‘வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த வேண்டும்’ | Kalvimalar - News

‘வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த வேண்டும்’

எழுத்தின் அளவு :

நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவர் லோகநாதன் அளித்த பேட்டி:

இன்றைய இளம் தலைமுறையினரிடையே சிந்தனைத்திறன் குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வாசிக்கும் பழக்கம் குறைந்ததே. மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமல்லாமல், அனைத்துவிதமான புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். தங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டுவிட்டார்களே என்று கண்மூடித்தனமாக எதனையும் ஆதரிக்கக்கூடாது. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பயப்படுபவர்களாக இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. படிப்பினை தேர்ந்தெடுக்கும்பொழுது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் தெளிவு வேண்டும்.

எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தாலும் தகவல் தொடர்புத்திறனும், அடிப்படைக் கணித அறிவும் தேவை. மனம் உற்சாகமாக செயல்பட விளையாட்டும் அவசியம். வேலைவாய்ப்பினை பெறுவது மாணவரின் தனிப்பட்ட திறன் சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. தான் வேலை தேடுவதா அல்லது வேலை கொடுக்கும் தொழில் முனைவொராக உருவாவதா என்பதனை மாணவனே முடிவு செய்ய வேண்டும்.

தற்பொழுது அரசின் சலுகைகள் அதிக அளவில் பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்கிறது. கலை அறிவியல் படிப்புகளும் எல்லா காலத்திலும் தனித்துவத்தோடு விளங்கி வருகிறது. வணிகவியல் படிப்புகளுக்கான தேவையும், மாணவர்களிடையே உள்ள ஈர்ப்பும் குறையாமல் இருக்கிறது.

அதிக அளவில் கல்லூரிகள் இருந்தாலும், தரம்வாய்ந்த கல்லூரிகள் குறைவாக இருப்பதனால் மாணவர்களிடையே வெளிநாட்டிற்கு சென்று படிப்பதில் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலை மாறுவதற்கு ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்கு கல்லூரிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனை பெற்றுக்கொள்வதில் தான் பின்தங்கி இருக்கிறோம். திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வத்தை செலுத்த வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us