சாதனை படைக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகுங்கள் | Kalvimalar - News

சாதனை படைக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகுங்கள்

எழுத்தின் அளவு :

தினமலர் நாளிதழ்  திருப்பூரில் நடத்தும்  வழிகாட்டி நிகழ்ச்சியில், எதிர்காலத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., பணிகள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார்.

அவர் வழங்கிய ஆலோசனை : வாழ்க்கையில் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது முக்கியமான கட்டம்; திருப்புமுனையும் ஏற்படுத்தும்.  இன்று நீங்கள் எடுக்கும் முடிவும், வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இன்றைய தினம் பனியன் கம்பெனிகளில் நல்ல கட்டர் இல்லை; படித்த டிரைவர் இல்லை; விவசாயி இல்லை; நல்ல பைலட் இல்லை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் ஊதியம் தர நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அதற்கான தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சென்னையில் படித்து வளர்ந்த பெண் இந்திரா நூயி என்பவர், இன்று ரூ.77 கோடி ஊதியம் பெறுகிறார்.

இந்திய விமான நிறுவனங்களில் 6,000 பைலட் தேவை இருக்கிறது. இந்தியாவில், ஐந்து லட்சம் கணக்காளர் தேவையிருக்கிறது. ராணுவத்தில் உயரதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளன. அதை தேடி நீங்கள் ஓட வேண்டும். இந்திய பல்கலை சார்ந்த இன்ஜி., கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களில் 90 சதவீதம் பேர், நிறுவனங்களில் பணியாற்ற தகுதியானவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதில்லை. கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 80 சதவீத மாணவர்களின் நிலையும் இதுவே. வேலையில் ஈடுபடுத்திக் கொள்வது குறித்து, முறையான பயிற்சி இல்லாததே இதற்கு காரணம்.

எந்த கல்லூரியில், எந்த பாடத்தை படித்தாலும் அதில் வல்லுனராக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்காத படிப்பை படிக்க வேண்டாம். கல்லூரிகளில் படிப்பது வேலை வாங்குவதற்கு இல்லை; பிறருக்கு வேலை கொடுப்பததாக இருக்க வேண்டும். பெரிதாக ஆசைப்பட வேண்டும்; உங்கள் பெற்றோர் நான்கு ஆண்டுக்கு ஏழு லட்சம் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள்; சராசரியாக ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.

உங்களுக்கு பணம் வேண்டுமா, புகழ் வேண்டுமா, பதவி வேண்டுமா, சேவை செய்ய வேண்டுமா என சிந்தியுங்கள். சாதனை படைத்து, மக்கள் மத்தியில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அங்கீகாரம் பெற வேண்டும் என நினைத்தால், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.ஏ.எஸ்.,   ஐ.பி.எஸ்., ஆகுங்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் 22 விதமான பணிகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். சிவில் சர்வீஸ் தேர்வு என்பது ஒரு போட்டி தேர்வு. அத்தேர்வு எழுத இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி.,  எஸ்.டி.,  ஓ.பி.சி., பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

மூன்று கட்டமாக தேர்வு நடத்தப்படும்; முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், பொது அறிவு, ஆங்கில அறிவு, தேர்ந்தெடுக்கும் இரண்டு பாடங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலைகளில் தேர்வு பெற்றாலும், 300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் நேர்காணலில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நமக்குள் எல்லையற்ற திறன்கள் உள்ளன. அதை வென்றெடுங்கள்! இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us