பிரச்னைகளை காதுகொடுத்து கேளுங்கள்! | Kalvimalar - News

பிரச்னைகளை காதுகொடுத்து கேளுங்கள்!

எழுத்தின் அளவு :

எந்த பிரச்னையிலும் உறவு முறை தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. தங்களது கவலைகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் வீட்டில் பெற்றோர், சகோதர, சகோதரிகள் அல்லது அலுவலகத்தில் சக பணியாளர்கள் ஆதரவாக இருந்தாலே எதுவுமே பிரச்னையாக இருக்காது. ஒருவருக்கு உரிய ஆதரவு இருக்கும்பட்சத்தில் அவரால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆதரவுக்கரங்கள் இல்லாதபோது தான் சிறிய பிரச்னை கூட பிரம்மாண்டமானதாக தோன்றும்.

அதேபோல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு மகிழ்வான இடமாக அது அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கு ஏற்ற சூழல் அமைந்துவிட்டால் எதுவும் பிரச்னையாக இருக்காது. அவ்வாறு இல்லையென்றால் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தவறான முடிவுக்குகூட சென்றுவிடுகின்றனர்.

ஒரு பள்ளியில், 11 வயது மாணவி அவளது தோழியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். தோழி அவளது நிறத்தையும், பருமனான உடல் அமைப்பையும் கிண்டல் செய்யும் வகையில் பேசுகிறாள். அதனால் அந்த மாணவி மனம் நொடிந்து அழதுகொண்டிருக்கிறாள். சக மாணவிகள் அவளிடம் அழுவதற்கான காரணத்தை கேட்கிறார்கள்.

இந்த வருத்தத்தில் இருந்து வெளிவரும் நோக்கில், அந்த மாணவி ஆசிரியரிடம் சென்று, ‘டீச்சர், அவள் என்னுடன் விளையாட மறுக்கிறாள்’ என்று மட்டும் பொதுவாக கூறி முறையிடுகிறாள். அதற்கு அவளது தோழி அவளை கிண்டல் செய்த, அதே மனதை வருத்தும் வார்த்தைகளை அனைத்து மாணவிகள் முன்னிலையில் கூறி ‘அதனால், நீ என்னுடன் விளையாடதே’ என்கிறாள்.

இதனால், மேலும் மனம் நொந்து போகும் மாணவி, அந்த சூழல் இருந்து வெளியே வரத்தெரியாமல், இறுதியில் தவறான முடிவு எடுக்கிறாள். ஆசிரியரும் உரிய மதிப்பளித்து பிரச்னையை கேட்காததால், அவள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாள். இது மிகவும் வருந்ததக்க சம்பவம். அந்த மாணவி வகுப்பிலேயே இரண்டாவது ரேங்க் எடுப்பவள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் சுமூகமான உறவை பேணவே விரும்புகின்றனர். ஆனால், ஒருவர் உங்களை எரிச்சல் அடையும் வகையில் தாக்கி பேசும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? பொதுவாக, அந்த கோபத்தை அம்மா, அப்பா உட்பட நீங்கள் அதிக உரிமை செலுத்துபவர்கள் மீது காண்பிப்பீர்கள். அதுபோலத்தான் பெற்றோரும் தங்களது கோபத்தை குழந்தைகளிடம் காண்பிக்கிறார்கள்.

எந்த ஒரு பிரச்னையையும், பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, அவற்றை காது கொடுத்து கேட்க வேண்டும். எந்தவித ஆறிவுரையும் கூறக்கூடாது. ஆறிவுரை கூறுவது எளிது; அதை கடைபிடிப்பது தான் கடினம். எத்தனைமுறை ஒரே பிரச்னையை ஒருவர் கூறினாலும், காது கொடுத்து கேளுங்கள். அதுவே அந்த சூழ்நிலை அல்லது பிரச்னையில் இருந்து அவர்கள் வெளி வருவதற்கான சரியான தீர்வு.

-இன்பா சுப்ரமணியன், உளவியலாளர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us