‘லாபநோக்கமின்றி அரசாங்கம் செயல்பட வேண்டும்’ | Kalvimalar - News

‘லாபநோக்கமின்றி அரசாங்கம் செயல்பட வேண்டும்’

எழுத்தின் அளவு :

மாதா கல்வி நிறுவனங்களின் தலைவர் பீட்டர் அளித்த பேட்டி:

நான் படித்த காலத்தில் நாட்டில் குறைவான கல்லூரிகளே இருந்தன. அதிலும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் கலைப் பிரிவில் சேர்ந்து படித்தேன். பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாக செயல்பட்டத்தை அடுத்து, கல்வி நிறுவனத்தை துவக்க நினைத்தேன். அதன்படி, பொறியியல், பிசியோதெரபி கல்லூரிகளை முதலில் ஆரம்பித்தேன். தற்போது பள்ளிகள், மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், பல் மருத்துவம், நர்சிங், ஆசிரியர் பயிற்சி, கல்வியியல், கலை மற்றும் அறிவியல் ஆகிய படிப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனங்களாக மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.

கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களே அதிகளவில் எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கின்றனர். கல்வி நிறுவனத்தின் தரத்தை மென்மேலும் அதிகரித்து, அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.

இன்றைய மாணவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்குகின்றனர். படித்தவுடன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை பெற்று, எந்த சிரமமும் படாமல் சொகுசாக வாழவே விரும்புகின்றனர். சுயமாக தொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் தொழில்முனைவோராகி சாதிக்க வேண்டும்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கல்லூரிகளின் தேர்ச்சி குறித்த பட்டியலை வைத்து மட்டுமே கல்லூரியை மதிப்பிட முடியாது. வெறும் 100 மாணவர்களைக் கொண்ட புதிய கல்லூரியில் 90 பேர் தேர்ச்சி பெற்றாலே அந்த கல்லூரி 90 சதவீத தேர்ச்சி பெற்றதாக முன்னிலையில் இருக்கும். எனவே, ஒரு கல்லூரியின் தரம், அதன் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள், பிற திறன் வளர்க்கும் பயிற்சிகள் உள்ளிட்டவைகளையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும்.

பாடத்திட்டத்துடன் விளையாட்டு, சிறந்த பண்பாடு, தன்னம்பிக்கை, தனித்திறன் ஆகியற்றிற்கும் கல்லூரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்கள் பொதுவாக அறிவாளியாக இருக்கும் அதேபட்சத்தில் சுயநலமில்லாமல், சமுதாய நோக்கோடு செயல்பட வேண்டும். அரசும் லாபநோக்கமின்றி செயல்பட வேண்டும். மாணவர்களிடம் சிறந்த ஒழுக்கம், பண்பாடு காக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுக்கடையை அமைக்கக்கூடாது.

பிசியோதெரபி, ஆர்த்தோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண கிராமப்புறங்களில் மருத்துவ மையத்தை உருவாக்கி அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். அப்போது வேலை வாய்ப்பும் பெருகும், கிராமப்புற மக்களின் உடல் நலமும் பாதுகாக்கப்படும். பயோடெக்னாலஜி படித்தவர்களுக்கு இந்தியாவில் உரிய மதிப்பில்லை. ஆனால், அவர்களுக்கு சிங்கப்பூர், அமெரிக்க உட்பட வெளிநாடுகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us