வானியல் சாஸ்திர ஆராய்ச்சி படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் | Kalvimalar - News

வானியல் சாஸ்திர ஆராய்ச்சி படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும்

எழுத்தின் அளவு :

வானியல் சாஸ்திர ஆராய்ச்சி படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் என நெல்லை அறிவியல் மையத்தில் நடந்த கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பி தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் கோடை கால அறிவியல் முகாம் கடந்த ஏப்ரல் 25ம்தேதி முதல் 7ம்தேதி வரை நடந்தது. இதில் நெல்லை, தூத்துடிக்கு மாவட்டங்களை சேர்ந்த 96 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். இப்பயிற்சி முகாமின் நிறைவு விழா மாவட்ட மைய அறிவியல் மைய கட்டடத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பி தலைமை வகித்து பேசியதாவது;

இக் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கோடை கால பயிற்சி முகாம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விடுமுறை நாளில் மாணவர்களுக்கு பயனுள்ள முறையில் கடந்த 2 வாரங்களாக சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்காது.

இதில் வானியல் சாஸ்திரம் தொடர்பான பயிற்சியில் 27 பேர் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த நவீன உபகரணங்களும் இல்லாத பழங்காலத்தில் இந்தியர்கள் வானியல் சாஸ்திர ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர். இந்த துறையை மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. வானியல் சாஸ்திர ஆராய்ச்சி தொடர்பான படிப்பு புனேயில் உள்ள தேசிய வானியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம். அதிக வேலைவாய்ப்பு உள்ள இந்த படிப்பில் மாணவர்கள் ஆர்வத்தில் ஈடுபட முன் வரவேண்டும். வேதியியல் துறை தொடர்பான ஆராய்ச்சி படிப்புகள் புனேவில் உள்ள தேசிய கெமிக்கல் ஆய்வு கூடத்தில் படிக்க முடியும்.

அதுபோல் எலக்ட்ரானிக் துறையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவதுறை உட்பட அனைத்து துறைகளிலும் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இத்துறையில் செல்ல விரும்பும் மாணவர்கள் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்வி பயின்று பயன் பெறலாம். இவ்வாறு ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பி கூறினார். முன்னதாக நெல்லை மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர் ஜெபராஜ் சாமுவேல் வரவேற்றார்.

பயிற்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய பொருட்களின் செயல்முறை விளக்கத்தை ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பியிடம் விளக்கி கூறினர். இதனையத்து பயிற்சி பெற்ற 96 மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட அறிவியல் மைய உதவியாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us