வெளிநாட்டு பட்டம் பற்றி விழிப்புடன் இருங்கள்! | Kalvimalar - News

வெளிநாட்டு பட்டம் பற்றி விழிப்புடன் இருங்கள்! ஏப்ரல் 26,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் விரும்பும் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு நீங்கள் செலவழிக்கும் பணம் மற்றும் காலம் ஆகியவற்றோடு, அந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து முறையான அங்கீகரிப்பையும் சான்றையும் பெற்றுள்ளதா என்று உறுதி செய்வது மிக மிக முக்கியமானது. அதன்பொருட்டு நீங்கள் பெறக்கூடிய பட்டத்தின் தரம் மற்றும் மதிப்பு பற்றி அளவிட இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றை நினைவில் வைப்பது அவசியம்.

பரஸ்பர ஒப்பந்தம்:

நீங்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு தேர்வுசெய்யும் ஒரு பல்கலைக்கழகம், இந்திய பல்கலைக்கழகங்களுடன், பட்டங்களை மதிப்பிடும் பொருட்டு இருதரப்பு ஒப்பந்தம் எதுவும் செய்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் தேர்வு செய்யும் பல்கலைக்கழகம், இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் வைத்திருந்தால் மிகவும் நல்லது.

கல்வி நிறுவனத்தின் மதிப்பு:

நீங்கள் வாங்கும் பட்டத்தின் மதிப்பானது, அதை வழங்கும் பல்கலைக்கழகத்தின் பெயரையும் புகழையும் சார்ந்தது. ஆக்ஸ்போர்ட் மற்றும் ஹாவர்ட் போன்ற உலகின் பெரும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் தனி மதிப்பை கொண்டவை. அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நம்பக சான்றுகள் தேவையில்லை.

இசைவு ஒப்பந்தங்கள்:

போலோக்னா உடன்படிக்கையானது, ஐரோப்பிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் அக்கண்டத்து நாடுகள் அனைத்திலும் செல்லுபடியாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த நாடுகள் அனைத்தும் இந்த உடன்படிக்கையின் உறுப்பினர்கள். அதேபோன்று வாஷிங்டன் உடன்படிக்கையானது குறைந்தது எட்டு நாடுகள் தத்தமது கல்வி நிறுவனங்களின் பட்டங்களை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நாடுகள் இந்த உடன்படிக்கையின் உறுப்பினர்கள். இந்தியா இதுபோன்ற ஒரு உடன்படிக்கையில் இன்னும் முழு உரிமையுள்ள உறுப்பினராக ஆகவில்லை.

நற்சான்றுகள்:

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம், அந்நாட்டு மற்றும் வெளிநாட்டு சான்றளிப்பு முகமைகளால்(ஏஜென்சி) சான்றளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

இந்தியா பல்கலைக்கழகங்கள் அமைப்பின் பங்களிப்பு:

இந்த அமைப்பானது வெளிநாட்டு பட்டங்களுக்கு மதிப்பு சான்றிதழ் வழங்குகிறது. இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பார் கவுன்சில் போன்ற அமைப்புகள் தங்களுக்கென தனித்தனி மதிப்பீடு அமைப்புகளை கொண்டுள்ளன. எனவே நீங்கள் வெளிநாட்டில் படித்து மீண்டும் இந்தியா திரும்பி வந்து பயிற்சிபெற விரும்பினால், வெளிநாட்டில் நீங்கள் குறிப்பிட்ட தொழில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக இந்தியாவில் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் விரிவாக விவாதிக்கவும்.

கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம்:

ஒரு கல்வி நிறுவனம் நீண்டகால அளவில் அங்கீகாரம் பெற்று, தனது அங்கீகாரத்தை எப்போதும் இழந்திராத ஒன்றாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சில், யுஎஸ்ஐஇஎப், ஆஸ்திரேலியன் ஹை கமிஷன் ஆகியவை மூலம் ஒரு கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம், தரம் போன்றவற்றை இலவசமாகவே அறிந்துகொள்ள முடியும்.

படிப்பு செலவு:

ஒரு படிப்பிற்கு உலகின் பல பல்கலைக்கழகங்கள் 10000௦௦௦௦ அமரிக்க டாலர்களை கட்டணமாக வசூலிக்கையில், ஒரு பல்கலைக்கழகம் மட்டும் அதே படிப்பிற்கு 2000 அமெரிக்க டாலர்களையே கட்டணமாக வசூலித்தால் நாம் அதைப்பற்றி யோசித்து, அதன் தரத்தை சந்தேகப்படுகிறோம், ஏன்? துரதிஷ்டவசமாக, கல்வியின் தரம் அதற்கான கட்டணத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது. சில இடங்களில் தரம் மற்றும் உண்மை தன்மை பற்றி அதிகம் பேசப்பட்டால், பொதுவாக அங்கே அவை இருக்காது.

படிப்பிற்கான காலம்:

ஒரு இளங்கலை படிப்பை முடிக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் 4 வருடங்கள் எடுத்துக்கொண்டால், அதே படிப்பை முடிக்க பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் 3 வருடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இது உலக அளவில் தெரிந்த விஷயமே. அதேசமயத்தில் ஒரு வருட இளங்கலை படிப்பு பற்றி செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரம் வந்தால், அது சம்பந்தமாக நன்கு விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது ஒரு முறையான அங்கீகாரமற்ற பல்கலைக்கழகமாக கூட இருக்கலாம்.

இந்த விவரங்களை படித்தப் பிறகு, வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்பாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும். எனவே விழிப்புடன் இருந்தால் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us