வங்கி கடன் பெற்றால் அரியர்ஸ் வைக்க வேண்டாம் | Kalvimalar - News

வங்கி கடன் பெற்றால் அரியர்ஸ் வைக்க வேண்டாம்

எழுத்தின் அளவு :

வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் "அரியர்ஸ்" இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.

புதுச்சேரியில் தினமலர் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்விக் கடன் பெறுவது குறித்து, கரூர் வைஸ்யா வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசியதாவது: கல்விக்காக வங்கிகளில் கடன் வழங்கும் திட்டம் 2001ல் துவக்கப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் மற்றும் வெளி நாடுகளில் படிப்பதற்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. பொதுவாக, இளநிலை பட்டப் படிப்பிற்கு கல்விக் கடன் வழங்குவதை வங்கிகள் விரும்புவதில்லை. அதே வேளையில், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்விக்கும், மேல்நிலைக் கல்விக்கு கடன் வழங்குகின்றன. எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்., உள்ளிட்ட உயர் கல்விகளை வெளி நாடுகளில் படிக்க வங்கிகள் கடன் தருகின்றன. கல்விக் கடன் வழங்கும்போது, ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்துதான் வங்கிகள் பரிசீலனை செய்கின்றன.

கல்விக்கடன் பெறுவதற்கு, இந்தியக் குடியுரிமையும், கல்லூரியில் சேர்க்கை அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். கல்லூரிக்கான கல்விக் கட்டணம், லேப் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.

தேவைப்பட்டால் கம்ப்யூட்டர் வாங்குவதற்கும், கல்விச் சுற்றுலா, புராஜெக்ட் ஒர்க் உள்ளிட்ட செலவினங்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் சேர எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டு, உள்நாட்டில் பயில அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ. 20 லட்சமும் கல்விக் கடனாக தரப்படும். ரூ.4 லட்சம் வரை பெற்றோர் அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில், சொத்து ஜாமீன் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் தேவைப்பட்டால், சொத்து ஜாமீன் பெற்றுக் கொண்டே கல்விக் கடன் வழங்கப்படும்.

படிப்பை நிறைவு செய்து ஓராண்டுக்குப் பிறகு அல்லது, படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்த ஆறு மாதத்திற்கு பிறகு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். கல்விக் கடன் பெற்ற வங்கியில், ஒவ்வொரு செமஸ்டருக்குப் பிறகும் மாணவரின் தேர்ச்சி பற்றிய விபரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, தேர்வுகளில் "அரியர்ஸ்" இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்ற கடன்களைக் போல, கல்விக் கட்டணம் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பரிசீலனை கட்டணம் வசூல் செய்வது கிடையாது. 15 நாட்கள் முதல், ஒரு மாத காலத்திற்குள் கல்விக் கட்டண விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

கல்விக் கடன் பெற்றவர்களுக்கு, குடும்ப வருமானம் ரூ.4.50 லட்சத்திற்குள் இருந்தால் அரசின் மான்ய உதவி கிடைக்கும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என யோசிப்பதை விட, நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us