விகள் தர முடியாது; கூடாது.

பழைய முறைத் தேர்வில் எல்லோருக்கும் மொத்தத்தில் ஒரே கேள்வித்தாள் தான் (வரிசை மாற்றங்கள் இருக்கலாம் என்பதைத் தவிர). இதனால், ஆன்லைன் முறையில் சிலருக்கு எளிமையான வினாக்களும் சிலருக்குக் கடுமையான வினாக்களும் வரலாம். இந்தச் சீர்மையின்மை (Non Uniformity) ஆன்லைன் முறையின் தவிர்க்க முடியாத குறை.

இதற்கும் மேலாக, ஒரு பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையும், மற்றவர்களுக்கு மேற்சொன்ன குறை இல்லாத பழைய முறைத் தேர்வும் நடத்துவதில் இந்த பாகுபாடு மேலும் கூடுகிறது. தவிர, பேனாபேப்பர் தேர்வு ஒரு நேரத்தில் ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆன்லைன் தேர்வோ சில நாட்களாவது நடத்தப்படும். இவற்றில் எதையும் பின்னால் எழுதுபவர்களுக்கு, முன்பே நடந்த தேர்வுகளின் வினாக்கள் ஓரளவுக்கு உதவியாகத்தான் இருக்கும்.

இதற்காகவெல்லாம் ஆன்லைன் தேர்வை விட்டுவிட முடியாது. மாறாக, விரைவில், அடுத்த ஆண்டிலேயே ஆன்லைன் தேர்வை முழுமையாகச் செயல்படுத்துவது சில குறைகளைக் களையும். தவிர, நாடுமுழுவதும் பொறியியலுக்கு ஒரே நுழைவுத்தேர்வைக் கொண்டு வரும் நல்ல முயற்சி வெற்றி பெரும்பொழுது, ஏ.ஐ.இ.இ.இ., அதற்கான பொதுத்தேர்வாக இருக்குமானால் தேர்வெழுதும் மாணவர் கூட்டம் இன்னும் கூடும்; அதைச் சமாளிக்க ஆன்லைன் முறைதான் அதிகப் பொருத்தமாக இருக்கும்.

ஓர் ஆலோசனை
சென்னை ஐ.ஐ.டி.,யின்  Humanities & Social Sciences  படிப்புக்கு நடத்தப்படும் HSEE ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் பழக, (வலை: http://hsee.iitm.ac.in). ஆன்லைனில், மாதிரி நுழைவுத்தேர்வுகளுக்காக "Mouse Test&  ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்ற ஏற்பாடுகளை ஏ.ஐ.இ.இ.இ., தேர்வுக்கும், அதை நடத்தும் சி.பி.எஸ்.இ., செய்வது விரும்பத்தக்கது.

வினாத்தாள்
வினாப்புத்தகம் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று உட்பகுதிகளைக் கொண்டது. கடந்த இரு ஆண்டுகளில் பகுதிக்கு 30 வீதம் மொத்தம் 90 கேள்விகள் இருந்தன. எல்லாமே 4 விடைகள் கொண்ட அப்ஜெக்டிவ் வகை. ஒரே விடை தான் சரியாக இருக்கும்.

சரியான விடையை விடைத்தாளில் அதற்குரிய வட்டத்துக்குள், கருமை அல்லது நீல நிறத்தில் பால்பேனாவினால் மட்டுமே தீட்டிக்காட்ட
வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் 8 மதிப்பெண் வினாக்கள் 6; மற்ற 24 வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண். ஆக ஒரு பகுதிக்கு மொத்தம் 144 மதிப்பெண்; தாளுக்கு 144 X3 = 432 மதிப்பெண்.

கடந்த இருதேர்வுகள் கணிதப் பகுதியில் Assertion  Reason X வகை வினாக்கள் 5 இருந்தன. இயற்பியலில் அந்த வகையில் 2 வினாக்களும், Comprehension வகையில் 5 வினாக்களும். மற்றவை நேரடி வினாக்கள். தோராயமாக எழுதிப்பார்க்க (Rough Work), வினாப்பக்கங்கள் ஒவ்வொன்றின் அடிப்பகுதியிலும் 1215 செ.மீ. அகலத்திற்குக் காலியிடமும், வினாப்புத்தகத்தின் கடைசி 34 பக்கங்கள் முழுமையாகவும் ஒதுக்கப்படும்.

தாளுக்குள் குலுக்கல்
காப்பி அடிப்பதைத் தவிர்க்க, 4 வகைக்குக் குறையாமல், உள்ளடக்கம் மாற்றி அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரிசை மாற்றங்கள் 3 மட்டங்களில் செய்யப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முழுப்பிரிவுகளுமே வரிசை மாறுதல்; ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் வினா வரிசை மாற்றம்; ஒவ்வொரு வினாவுக்கும் தரப்பட்டுள்ள 4 விடைகளுக்குள்ளும் வரிசை மாற்றம்!

பாடப்பகுதி முக்கியத்துவம்
தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் பகுதிகளுக்கு வினாக்களில் தரப்பட்டுள்ள முக்கியத்துவம் எல்லா ஆண்டும் ஒரே மாதிரியாக இருக்காது. எல்லாப் பகுதிகளிலும் தயாரித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனாலும், மாதிரிக்குக் கடந்த ஆண்டு கணிதத்தில் தரப்பட்டிருந்த வினாக்களின் பாடதிட்டப் பகுதிவாரி எண்ணிக்கை பின்வருமாறு. Analytical Geometry:6; Functions, relations, sets, continuity, differentiability: 7; Probability & Statistics:3 ; matrices, Vectors, Progressions & Series, Integration & Application, Triognometry & Geometry: ஒவ்வொன்றிலும் 2; Complex numbers, Quadratic equations, System of linear equations, Differential equations: ஒவ்வொன்றிலும் 1.

சில முக்கிய விதிகள்
கேட்ட விவரங்களைத் தர மட்டுமின்றி, விடை தீட்டவும் பேனாவைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆகவே விடை தீட்டுவதில் எச்சரிக்கை தேவை. ஒரு முறை தீட்டியதை மாற்ற முடியாது. ஒரு கேள்விக்கு ஒரு வட்டத்துக்குமேல் தீட்டினால் விடை தவறு என்று கொள்ளப்படும். தவறான ஒவ்வொரு விடைக்கும், அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்ணில் 1/4 பகுதி கழிக்கப்படும்.

(1/3 பகுதி என்று இருப்பதுதான் சரி!) ஆகவே விடையை அனுமானிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேர்வறைக்கு 1 நிமிடம் தாமதித்து வந்தாலும் அனுமதி மறுக்கப்படும். வருகைப் பதிவேட்டில் தேர்வின் துவக்கத்திலும், முடிவிலும் கையெழுத்திடவேண்டும். இடதுகைப் பெருவிரல் அடையாளமும் பதிவு செய்யப்படும்.

பேரா. ப.வே.நவநீதகிருஷ்ணன்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us