போட்டித் தேர்வில் பங்கேற்றால் ஐ.ஏ.எஸ். தேர்வு சுலபம் | Kalvimalar - News

போட்டித் தேர்வில் பங்கேற்றால் ஐ.ஏ.எஸ். தேர்வு சுலபம்

எழுத்தின் அளவு :

இந்திய அளவில் நடக்கும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வில் நான்கில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர் என மனிதநேய ஐ.ஏ.எஸ்.,அகாடமியை சேர்ந்த வல்லுனர் ராஜராஜன் பேசினார்.

புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வழிகாட்சி நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து மனிதநேய ஐ.ஏ.எஸ்.,அகாடமியை சேர்ந்த வல்லுனர் ராஜராஜன் பேசியதாவது: ராகுல்காந்தி ஒரு கூட்டத்தில் பேசும் போது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் கல்வியில் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், புதுச்சேரி மட்டும் 16 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என்றும் பேசியுள்ளார்.

இதிலிருந்து புதுச்சேரி எந்த அளவிற்கு கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிகிறது. பிளஸ் 2 படித்த போது தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் நானும் உங்களைப்போல கலந்து கொண்டேன். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு நானே தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இதற்காக நான் தினமலருக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளஸ் 2 விற்குப் பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க விரும்புகிறவர்கள் அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் அனைவரும் நாளிதழ்களை முழுமையாக படித்து உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் சிறந்து விளங்குவதற்கு முதலில் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

மெடிடேஷன் வேண்டும், குறிக்கோளுடன் படிக்க வேண்டும், கட்டுப்பாடு, நம்பிக்கை என அனைத்தும் இருந்தால் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிக்க முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்பை சிலர் கஷ்டம் என்று நினைக்கின்றனர். அது தவறு. ஈசியாக படிக்கலாம். தமிழில் அனைவரும் தேர்வு எழுதலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுதான் தேர்வு நடக்கிறது. இந்தப் பாடங்களில் நீங்கள்
தெளிவு பெறும் வகையில் படித்து விட்டால் தேர்வில் சுலமாக வெற்றி பெற்று விடலாம்.

இந்திய அளவில் நடக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,தேர்வில் வெற்றி பெறுபவர்களில் நான்கில்  ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன் மாணவர்கள் அதிக அளவில் போட்டித் தேர்வில் பங்கேற்று வந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு சுலபமாக
இருக்கும். இவ்வாறு ராஜராஜன் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us